Published : 19 Oct 2015 11:38 AM
Last Updated : 19 Oct 2015 11:38 AM

ஒப்பந்தப் போர்!

கடந்த மாதம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்திலிருந்து ஆஸ்ட்ரோசாட் பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்த நிகழ்வை டி.வி.யில் கண்டவர்கள் அதிகம். வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ் ஞானிகளை குடியரசுத் தலைவர், பிரதமர் என அனைவரும் பாராட்டினர்.

அடுத்த இரண்டு நாள்களிலேயே சர்வதேச நீதிமன்ற தீர்ப்பாயம் ரூ. 4,432 கோடி தொகையை அபராதமாக விதித்து ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்திய மகிழ்ச்சியை சின்னாபின்னமாக சிதைத்துவிட்டது. ஒரு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால் இந்த அளவுக்கு அதிக தொகை அபராதமாக விதிக்கப் பட்டுள்ளது.

வெறுமனே ராக்கெட் செலுத்துவது, அதை வெற்றிகரமாக நிலைநிறுத்துவது என்றிருந்த வரையில் அது சாதாரண பக்க செய்தி. இதில் கோடிக்கணக்கில் பணம் புரளும்போதுதான் அது வர்த்தக முக்கியத்துவம் பெறுகிறது. அந்த வகையில் இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை ஆராய வேண்டியதும் அவசியமாகிவிட்டது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) வர்த்தக பிரிவுதான் ஆண்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன். (அந்தரிக்ஷா என்பதன் சுருக்கம் சமஸ்கிருதத்தில் இதற்கு விண்வெளி என்று பொருள்) பொதுத்துறை நிறுவனமாக செயல்படும் இந்த நிறுவனம் இஸ்ரோவின் வர்த்தக நடவடிக்கைகளை கவனிக்கிறது. பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம் 1992-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.

பிற நாடுகளுக்கு செயற்கைக் கோள்களை ஒப்பந்த அடிப்படையில் ஏவுவது, நிர்வகிப்பது உள்ளிட்ட பணிகளை இந்நிறுவனம் மேற்கொள் ளும். இஸ்ரோவின் சந்தைப் பிரிவு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிறுவனமாக ஆண்ட்ரிக்ஸ் செயல்பட்டு வருகிறது. அரசின் மினி ரத்னா நிறுவனமாக செயல்படும் இந்நிறுவ னத்தின் வருமானம் ரூ. 1,300 கோடி.

2005-ம் ஆண்டு ஜனவரி மாதம் தேவஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தை ஆண்ட்ரிக்ஸ் செய்து கொண்டது. பெங்களூரில் செயல்படும் தேவஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தில் டாயிஷ் டெலிகாம் ஏஜி நிறுவனம், அமெரிக்க முதலீட்டு நிறுவனமான கொலம்பியா எல்எல்சி மற்றும் டெலிகான் வென்ச்சர்ஸ் எல்எல்சி ஆகிய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

இந்த ஒப்பந்தத்தின்படி 2 செயற்கைக் கோள்கள் மூலம் 70 மெகாஹெர்ட்ஸ் எஸ்பேண்ட் அலைக்கற்றையை ஆண்ட்ரிக்ஸ் நிறுவனம் தேவஸ் நிறுவனத்துக்கு அளிக்க வேண்டும். 30 கோடி டாலர் அடிப்படையிலான இந்த ஒப்பந்தப்படி 12 ஆண்டுகளுக்கு இந்த சேவையை அளிக்க வேண்டும் என விதிமுறைகள்படி ஒப்பந்தம் போடப்பட்டது. தேவைப்படும்பட்சத்தில் மேலும் 12 ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும் ஒப்பந்த விதி இடமளித்தது. தொலைத் தொடர்பு சேவைக்கு அலைக்கற்றையை செயற்கைக் கோள் மூலம் பெற்று அதைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.

ஆனால் 2011-ம் ஆண்டு இந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்தது. அப்போதுதான் 2-ஜி அலைக்கற்றை ஊழல் நாட்டையே உலுக்கியெடுத்தது. அலைக்கற்றையை அளிக்க முடியாது என்றும் அலைக்கற்றை பொது பணிகளுக்கு தேவைப்படுவதாக அரசு தெரிவித்தது.

அலைக்கற்றை முறைகேட்டில் முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அலைகற்றை ஒதுக்கீடு செய்ததாகக் கூறப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே ஆண்ட்ரிக்ஸ்-தேவஸ் ஒப்பந்தத்திலும் முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் அலைக் கற்றை ஒதுக்கப்பட்டிருந்தது.

ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தேவஸ் நிறுவனம் சர்வதேச நீதிமன்ற தீர்ப்பாயத்தை அணுகியது. கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த மாத இறுதியில் இடியென இஸ்ரோவுக்கு இறங்கியது. இதன்படி 67.20 கோடி டாலரை அபராதமாக இஸ்ரோ அளிக்க வேண்டுமென உத்தரவிட்டது சர்வதேச நீதிமன்ற தீர்ப்பாயம். அத்துடன் 18 சதவீத வட்டியுடன் இத்தொகையை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

ஒப்பந்தம் ரத்து செய்வது என்ற முடிவை முந்தைய அரசு அவசர கதியில் எடுத்ததால் இப்போது இழப்பீடாக ரூ.4,432 கோடி தொகையை வட்டியுடன் தர வேண்டியுள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும் தனியார் முதலீடுகளை ஈர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டும் தற்போதைய மோடி தலைமையிலான அரசு இந்த விஷயத்திலிருந்து பாடம் கற்க வேண்டும். இந்த வழக்கை ஆண்ட்ரிக்ஸ் சர்வதேச நீதிமன்ற தீர்ப்பாயத்தில் வெகு அசிரத்தையாக கையாண்டதன் விளைவுதான் இது.

ஒப்பந்தங்கள் வெளிப்படையானதாக இருக்கவேண்டும், பரஸ்பரம் நம்பகத்தன் மையை ஏற்படுத்தக் கூடியதாக ``ஃபுல் புரூப்” என்ற வகையில் இருக்கவேண்டும்.

வளர்ச்சிக்கு ஒப்பந்தம் வேண்டும். அதை ரத்து செய்வதற்கு போதிய காரணம் இருக்க வேண்டும். எடுத்தேன், கவிழ்த்தேன் என்றோ அரசியல் காரணங்களுக்கோ ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டால் நம் நாட்டின் மீதான குறிப்பாக இஸ்ரோ போன்ற நிறுவனங்கள் மீதான நம்பகத்தன்மை குறையும். இதுபோன்ற இழப்பீடுகளை தொடர்ந்து செலுத்திக் கொண்டுதானிருக்க வேண்டி யிருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x