Published : 12 Oct 2015 10:20 AM
Last Updated : 12 Oct 2015 10:20 AM

உன்னால் முடியும்: நூறு சதவீத முயற்சி வேண்டும்

காரைக்குடியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். பல தொழில்கள், பல நஷ்டங்களுக்குப் பிறகு செய்ய ஆரம்பித்த தொழில் காக்கி கவர் தயாரிப்பு. மருந்து பொருட்களை பேக் செய்து தரும் இந்த கவர்கள் தயாரிப்பில் என்ன வருமானம் கிடைக்கும் என யோசிக்காமல், இந்த தொழிலில் நிரந்தர இடத்தை உருவாக்க வேண்டும் என தீவிரமாக உழைத்து இன்று தொழில் முனைவோராக வளர்ந்து நிற்கிறார்.

காரைக்குடியில் இருந்து சென்னை வரை தனது தயாரிப்புகளை அனுப்பி வைக்கும் இவரது தொழில் அனுபவத்தை இந்த வாரம் ``வணிகவீதி’’ வாசகர்களுக்கு பகிர்ந்து கொண்டதிலிருந்து...

மதுரையில் படித்தேன். படித்து முடித்ததிலிருந்து பல்வேறு வேலைகள். ஆனால் எதிலும் நிலைக்கவில்லை.

இதனால் நிரந்தர வருமானம் இல்லாமல் சிரமப்பட்டு வந்தேன். இடையில் சிங்கப்பூருக்கும் வேலை தேடி சென்றேன். அங்கும் எந்த வேலையும் செட் ஆகவில்லை. இதனால் பல வகையிலும் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. சிங்கப்பூரிலிருந்து திரும்ப ஊருக்கு வந்து சொந்தமாக தொழில் தொடங்க முயற்சித்தேன்.

எனது சித்தப்பாவின் மகன் இது போன்ற ஒரு கவர் தயாரிக்கும் அச்சகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவரது முதலாளி நிறுவனத்தை சரிவர நிர்வகித்ததால் அங்கு வேலை பார்ப் பவர்களுக்கு சரியாக கூலி கூட கொடுக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தார்.

இதை என்னிடம் தெரிவித்தவர், இந்த தொழிலை சரியாக செய்தால் சம்பாதிக்க முடியும் என்றார். எனக்கும் அந்த யோசனை சரியென தோன்றியது. உடனடியாக இந்த தொழில் குறித்து தெரிந்து கொள்வ தற்காக பல இடங்களுக்கும் சென்று வந்தேன்.

இதற்கிடையே இதன் தயாரிப்பு இயந் திரத்துக்கான ஆப்பரேட்டர்கள் மற்றும் வேலைபார்க்க நான்குபேர் என பணியாளர்களை அமர்த்திக் கொண்டு இரண்டு லட்சத்தில் 2 இயந்திரங்கள் போட்டு தொழிலை தொடங்கிவிட்டேன்.

அந்த பணியாளர்கள் மூலமே இதற்கான சந்தை, மூலப்பொருட்கள் கிடைப்பது குறித்த விவரங்களை தெரிந்து கொண்டேன். இப்போது தொழிலை தீவிரமாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தது. ஏனென்றால் அந்த தொழில் குறித்து அதுவரை எனக்கு எதுவும் தெரியாது.

லாப நட்ட விவரத்தைக்கூட பார்த்து விடலாம் ஆனால் தொழிலில் என்ன பிராசஸிங் வேலைகள் இருக்கிறது என்பதை தெரியாமல் இறங்கி இருக்கிறோம் என்பதால் முதலில் பணியாளர்களோடு சேர்ந்து ஒவ்வொரு வேலையாக கற்றுக் கொண்டேன். அவர்கள் இல்லாதபோது இயந்திரத்தை ஓட்டிப்பார்ப்பேன்.

மூலப்பொருட்களை உடுமலைப்பேட்டை பகுதியில்தான் வாங்க முடியும். தயாரிப்பு நிறுவனங்கள் குறைவான ஜிஎஸ்எம் கொண்ட பேப்பரை மாதத்துக்கு ஒரு முறைதான் தயாரிப்பார்கள் அதனால் அவர்கள் சொல்லும் நாட்களில்தான் வாங்க முடியும். இல்லையென்றால் கிடைக்காது.

அதுபோல, நமது தயாரிப்பு பிளாஸ்டிக் பயன்படுத்துவதை குறைக்கும் பொருட்டு என்பதால், இதற்கு எங்கு வாய்ப்புகள் உள்ளது என்பதை தேடுவதும் வேலையாக வைத்துக் கொண்டேன்.

ஒரு முறை பத்திரிகை செய்தி வாயிலாக தமிழ்நாட்டின் ஒரு முக்கிய ஊரில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை என்கிற செய்தியை படித்துவிட்டு அந்த ஊருக்குச் சென்று அங்குள்ள ஒரு ஆலயத் தின் தேவைக்காக ஆர்டரை பிடித்து வந்தேன்.

அதுபோல எந்த கவர், யாருக்கு எத்தனை ஜிஎஸ்எம் அளவில் தயாரிக்க வேண்டும் என்பதும் தொழிலை தொடங்கிய பிறகு கிடைத்த அனுபவத்திலிருந்துதான் கற்றுக்கொண்டேன்.

இதனால் ஆரம்பத்தில் விலையையும் சரியாக நிர்ணயிக்க தெரியாது. பிறரை விட விலை குறைவாக இருப்பதால் ஆர்டர் கிடைத்துவிடும். ஆனால் லாபம் நிற்காது. இரண்டாவது குறிப்பிட்ட நேரத்துக்கு சப்ளை செய்துவிட வேண்டும். ஜிஎஸ்எம் குறித்த புரிதல் பிடிபட்ட பிறகுதான் விலையை நிர்ணயம் செய்வதிலும் ஒரு தெளிவு ஏற்பட்டது.

இதுபோல தொழிலில் ஒவ்வொரு விஷயத்தையும் தெரிந்துகொள்ள சுமார் இரண்டு ஆண்டுகள் ஆனது.

தொழிலை தொடங்கிய இந்த பனிரெண்டு ஆண்டுகளில் இரண்டு இயந்திரம் ஆறு இயந்திரங்களாக வளர்ந்துள்ளது. பனிரெண்டு நபர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்துள்ளேன். மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர் என பல மாவட்டங்களுக்கும் காக்கி கவர்களை சப்ளை செய்து வருகிறேன். சென்னையின் முக்கியமான மருந்து விற்பனை சில்லரை தொடர் கடைகளுக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறேன். வாடகைக் கட்டிடத்தில் இயங்கிக் கொண்டிருந்த தொழிலகம் இன்று சொந்த கட்டிடத்தில் இயங்குகிறது.

வாழ்க்கையில் வெற்றிபெற பல வழிகளில் முயற்சித்தாலும், இதுதான் நமது அடையாளம், வாழ்க்கை, வருமானம் என்று முடிவு செய்த பிறகு அதில் நூறு சதவீத உழைப்பும் முனைப்பும் காட்ட வேண்டும் என்பதுதான் எனது அனுபவத்தில் இருந்து நான் கற்றுக் கொண்ட பாடம்.

- நீரை மகேந்திரன்,
maheswaran.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x