Published : 16 Nov 2020 10:23 AM
Last Updated : 16 Nov 2020 10:23 AM

பிரபலங்களால் பெயரிழக்கும் பிராண்டுகள்

satheeshkrishnamurthy@gmail.com

இந்தியாவில் தியேட்டர்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திறக்கப்பட்டிருந்தாலும், தியேட்டரே தேவையில்லை என்ற அளவில் தினமும் நியூஸ் பேப்பர்கள், செய்தி சேனல்கள் முதல் சோஷியல் மீடியா வரை சினிமாவை மிஞ்சும் ஆக்ஷன் சீன், அனல் தெறிக்கும் வசனங்கள் தூள் பறக்கின்றன.

எல்லாம் சில சினிமாக்காரர்களின் போதை மருந்து மேட்டர்தான். இந்தி பட உலகில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாய் உருவான இந்தப் போதை பொருள் சூறாவளி, தென் மேற்கு திசையில் நகர்ந்து கன்னட திரையுலகில் கரையேறிகலக்கத் துவங்கியிருக்கிறது. இதனால் தமிழக, தெலுங்கு, மலையாள திரையோரங்களில் எச்சரிக்கை எண் ஏழு கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.

யார் கண்டது, போதை விவகாரம் இங்கும் விமரிசையாக நடந்திருந்து விரைவிலேயே எச்சரிக்கை எண் ஏற்றும் கம்பமே காணாமல் போகும் ரேஞ்சிற்கு சுறாவளி, சுனாமி தாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏற்கனவே நசநசவென்று வதந்தி மழை பிசுபிசுவென்று பெய்யத் துவங்கியிருக்கிறது. என்ன ஆகப்போகிறதோ. இந்த லட்சணத்தில் இந்தித் திரையுலகைச் சேர்ந்த சில பெரும் புள்ளிகள் சில ஆங்கில டீவி

செய்தி சேனல்கள் மீது வழக்கு போட்டிருக்கிறார்கள். ஏதோ பத்து, பதினைந்து பேர் இழுத்த புகைக்கு மொத்த இந்தித் துறைக்கும் நெருப்பு வைக்கலாமா, தகாத வார்த்தைகளில் திட்டலாமா என்று அவர்களுக்கு அசாத்திய கோபம். வாஸ்தவம்தான். பாதி பேர் செய்தாலும் மீதி பேரையும் சேர்த்து சொல்வது தப்புத்தான். இதேசினிமாத் துறையைச் சேர்ந்த சிலர் சகட்டு மேனிக்கு போலீஸ்காரர்கள், டாக்டர்கள், வக்கீல்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் அனைவரும் அயோக்கியர்கள் என்பது போல் சித்தரித்து படம் எடுக்கும் போது இந்த எண்ணம் அவர்களுக்கு எட்டியிருக்கலாம்.

தனக்கென்று வந்தால்தான் தெரிகிறது வலியும் வேதனையும். அவர்கள் போட்ட கேஸ் பூட்டா கேஸ் ஆகுமா என்று
எனக்குத் தெரியாது, ஆனால் இந்த கூத்தைப் பார்க்கும் போது பழைய பழமொழி ஒன்று நினைவிற்கு வருகிறது: ‘புருஷன் அடிச்சது பரவாயில்லையாம், பக்கத்து வீட்டுக்காரி சிரிச்சது வலிச்சுதாம்’!

பிராண்ட் என்றால் என்ன?

சினிமாத்துறை எப்படியோ போகட்டும். பிரச்சினை அதுவல்ல. என் கவலை சினிமாக்காரர்களின் பிரபலத்துவத்தை மூலதனமாக்கி அவர்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி தங்கள் பிராண்டுகளை விளம்பரம் செய்யும் மார்க்கெட்டர்களின் கதியை நினைத்து. அவர்களைப் பார்த்தால் எனக்கு ஒரு பக்கம் கோபம் வருகிறது, இன்னொரு பக்கம் பாவமாகவும் இருக்கிறது.

விற்கும் பொருளை பிரபலமாக்க வேண்டும் என்று பிசினஸ் மேன் நினைப்பது நியாயமே. அதற்கு வழி பிரபலங்களைக் கொண்டு விளம்பரம் செய்வது என்று அவர்கள் நினைக்கும் போதுதான் வில்லங்கம் வக்கனையாய் வீடேறி வந்து விளக்கேற்றுகிறது. பொருளை பிரபலமாக்கும் ஒரே வழி அதை பிராண்டாக்குவதுதான் என்று எத்தனை சொன்னாலும் இவர்களுக்குத் தெரிவதில்லை.

பிராண்ட் என்றால் என்ன? வாடிக்கையாளர் தேவையை மற்றவைகளை விட சிறப்பாய் பூர்த்தி செய்து வாடிக்கையாளர் மனதில் தனித்துவமாய் தெரியும் வித்தை. இதை செய்தால் எதற்கு வாடிக்கையாளரை கெஞ்சிக்கொண்டு. அவரே பிராண்ட் இருக்கும் இடம் தேடி வந்து கியூவில் நின்று வாங்குவாரே. வெற்றிகரமான பிராண்டுகள் இதைத்தான் செய்தன. செய்கின்றன. செய்ய வேண்டும்.

மற்றவர்கள் செய்வதையே வித்தியாசம் இல்லாமல் தானும் செய்து தனித்துவமே இல்லாமல் கூட்டத்தோடு கோவிந்தா போடுவதால்தான் பொருட்கள் கஸ்டமர்கள் கண்ணில் படுவதில்லை. அவர்களைக் கவர விளம்பரம் செய்து அதுவும் பத்தாமல் சினிமா, விளையாட்டு பிரபலங்களுக்கு கோடி கோடியாய் கொட்ட வேண்டியிருக்கிறது. அப்படிசெய்து தொலைத்தாலாவது பிராண்ட் பிரபலமாகிறதா என்றால் அதுவும் இல்லை. பிரபலம் தான் இன்னும் பிரபலமாகிறாரே ஒழிய விளம்பரப்படுத்தப்படும் பொருள் போட்ட இடத்திலேயே பெட்டிப் பாம்பாய் படுத்திருக்கிறது.

பிரபலங்களால் அபாயம்

பல மார்க்கெட்டர்கள் நாட்டிலுள்ள பிரபலங்களை மேலும் பிரபலப்படுத்தியே தீருவேன், அவர்களுக்கு பணத்தை அள்ளிக் கொட்டுவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அதை திருப்பணியாய் செய்து கொண்டிருக்கிறார்கள். செய்துவிட்டு போகட்டும். அதற்குத் தங்கள் பிராண்டுகளை நேர்ந்து விட்டு அவற்றையும் நோகடிக்க வேண்டுமா என்பதுதான் கேள்வி. பத்தாக் குறைக்கு இன்று, பல பிரபலங்கள் திருத்தல யாத்திரை செல்வது போல் போதை மாத்திரை போட்டுக் கொண்டு தேவ நித்திரையில் மூழ்கும்போது அவர்களை வைத்து விளம்பரம் செய்யும் பிராண்டுகளின் கதி என்னவாகும்? ஏதோ ஒரு பிரபலம் போதை மருந்து போட்டால் பிராண்ட் என்னய்யா பண்ணும் என்று பரிதாப
மாய் கேட்பவர்களின் பணிவான கவனத்திற்கு. பிரபலத்தின் தன்மைகள் மற்றும் குணாதிசயங்கள் பிராண்டுக்கும் பரவலாய் பரவி அது பொலிவுடன் புவியாள வேண்டும் என்றுதானே அவர்களை வைத்து விளம்பரம் செய்கிறார்கள்.

அந்தப் பிரபலம் போதை மருந்து போட்டு மாட்டிக் கொண்டாலோ, வேறு பிரச்சினைகளில் சிக்கினாலோ பார்ப்பவர் அவற்றையெல்லாம் மறந்து பிராண்டை மட்டும் பார்க்க வேண்டுமாக்கும். இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராய் தெரியவில்லை. பிரபலம் போலீஸ் ஸ்டேஷனுக்கும் கோர்ட்டுக்கும் நடையாய் நடந்தால் அவரோடு சேர்ந்து பிராண்டும் அல்லவா நடையாய் நடந்து ஓடாய் தேயும்! அதெல்லாம் கிடையாது, அப்படியெல்லாம் நடக்காது என்று இன்னும் வெள்ளந்தியாய் நினைத்துக் கொண்டிருந்தால் உங்கள் அறிவுக் கண்ணைத் திறந்து அதற்கு ஒரு மூக்குக் கண்ணாடியும் மாட்ட வேண்டியிருக்கிறது.

அமெரிக்காவில் பல காலமாய் ‘நைக்கி’ ஷூ கால்ஃப் வீரர் ‘டைகர் உட்ஸ்’ஸை வைத்து விளம்பரம் செய்து வந்தது. ஒரு நாள் அவர் பெண் விவகாரம் ஒன்றில் சிக்க, அவருக்கும் அவரது மனைவிக்கும் தெருச் சண்டை நிகழ்ந்தது. விவகாரம் ஊரெல்லாம் பரவி சந்தி சிரித்தது. இப்பேற்பட்ட ஆளை வைத்தா ஷூ விளம்பரம் எடுத்தாய், பிடி சாபம் என்று சுமார் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் வாடிக்கையாளர்கள் நைக்கியை இனி சிந்தையாலும் தொடேன் என்று சத்தியம் செய்தனர். நைக்கிக்கு ஒன்றே முக்கால் மில்லியன் டாலர் நஷ்டம். எல்லாம் எதனால்?

கிண்டல் கேலிகள்...

இது இப்படி என்றால் அடிகர் திலகம் ‘ஜாக்கிசான்’ கதை வேறு மாதிரி. அவர் சினிமாவில் நடிக்காத நேரத்தில் பல நாடுகளில் விளம்பரங்களில் தோன்றி எலக்ட்ரிக் பைக், சாஃப்ட்வேர் என்று பல பிராண்டுகளைப் பிரபலப்படுத்து பவர். அவரது போதாத வேளை, அவர் விளம்பரப்படுத்திய பல பிராண்டுகளில் பிரச்சினைகள் தோன்றின. அவர் பிரபலப்படுத்திய ஷாம்பு பிராண்ட் புற்று நோய் ஏற்படுத்தும் என்று ஒரு செய்தி பரவியது. அவர் மாடலாக நடித்த ஆட்டோ ரிப்பேர் பண்ணி ஏமாற்று கேஸில் மாட்டிக்
கொண்டது. அவர் நடித்த கம்ப்யூட்டர் கம்பெனி திவாலானது.

இப்பொழுது அங்கெல்லாம் ஜாக்கி சான் பற்றி பேசும் போது அவரு எல்லாரையும் அடிச்சு வெளுப்பாரு. அவர வச்சு விளம்பரம் செய்யற பிராண்டையும் சேர்த்து’என்று கிண்டல் செய்கிறார்கள்! இவ்வளவு ஏன், இந்தியாவில் சில வருடங்களுக்கு முன் ‘ஸ்னாப் டீல்’ என்னும் ஈ –காமர்ஸ் கம்பெனி ‘அமீர் கானை’ வைத்து பல நாள் விளம்பரம் செய்தது. அந்தக் கம்பெனிக்கு போதாத காலம்அமீர் கான் ரூபத்திலேயே வந்தது.

இந்தியாவில் வாழவே பயமாயிருக்கிறது என்று ஒரு நாள் அறிக்கை விட நாடே கொந்தளித்தது. உன்னை வளர்த்த இந்நாட்டில் உனக்கு வாழ முடியலன்னா பாகிஸ்தான் போயேன்’ என்று ஆயிரக்கணக்கானவர்கள் கோபத்தைக் காட்டும் வகையில் தங்கள் செல்ஃபோனிலிருந்து ‘ஸ்னாப் டீல்’ செயலியை நீக்கிவிட்டனர். அந்த பிராண்ட் ‘அய்யா சாமி, எங்களுக்கு அமீருக்கும் இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை’ என்று ஒதுங்கியது. ஆனாலும் விற்பனைச் சரிவை சரி செய்யவே முடியவில்லை.

இத்தனை நடந்தும் இதைப் பற்றி கவலைப்படாமல் நானாக பட்டுக் கொள்ளும் வரை திருந்த மாட்டேன் என்று பலர் இன்னும் பிரபலங்களிடம் பல கோடிகள் அழுது அவர்கள் போதையின் பாதையில் போய் ஊரே பார்த்து சிரிக்க தங்கள் பிராண்டும் பாழாவதைப் பார்த்துக் கொண்டுத் திக்குத் தெரியாமல் தவிக்கிறார்கள். தேவையா இந்தத் தலையெழுத்து! இதைச் சொன்னால் ‘ஏகப்பட்ட பிராண்டுகள், எக்கச்சக்க விளம்பரங்கள் இருக்கும் போது என் பிராண்டை எப்படி எல்லார் கண்ணிலும் பட வைப்பதாம்’ என்று எதிர் கேள்வி கேட்கிறார்கள் மார்க்கெட்டர்கள். பிரச்சினையே அதுதானே.

நீங்கள் பணம் கொடுத்து வாங்குவது பிரபலத்தின் முகமும் உங்கள் பிராண்டிற்கான ஒப்புதலும் மட்டும் இல்லையே. கூடவே இலவச இணைப்பாக அவருடைய தகாத செயல்கள், இமாலய தவறுகள், வரலாறு காணாத ஸ்காண்டல்கள், தெரியாத விஷயங்களைக் கூட தெரிந்தது போல் உதிர்க்கும் உளறல்கள் எல்லாவற்றையும் அல்லவா சேர்த்து வாங்குகிறார்கள். பிரபலங்கள் பிரச்சினைகளில் சிக்கும் போது அவர்களோடு சேர்ந்து பிராண்டும் தெருவிற்கு வருகிறது. அதோடு கம்பெனிக்கும் கெட்ட பெயர் வந்து சேர்கிறது. இப்படியா கேட்டு வாங்கி தூக்கு மாட்டிக் கொள்வது!

ஒருவன் குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை அவன் நிரபராதி என்கிறது சட்டம். ஆனால் மக்கள், மீடியா, சோஷியல் மீடியா உலகில் குற்றம் சாட்டப்பட்டாலே அவன் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்படுகிறதே. பிரபலத்தை தூக்கி நிறுத்திய அதே கும்பல் அவரை தூக்கியெறியவும் தயாராக இருக்கிறதே. பிர‘பலம்’ பிர‘பலவீனம்’ ஆகிறாரே. பிராண்டும் பாதாளம் நோக்கி பயணிக்கிறதே.

பிராண்டை பிரபலமாக்கும் வழி அதை பிரபலங்கள் தயவில் விட்டு ‘ஆனது ஆகட்டும்’ என்று இருப்பதல்ல. வாடிக்கையாளர் தேவையைப் புரிந்து அதை மற்றவர்களை விட சிறப்பாய் பூர்த்தி செய்து பிராண்டில் புதுமைகளை புகுத்திக் கொண்டே இருந்து அவர்களுக்கு எப்பொழுதும் ரெலவெண்ட்டாய் இருப்பதுதான். அப்படி செய்தால் எந்தப் பிராண்டும் பிரபலங்கள் இல்லாமலேயே பிரபலமாகும்.

வந்துவிட்டது கடிவாளம்!

1 பிரபலங்களின் தவறான நடத்தைகளால் பிராண்டுகள் மீதான மதிப்பு குறையும் என்பது நிறுவனத்துக்கும் பிரபலத்துக்கும் இடையிலான விவகாரம். அவற்றுக்கு மேலாக, சமூகம் சார்ந்து சில விசயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

2 மக்கள் ஏதோவொரு விதத்தில் பிரபலங்களை நம்புகின்றனர். அந்த வகையில் பிரபலங்களுக்கு கூடுதல் சமூகப் பொறுப்பு இருக்கிறது. ஆனால், சில பிரபலங்கள் சமூகப் பொறுப்பின்றி மக்களை தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் விளம்பரங்களில் நடிப்பதைப் பார்க்கிறோம்.

3 தற்போது ஆன்லைன் சூதாட்டங்களால் தொடர்ச்சியாக தற்கொலை நிகழ்வுகள் அரேங்கேறி வருகின்றன. ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களை ஊக்குவிக்கச் செய்யும் விளம்பரங்களில் பிரபலங்கள் பங்கேற்று இருக்கின்றனர்.

4 அதேபோல், அழகு சாதனங்கள் தொடர்பான விளம்பரங்கள் மக்களின் மனதில் நிறம், உடல் அமைப்புக் குறித்து தவறான பிம்பத்தை ஏற்படுத்துகிறது.

5 இனியேனும் அத்தகைய விளம்பரங்களை பிரபலங்கள் தவிர்க்க வேண்டும். பிரபலங்கள் பங்கேற்கும் விளம்பரங்களில் போலியான தகவல்கள் இடம்பெறும்பட்சத்தில் அந்தப் பிரபலங்களுக்கு 50 லட்சம் ரூபாய் வரையில் அபராதமும், ஐந்து ஆண்டுகள் வரை சிறைதண்டனையும் விதிக்கப்படும் வகையில் சென்ற ஆண்டு நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x