Published : 12 Oct 2015 10:48 AM
Last Updated : 12 Oct 2015 10:48 AM
“சார் நாங்க ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திலிருந்து பேசுகிறோம். உங்கள் செல் போன் நம்பருக்கு 1 லட்ச ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு பாலிசி கொடுக்கிறோம். இதற்கு நீங்கள் எந்த பணமும் கட்டத் தேவையில்லை. எங்கள் அலுவலகம் வந்து பார்த்து விட்டு போனால் போதும். கையோடவே பாலிசியையும் கொடுத்து விடுகிறோம் என்பது போன்ற தொலைபேசி அழைப்புகளை செல்போன் வைத்திருக்கும் பலரும் எதிர்கொண்டிருக்கக் கூடும். இந்த வலையில் விழவோ அல்லது சுதாரித்திருக்கவோ செய்திருக்கலாம். அதுவல்ல விஷயம்...
இது ஆயுள் காப்பீடு பாலிசிக்கு ஆள் பிடிக்கும் வேலையாகக்கூட இருக்க லாம். ஆனால் காப்பீடு எடுப்பது வாழ்க் கையின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்ட இந்த காலத்தில், அதன் அவசியம் குறித்து பல விதங்களில் எடுத்துச் சொல்லப்பட்டு வரும் நிலையில் ஒரு லட்ச ரூபாய்க்கும், இரண்டு லட்ச ரூபாய்க்கும் ஆயுள் காப்பீடு போதுமானதாக இருக்குமா?
சமீபத்தில்கூட தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்று தங்களது வாடிக் கையாளர்களுக்கு ஆயுள் காப்பீடு பாலிசி என்கிற சலுகையை வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தது. வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்யும் தொகைக்கு ஏற்ப ரூபாய் ஐம்பதாயிரம், ஒரு லட்சம் என காப்பீடு வழங்க உள்ளதாக தெரிவித்தது. இதற்காக ஆயுள் காப்பீடு பாலிசி வழங்கும் நிறுவனத்தோடும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
ஆயுள் காப்பீடு குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு இன்னும் பரவலாக போய் சேராத நிலையில் இது போன்ற வர்த்தக முயற்சிகள் லாபகரமாக இருக்குமா என்பதையெல்லாம் தாண்டி, காப்பீடு குறித்த அறிமுகத்தை ஏற்படுத்தும் என்பதும் உண்மைதான்.
ஆனால் நகர்ப்புறங்களில் மட்டுமே இருக்கும் காப்பீடு குறித்த விழிப்புணர்வு, கிராமப்புறங்களுக்கு இன்னும் பெரிய அளவில் போய்ச் சேரவில்லை என்பதும் உண்மை. இதற்கு காரணம் நமது மக்களிடம் இருக்கும் மனத்தடைகள்தான் என்கின்றனர் காப்பீடு ஆலோசகர்கள்.
120 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் காப்பீடு எடுத்துள்ளவர்கள் வெறும் 35 கோடி பேர்தான் என்கிறது புள்ளிவிவரங்கள்.
ஆயுள் காப்பீடு எடுத்தால் ஆயுசு குறையும் என்கிற மூடநம்பிக்கை இப்போதும் மக்களிடையே இருக் கத்தான் செய்கிறது. அதாவது, இறப்பை எதிர்பார்த்து காப்பீடு எடுக் கப்படுகிறது என்கிற தவறான புரிதல் இன்னும் மாறவில்லை என்றே சொல்ல வேண்டும். காப்பீடு குறித்து தெரியாத காலத்தில் உருவான கருத்தை இப்போதும் மக்கள் நம்பி வருகின்றனர்.
காப்பீடு எடுப்பதற்கும், காப்பீடு எடுத்துள்ளவரின் இறப்புக்கும் எந்த விதத்திலும் தொடர்பு கிடையாது என்கிற விழிப்புணர்வை கிராமப் புறங்களுக்கு கொண்டு செல்லாதவரை இந்த நிலைமைதான் நீடிக்கும்.
ஏற்கெனவே காப்பீடு பாலிசி எடுத்துள்ளவர்கள் நிலை என்னவாக இருக்கிறது? எத்தனைபேர் அதன் பலனை முழுமையாக அனுபவிக்கிறார்கள் என்கிற விவரங்களைப் பார்க்கிறபோது அதுவும் நெகட்டிவாகத்தான் இருக் கிறது. ஏதாவது ஒரு காரணத்தை வைத்து பலரும் பாலிசியை தொடராமல் விட்டு விடுகின்றனர் என்கிறது புள்ளி விவரங்கள்.
ஏன் காப்பீடு
பொதுவாக வீட்டிலிருந்து வெளியே கிளம்புகிறோம் என்றால் யாருக்கு என்ன நடக்கும் என்பது நம் கையில் இல்லை என்பதுதான் இன்றைய யதார்த்தம். இந்த நிலையில் வீட்டில் வருமானம் ஈட்டுபவருக்கு எடுக்கப்படும் ஆயுள் காப்பீடு பாலிசிகள்தான் அவருக்கு பிறகு அவருடையை குடும்பத்தை காப்பாற்றும் ஆதார சக்தியாக இருக்க முடியும்.
நாம் இந்த விஷயங்களை தெரிந்தே தவிர்க்க முடியாது. இந்தியாவில் ஆண்டுக்காண்டு சாலை விபத்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழகம் முன்னிலை வகித்து வருகிறது. என்னதான் விதிமுறைகளுக்கு உட்பட்டு நீங்கள் வாகனத்தை ஓட்டினாலும், எதிரே வருபவர் உங்களைப்போல விதிமுறைப்படிதான் வாகனத்தை ஓட்டுவார் என்று சொல்ல முடியாது. இது தவிர என்ன வகை நோய் என்கிற எந்த அறிகுறிகளும் இல்லாமல் திடீர் இறப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது என்கிறது மருத்துவ உலகம். எனவே ஆயுள் காப்பீடுதான் நமது குடும்பத்தை நமக்கு பிறகு காப்பாற்றும் என்பதை நம்ப வேண்டும்.
எவ்வளவு கவரேஜ்
இப்போதைய நமது வருமா னத்தைபோல, நமக்கு பிறகு நமது குடும்பத்துக்கு கிடைக்க வேண்டும் என்கிற புரிதலோடு காப்பீடு கவரேஜ் தொகை இருக்க வேண்டும். அதாவது நமக்கு பிறகு கிடைக்கும் காப்பீடு தொகையை கொண்டு நமது குடும்பம் இதே வாழ்க்கைத் தரத்தோடு வாழ வேண்டும். இதற்கு தற்போதைய ஆண்டு வருமானத்தைபோல 10 முதல் 15 மடங்கு தொகைக்கு காப்பீடு பாலிசி இருக்க வேண்டும். எனவே இந்த புரிதலோடு ஆயுள் காப்பீட்டை அணுக வேண்டும் என்கின்றனர் காப்பீடு ஆலோசகர்கள்.
கிளைம் விகிதங்கள்
இந்தியாவில் ஆயுள் காப்பீடு பாலிசிகளை 24 நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. பொதுக் காப்பீடு பாலிசிகளை 28 நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இவற்றை ஐஆர்டிஏ என்கிற காப்பீடு நிறுவனங்களின் கட்டுப்பாட்டு அமைப்பு முறைப்படுத்தி கண்காணித்து வருகிறது. உலக அளவில் நமது கட்டுப்பாட்டு அமைப்பு வலுவானதாக உள்ளதால் காப்பீடு நிறுவனங்களும் முறையாக செயல்பட்டு வருகின்றன. தற்போது செயல்பட்டு வரும் காப்பீடு நிறுவனங்கள் மேற்கொண்டு செயல்பட முடியாத நிலை ஏற்படும் என்றால் ஐஆர்டிஏ தலையிட்டு காப்பீடுதாரர்களை பாதுகாக்கும் விதத்தில் நமது கட்டுபாட்டு அமைப்பு வலுவானது.
ஐஆர்டிஏ புள்ளி விவரங்கள் படி பெரும்பான்மையான முன்னணி காப்பீடு நிறுவனங்களின் கிளைம் விகிதம் 90 சதவீதத்துக்கும் மேல் உள்ளது. எனவே கிளைம் கிடைக்காது, அலைய வேண்டும் என்கிற எந்த தகவலும் உறுதிபடுத்தப்படாததுதான். காப்பீடு விண்ணப்பிக்கும்போது எந்த தவறான தகவல்களும் இல்லையென்றால் காப்பீடு கிளைம் செய்வதிலும் சிக்கல்கள் இருப்பதில்லை.
எனவே காப்பீடு எடுப்பதில் தெளிவு வேண்டும். ஏதோ இலவசமாகக் கிடைக்கிறது. பிரீமியம் குறைவாக இருக்கிறது என்பதற்காகவெல்லாம் காப்பீடு பாலிசிகளை எடுக்காமல் அத்தியாவசிய கடமைகளில் ஒன்றாக பார்க்க வேண்டும்.
தொலைபேசி அழைப்பில் ஒருலட்ச ரூபாய் பாலிசி, செல்போன் ரீசார்ஜ் செய்தால் பாலிசி என்பதெல்லாம் காப்பீடு நிறுவனங்கள் வளர வேண்டுமானால் வழி வகுக்கலாம். தனிநபர் பாதுகாப்புக்கும், குடும்ப பாதுகாப்புக்கும் இலவச காப்பீடு பாலிசிகளால் ஈடுகட்ட முடியாது. இதை புரிந்து கொண்டு, முறையான காப்பீடு திட்டங்களுக்கு முயற்சி செய்வதே காலத்தில் செய்யும் புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT