Published : 12 Oct 2015 10:10 AM
Last Updated : 12 Oct 2015 10:10 AM
சாகசப் பயணத்தை விரும்புவோர் பலர். ஆனால் அது பலருக்கு கைகூடுவதில்லை. இதையே தங்கள் வாழ்வின் லட்சியப் பயணமாக மாற்றி இத்தகைய சுற்றுப் பயணங் களில் பங்கேற்போர் சிலர்.
சாகச பயணங்களை மேற்கொள் வோரை பெரிதும் கவருவது இமாலய பந்தய போட்டிதான். சாகச பயணம் மேற்கொள்வோரின் ``மெக்கா’’ என்றே இந்தப் போட்டி அழைக்கப்படுகிறது. 1999- ம் ஆண்டு முதல் அக்டோபர் மாதங்களில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.
ரெய்ட்-டி-இமாலயா என்ற இந்தப் பந்தயம் 17-வது ஆண்டாக கடந்த வெள்ளியன்று (அக்.9) தொடங்கியது. ஆசியாவிலேயே மிகவும் கடினமான போட்டியாக இது கருதப்படுகிறது.
மேலும் உலகிலேயே மிகவும் அதிக நாள் நடத்தப்படும் சாகசப் போட்டியும் இதுதான்.
சாகச பயணம் மேற்கொள்வோரின் மனோதிடம், அவர்கள் வாகனம் ஓட்டும் திறன், அவர்களது வாகனத்தின் செயல் பாடு ஆகியவற்றை சோதித்தறியும் பயணமாக, போட்டியாக இது இருக்கும். இந்தப் போட்டியில் கார்கள், கன ரக வாகனங்கள், மலையேறும் பைக்குகள் ஆகியன இடம்பெறுகின்றன.
இந்தப் போட்டியின் தனித்துவமே 6 ஆயிரம் மீட்டர் தூரம் மலையேற்ற சாகசம்தான். உலகிலேயே மிகவும் கடினமான போட்டியாக இது கருதப்படுகிறது. மொத்தம் 9 நாள் பயணம் இதில் 8 இரவுகள் அடங்கும். 9-ம் தேதி தொடங்கும் இப்போட்டி 17-ம் தேதி நிறைவடைகிறது. இந்தப் போட்டியில் 150-க்கும் அதிகமான ஆர்வலர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆண்டு புதிய பாதைகளில் பயணம் மேற்கொள்ளும் வகையில் பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
மனாலி, டல்ஹவுசி, ராங்டம் ஆகிய பகுதிகள் வழியாக இந்தப் பயணம் அமையும். மொத்த பயண தூரம் 2 ஆயிரம் கிலோமீட்டராகும். போட்டி 9 நாள் நடப்பதாக அறிவிக்கப்பட்டாலும் இந்த பயண தூரத்தை 6 நாளில் கடக்க வேண்டும். இதில் பங்கேற்பாளர்கள் அதிகபட்ச உயரமான 15 ஆயிரம் அடி உயரத்துக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும்.
கடல் மட்டத்திலிருந்து 15 ஆயிரம் அடி உயர பயணம் என்பதால் ஆக்ஸிஜன் அளவு குறையும் அத்துடன் மைனஸ் 21 உறை பனி நிலவும். இவை அனைத்தையும் கடந்துதான் பயணத்தை நிறைவு செய்ய வேண்டும்.
இதில் பங்கேற்போரின் உடல் திறன், அவர்கள் பயன்படுத்தும் கார், மோட்டார் பைக் மற்றும் கன ரக வாகனத்தின் திறனை சோதித்த பின்னரே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். பங்கேற்பவர்களில் நான்கில் ஒருவர் மட்டுமே இலக்கை அடைவர். அந்த அளவுக்கு இப்போட்டி மிகவும் கடினமானது.
ஆண்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த ஆண்டு 10 பேரடங்கிய பெண்கள் அணி கலந்து கொள்கிறது. இதற்கு முந்தைய போட்டிகளில் 5 பெண்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது.
இந்தப் போட்டியில் 9 முறை பட்டம் பென்றுள்ள சுரேஷ் ராணா, பாலைவனப் புயல் பட்டத்தையும் கைப்பற்றியவர். இவர் மற்ற போட்டியாளர்களுக்கு கடும் சவாலாக இருப்பார் என்றே தெரி கிறது. ஸ்விட்சர்லாந்தின் சர்வதேச ஆட்டோமொபைல் சம்மேளனம் நடத்தும் மோட்டார் ஸ்போர்ட்களில் இந்தியாவிலிருந்து நடத்தப்படும் இமாலய கார் பந்தயமும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது முக்கியமல்ல. இதில் பங்கேற்று இலக்கை வெற்றிகரமாக முடித்தாலே இமாலய வெற்றிதான்.!.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT