Published : 28 Sep 2015 11:37 AM
Last Updated : 28 Sep 2015 11:37 AM
புதுச்சேரியைச் சேர்ந்தவர் ஆர். ரகோத் தமன். படித்து முடித்து வெளி நாட்டுக்கு வேலைக்குச் சென்றவர். அங்கிருந்து ஒரு தொழிலை கற்றுக் கொண்டு வந்து இங்கு தொழில் முனைவோராக வளந்து வருகிறார். கூடவே புதிது புதிதாக மேற்கொண்டு வரும் முயற்சிகளினாலும் பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்து வருகிறார் இந்த 29 வயது இளைஞர்.
இவரது தயாரிப்பான அலங்கார விளக்குகள் பார்ப்பவர்களை சுண்டி இழுக்கிறது. தற்போது இந்த தொழிலை விரிவுபடுத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளவர் தனது அனுபவத்தை இந்த வாரம் வணிக வீதியில் வாசகர்களுக்கான பகிர்ந்து கொண்டார்.
புதுச்சேரிதான் சொந்த ஊர். எலெக்ட்ரிக்கல் டிப்ளமோ படித்துவிட்டு சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றிருந்தேன். வேலை நேர போக மாலை நேர வகுப்பில் சேர்ந்து எலெக்ட்ரிக்கல் பவர் சிஸ்டம் இன்ஜினீயரிங் படித்தேன். அங்கு 6 ஆண்டுகள் வேலை பார்த்துவிட்டு, திரும்ப ஊருக்கு வந்து எனது தம்பி கீர்த்திசீலனோடு சேர்ந்து இண்டீரியர் டிசைனிங் வேலைகளை எடுத்து செய்து வந்தோம்.
இதற்காக ஒரு இயந்திரத்தை வெளிநாட்டிலிருந்து வாங்கியிருந்தோம். இந்த இயந்திரத்துக்கு மாதத்துக்கு ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களோதான் வேலை இருக்கும். எனவே இந்த இயந்திரத்தை முழுமையாக பயன்படுத்துவதுபோல வேலைகளையும் மேற்கொள்ள வேண்டும் என திட்டமிட்டோம். அப்படி தொடங்கியதுதான் அலங்கார விளக்குகள் வடிவமைப்புக்கு கொண்டு வந்தது.
இந்த அலங்கார விளக்குகளை சிங்கப்பூரில் பார்த்திருக்கிறேன். தமிழ் நாட்டிலோ அல்லது தென்னிந்திய அளவிலோ தயாரிப்பாளர்கள் கிடையாது. குஜராத்தில் சிலர் தயாரிக்கின்றனர். எனவே இங்கு கிடைக்கும் மூலப்பொருட்களைக் கொண்டே இந்த அலங்கார விளக்குகளை தயாரிக்க தொடங்கினோம். கடந்த ஒரு ஆண்டாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. கூடவே இதில் வேறு சில முயற்சிகளும் எடுக்க வேண்டிய தேவை இருந்தது.
அதாவது இந்த அலங் கார விளக்குக்கு உள்ளே பொருத்தும் சிஎப் எல் விளக்குகள் பெரிதாக இருப்பதால் வாடிக்கையாளர்கள் கையாளுவதற்கு எளிதாக இல்லை. தவிர இந்த விளக்குகளில் விலை 200 ரூபாய்க்கும் மேல் விற்பனையாகிறது. இதனால் எங்களது விளக்குகள் விலை குறைவாக இருந்தாலும், வாடிக்கையாளர்கள் மொத்தமாக கணக்கிட்டால் விலை அதிகம் என்கிற எண்ணத்தை உருவாக்கியது. இதை குறைப்பதற்காக நாங்களே
மூன்று செமீ அளவிலான எல்இடி விளக்குகளை தயாரிக்க முடிவெடுத்தோம்.
இது எங்களது விற்பனையை அதிகமாக்கியது. இதற்கு மின்சாரம் குறைவாக செலவாவது மட்டுமல்ல, கையாளுவதில் எளிதாக இருந்தது.
அதாவது ஏற்கெனவே எங்களது அலங்கார விளக்கை ரூ. 300 கொடுத்து வாங்கும் வாடிக்கையாளர் ரூ.200 தனியாக சிஎப்எல் விளக்குக்கும் செலவிட வேண்டும். இந்த சுமையை குறைக்கவும், இதை தனித்தனியாக வாங்காமல், இரண்டையும் ஒன்றாகவே கொடுப்பதும் வாடிக்கையாளர்களை கவர்ந்தது.
தவிர எங்களது தயாரிப்புகளை பிளிப் கார்ட் மற்றும் ஸ்நாப்டீல் மூலமான விற்பனைக்கு முயற்சித்தபோது இந்த சிக்கல்களை எதிர்கொண்டோம். இதுவும் எங்களை எல்இடி விளக்குகளை உற்பத்தி செய்ய வைத்தது என்று சொல்லலாம்.
இதற்காக சந்தையில் இருக்கும் எல்இடி விளக்குகளை வாங்கி சோதனை செய்து, எங்களது தேவைக்கு எப்படி பயன்படுத்த முடியும் என திட்டமிட்டோம். ரெடிமேடாக கிடைத்த எதுவும் எங்களுக்கு பொருந்தவில்லை என்பதால், அதையும் சொந்தமாகவே தயாரிக்க முடிவெடுத்து ஒரு பிளாஸ்டிக் என்ஜினீயருடன் ஆலோ சித்து அதற்கேற்ப புதிய வகையில் எல்இடி விளக்குகளை செட் செய்வதற்கு ஏற்ப ஏபிஎஸ் என்கிற உயர்ரக பிளாஸ்டிக் வகையினை பயன்படுத்தி 3 செமீ பேனலை உருவாக்கினோம். இதனைக் கொண்டு எல்இடி விளக்கை புதிய வகையில் உருவாக்கி எங்களது அலங்கார விளக்குக்குள் பொருத்தினோம். இதனால் எங்களது வர்த்தகம் இன்னும் எளிதாக மாறிவிட்டது.
தற்போது இண்டீரியர் டிசைனிங் தவிர, அலங்கார விளக்குகள், எல்இடி விளக்குகள் என தொழிலை ஒவ்வொரு கட்டமாக விரிவாக்கி வருகிறோம்.
தற்போது 6 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து வருவது மட்டுமல்லாமல்,
எங்களது தொழிலின் அடுத்த கட்டமாக இந்த அலங்கார விளக்கை தயாரிப்பதற்கான பயிற்சியை பலருக்கும் கொடுக்க திட்டமிட்டுள்ளோம்.
வருகிற பண்டிகை நாட்களில் இந்த அலங்கார விளக்குகளின் தேவை அதிகம் இருக்கும் என்பதால், இதை தயாரித்து விற்பனை செய்ய ஆர்வமுள்ள புதிய தொழில் முனைவோர்களுக்கு பயிற்சி வழங்க யோசித்துள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.
முயற்சியும் ஆர்வமும் இருந்தால் எந்த சவால்களையும் சமாளிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக இருந்து வருகிறார் இந்த இளைஞர்.
maheswaran.p@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT