Published : 07 Sep 2020 09:20 AM
Last Updated : 07 Sep 2020 09:20 AM
ramesh.m@hindutamil.co.in
கரோனாவுக்கு முன் கரோனாவுக்கு பின் என உலக வரலாற்றை வகைப்படுத்தும் அளவிற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது கரோனா வைரஸ். இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் கொண்டுவரப்பட்ட ஊரடங்கு இம்மாதத்தில்தான் குறைந்த அளவிலான கட்டுப்பாடுகளுடன் நீக்கப்பட்டிருக்கிறது. இந்த ஐந்து மாத காலகட்டத்தில் தொழில் முடக்கம், வருவாய் இழப்பு, வேலையின்மை, நோய்ப் பரவல் குறித்த பயம், எதிர்காலம் குறித்த அச்சம் என பெரும் நிச்சயமின்மையை மக்கள் எதிர்கொண்டனர். வாழ்க்கை நிச்சயமற்றதாகும்போதுதான், தனக்குப் பிறகு தனது குடும்பம் என்னவாகும் என்ற யோசனை அக்குடும்பத்தை வழிநடத்துபவருக்கு ஏற்படுகிறது.
அந்தவகையில் முன்பு எப்போதுமிருந்தைவிடவும் இந்தக் கரோனா காலகட்டத்தில் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவது தொடர்பான திட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரையில் பாதுகாப்பான எதிர்காலம் என்பது காப்பீட்டுத் திட்டங்களுடன் தொடர்புடையதாக இருக்கிறது. இந்தச் சூழலில் காப்பீட்டுத்துறையில் கரோனா எவ்விதமான மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது, காப்பீட்டுத் துறையின் போக்கு இனி எவ்வாறாக இருக்கும் என்பதை அறியும்பொருட்டு காப்பீட்டுத் துறையில் இந்தியாவில் முதன்மையான நிறுவனமான எல்ஐசியின் மண்டல மேலாளர் கே. கதிரேசனுடன் உரையாடினோம்.
கரோனாவுக்குப் பிறகு காப்பீடு திட்டங்கள் மீதான மக்களின் பார்வை எவ்வாறாக உள்ளது?
காப்பீடுகளின் தேவையை இந்த கரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகம் உணரத் தொடங்கியுள்ளனர். எப்போது வேண்டுமானாலும் வேலை பறிபோகலாம், தொழில்கள் முடங்கலாம் என்ற நிலையில் அத்தகைய தருணங்களில் சேமிப்பு மட்டுமே கைகொடுக்கும் என்பதை மக்கள் அனுபவ ரீதியாக தற்போது உணர்ந்துள்ளனர். கரோனா ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடியால் பலர் வேலையிழப்பை, வருமான இழப்பை எதிர்கொண்டனர். இவர்களில் தங்கள் எதிர்காலத்துக்காக சேமித்தவர்கள் மட்டுமே இந்த நெருக்கடி கால
கட்டத்தை சற்று துணிவுடன் எதிர்கொண்டனர். அவர்களின் சேமிப்பு இந்த நெருக்கடி காலகட்டத்தில் அவர்களுக்கு கைகொடுத்துள்ளது.
சேமிப்பைப் பொறுத்த வரையில் நிலத்தில், தங்கத்தில் முதலீடு செய்வது, வங்கிகளில் ரொக்கமாக சேமிப்பது என பல்வேறு விதமான வழிமுறைகள் உள்ளன. எனினும், நிச்சயமற்ற எதிர்காலத்துக்கான சேமிப்பு என்றால் அது காப்பீடுகள்தான். இந்தியாவில் கூட்டுக் குடும்பமுறை இருந்தவரையில் காப்பீடு நிறுவனங்களுக்கான தேவை அதிகம் இல்லை. காரணம் கூட்டுக் குடும்பமே ஒரு காப்பீடுதான். குடும்பத்தில் ஒருவர் உயிரிழந்தாலும், மற்றவர்கள் அந்த குடும்பத்தின் பொறுப்புகளை ஏற்றுச்செல்வர். ஆனால் இப்போது தனிக் குடும்பம் தவிர்க்க முடியாததாகிவிட்டது. இத்தகைய சூழ்நிலையில்தான் காப்பீடு நிறுவனங்கள் முக்கிய இடம் பிடிக்கின்றன.
தமிழகத்தில் மக்கள் எத்தகைய காப்பீடு திட்டங்களில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்?
எல்ஐசி-யில் கருவில் இருக்கும் குழந்தை முதல் ஓய்வூதியம் வரையிலான திட்டங்கள், மூன்று தலைமுறையினரைக் காக்கும் வகையிலான காப்பீடு திட்டங்கள், தனி நபர், வாழ்க்கைத் துணை, வாரிசு ஆகியோருக்கான காப்பீடு திட்டங்கள் உள்ளன. வாழ்நாள் முழுவதும் காப்பீடு கிடைக்கும் வகையில் திட்டங்களும் உண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரையில் மக்கள் ஓய்வூதியத்திட்டங்களில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தென்னிந்தியாவைப் பொருத்தவரையில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும், புதுச்சேரியிலும் பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது. வயதானவர்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் தங்கள் ஓய்வுக் காலத்தை நிம்மதியாக கழிக்க விரும்புகின்றனர். விளைவாக இம்மாநிலங்களில் ஓய்வூதியத் திட்டங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் தென் மண்டலத்தில் நாங்கள் இப்போது ஓய்வூதிய திட்டங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.
எல்ஐசி-யின் ஓய்வூதியத் திட்டங்களில் எது நல்ல பலனளிக்கக்கூடிய திட்டமாக உள்ளது?
ஜீவன் சாந்தி என்ற ஓய்வூதியத் திட்டம் மிகவும் கவர்ச்சிகரமான திட்டம். இதில் அதிகபட்சம் 18 சதவீத வரையிலான பலன் கிடைக்கும். 10 லட்சம் ரூபாய்க்கு காப்பீடு செய்தால், ஜீவன் சாந்தி திட்டத்தின்கீழ் மாதம் ரூ.5,600 ஆண்டுக்கு கிடைக்கும். அவசரக் காலங்களில் கடனும் பெற்றுக் கொள்ளலாம். காப்பீடு செய்தவர் இறந்தால் அவரது வாரிசுக்கு காப்பீட்டுத் தொகை மற்றும் போனஸ் தொகை அளிக்கப்படும்.
பொதுவாக காப்பீடு செய்வது தொடர்பாக மக்களிடம் குழப்பம் நிலவுகிறது. தங்கள் வருமானத்தில் எவ்வளவு சதவீதத்தை காப்பீடுக்கு ஒதுக்குவது என்று குழம்புகிறார்கள். எதை அடிப்படையாகக்கொண்டு அவர்கள் தங்கள் காப்பீட்டு வரம்பை நிர்ணயிக்க வேண்டும்?
ஒருவர் அவர் பெறும் ஊதியத்தைவிட 20 மடங்கு அதிகம் காப்பீடு எடுக்க வேண்டும். உதாரணமாக, ஒருவரது ஆண்டு வருமானம் ரூ.5 லட்சமாக இருந்தால் அவர் அதைப் போல் இருபது மடங்கு அதிகமாக, அதாவது ரூ.1 கோடிக்கு காப்பீடு செய்ய வேண்டும். அப்படி செய்யும்போதே அவருக்கு காப்பீட்டின் பலன் முழுமையாக கிடைக்கும். இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த ஏற்கெனவே உள்ள காப்பீடுதாரர்களை தொலைபேசி, இணையதள முகவரி மூலமாக தொடர்புகொண்டு அறிவுரை வழங்குகிறோம்.
தற்போதைய காலகட்டத்தில் என்ன புதிய மாற்றங்களை எல்.ஐ.சி முன்னெடுத்துள்ளது?
‘கால் டு கஸ்டமர்’ என்ற (சி2சி) முயற்சியை தென் மண்டலத்தில் எடுத்தோம். கரோனா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைமூலம் வாடிக்கையாளர்களிடம் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டோம். 2.6 கோடி வாடிக்கையாளர்களில் இதுவரை 22 லட்சம் வாடிக்கையாளர்களிடம் பேசியுள்ளோம். பிரீமியம் செலுத்துவதற்கான மாற்று வழிகள், அதாவது கிளை அலுவலகம் வராமலேயே செலுத்தும் முறைகள் குறித்தத் தகவல்களை வழங்குகிறோம். இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. எல்ஐசி யூனியனைச் சேர்ந்தவர்களும் இப்போது வாடிக்கையாளர்கள் வீட்டுக்கு செல்ல தயாராக உள்ளனர்.
அடுத்தாக, சாதாரண முகவர்களை தொழில்முறை முகவர்களாக மாற்றுவதற்குத் திட்டமிட்டுள்ளோம். பகுதி நேர அளவில் பணியாற்றும் முகவர்களை, முழு நேர முகவர்களாக மாற்றுவதற்கான செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. எல்.ஐ.சி தொடர்பான நடைமுறைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.தற்போது மருத்துவ பரிசோதனை கூட ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
எல்ஐசி எந்த வகையில் இன்னும் மற்ற காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து தனித்து விளங்குகிறது?
இந்தியாவில் செயல்பட்டு வந்த 245 க்கு மேற்பட்ட காப்பீடு நிறுவனங்களை ஒன்றிணைத்து 1956-ல் பொதுத்துறை நிறுவனமாக எல்ஐசி உருவாக்கப்பட்டது. எல்ஐசி சட்டப்பிரிவு 28-ன்படி இதிலிருந்து திரட்டப்படும் லாபத்தில் 95 சதவீத தொகை மக்களுக்கே அளிக்க வேண்டும். எஞ்சிய 5 சதவீத தொகைதான் இந்திய அரசுக்கு ஆண்டுதோறும் டிவிடெண்டாக வழங்கப்படுகிறது. இத்தகைய அரசியலமைப்பு பாதுகாப்பு சலுகை எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு மட்டுமே உள்ளது. பிற தனியார் நிறுவனங்களுக்கு இது கிடையாது. அதேபோல் எல்ஐசி சட்ட பிரிவு 37-ன் படிபார்த்தால் எல்ஐசி அளிக்கும் அனைத்து ரொக்க உத்தரவாதத்துக்கும் அரசாங்கமே முழு பொறுப்பு ஏற்கிறது. பொதுத்துறை காப்பீடு நிறுவனங்களைப் பொறுத்த வரை லாபத் தொகை என்பதே உபரி நிதியாகவே கருதப்படும்.
இது மக்களிடமிருந்து பெரும் லாபத்தை மக்களுக்கே திரும்ப அளிக்கும் வசதியாகும். ரிசர்வ் வங்கி அச்சடிக்கும் நோட்டுக்கு இணையான மதிப்பு எல்ஐசி பத்திரங்களுக்கு உண்டு. வேறு எந்த பொதுத்துறை நிறுவனங்களுக்கும் இது போன்ற வர்த்தக செயல்பாடு கிடையாது. எல்ஐசி வழங்கும் அனைத்து காப்பீட்டுத் திட்டங்களும் வேறெந்த காப்பீட்டுத் திட்டங்களையும் விட சிறந்தவை. உலகிலேயே முதல் முறையாக மணிபேக் என்ற காப்பீட்டுத் திட்டத்தை முதல் முதலில் கொண்டு வந்ததே எல்ஐசி-தான்.
எல்ஐசியின் பங்குகளை விற்பது தொடர்பான மத்திய அரசின் முடிவு மக்களிடம் எல்ஐசி மீதான நம்பிக்கையை குறைத்துள்ளதா?
தற்போது பங்குச் சந்தையில் இறங்கினாலும் எல்ஐசி-க்கான இறையாண்மை தொடரும் என நிதி அமைச்சர் உறுதியளித்துள்ளார். இப்போது ஐஆர்டிஏ-வுக்கு மட்டும் பதிலளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இனிசெபி உள்ளிட்ட அமைப்புகளுக்கு பதில் கூற வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது காப்பீடுதாரர்களுக்கு நிச்சயம் பலன் அளிப்பதாகவே இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT