Published : 01 Jun 2020 09:14 AM
Last Updated : 01 Jun 2020 09:14 AM

அரசின் உதவிகள் யாருக்கானது?

ஜெ.சரவணன்
saravanan.j@hindutamil.co.in

ஒரு குவளை தண்ணீர் என்ன பெறும்? ஒருவருக்கு ஒரு குவளை தண்ணீர் தருவது பெரிய உதவியா என்ன? சாதரணமான நேரத்தில் அது ஒன்றும் பெரிய உதவி இல்லைதான். அதுவே, பாலைவனத்தில், நா வறண்டு உயிர் போகும் தருவாயில் உள்ள ஒருவனுக்கு அந்த ஒரு குவளை தண்ணீர் எவ்வளவு பெரிய உதவி? கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் லட்சக்கணக்கான சிறு, குறு தொழில்முனைவோர்கள் எதிர்பார்ப்பது இப்படியான ஒரு உதவியைத்தான். ஆனால், அரசு அறிவித்துள்ள உதவியெல்லாம் ஒரு பகுதியினருக்கு மட்டுமாக இருப்பதுதான் வேதனையளிக்கிறது என்கிறார் சிப்காட் இருங்காட்டுகோட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் கே. பாலசுப்ரமணியன்.

கரோனா பாதிப்பிலிருந்து பொருளாதாரத்தை மீட்க அரசு அறிவித்துள்ள ரூ.20 லட்சம் கோடி தொகுப்பில் வழங்கப்பட்டுள்ள உதவிகள் பெரும்பாலும் ஒரு பகுதியினருக்கானதாக மட்டுமே உள்ளது. அரசின் உதவிகள் பாதிக்கப்பட்டோரையும், பாதிப்புகளின் அளவையும் அடையாளம் காண்பதற்குப் பதிலாக மேம் போக்காகவே அறிவிக்கப்பட்டுள்ளன. உதவி பெறுவதற்கான தகுதியை அரசு எதை வைத்து நிர்ணயம் செய்கிறது என்பதுதான் இங்கே பிரச்சினையாக உள்ளது.

13-ம் தேதி அறிவிக்கப்பட்ட உதவிகளுக்கான வழிகாட்டுதல்கள் வங்கிகளுக்கு வருவதற்கே மூன்று வாரங்கள் ஆகிவிட்டன. அறிவிப்புகள் பெரும்பாலும் கடன் உதவிகளாகவே உள்ளன. அதுவும் எல்லோருக்குமானதாக இல்லை. அரசின் ECLGS கடன் திட்டம் ஏற்கெனவே கடன் வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே கூடுதலாகக் கடன் வழங்குகிறது. எல்லோருக்கும் கடன் வழங்கும் திட்டமில்லை. கடன் இல்லாமல் தொழிலை நடத்தி வந்தவர்களுக்கு இது தண்டனை போல இருக்கிறது. இந்த கரோனா ஊரடங்கில் எல்லோருமே பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பின் அளவுதான் மாறுமே தவிர பாதிக்கப்படாதவர்கள் யாரும் இல்லை.

குறிப்பாக சிறு, குறு தொழில்கள் பெரும்பாலானவை முற்றிலுமாக முடங்கும் அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளன. கடன் அதிகம் இருப்பவர்களுக்கு அதிக கடன் உதவி கிடைக்க வழிசெய்யும் அரசின் திட்டம், கடன் இல்லாமல் இருப்பவர்களுக்கு எந்த உதவியையும் அறிவிக்கவில்லை. அரசின் உதவி என்பது பாதிக்கப்பட்ட அனைவருக்குமானதாக இருக்க வேண்டும். இழப்பிலிருந்து மீண்டுவரும்படி இருக்க வேண்டும். கோவிட் மீட்பு நிதி என்பது கடனுதவி என்பதைத் தாண்டி மானிய உதவியாகவும் இருந்தால் இழப்பிலிருந்து மீண்டும் வர உதவியாக இருக்கும்.

நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி ரீஃபண்ட் தொகையைத் தற்போது துரிதமாக வழங்கிவருவது ஆறுதலான விஷயம். ஆனால், பல நிறுவனங்கள் இயந்திரங்களை இறக்குமதி செய்வதற்காக செலுத்திய வரி லட்சக்கணக்கில் உள்ளது. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் இயந்திரங்களுக்கான இன்புட் டாக்ஸ் கிரெடிட்டையும் வழங்க ஏற்பாடு செய்யலாம். இதன்மூலம் கிடைக்கும் பணம் நிறுவனங்களுக்கும் தொழில்முனைவோர்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும். மேலும் நிறுவனங்களின் ஆண்டு விற்பனையில் ஒரு சதவீதத்தை கோவிட் மீட்பு நிதியாக வழங்கலாம்.

முன்புபோலவே நுகர்வு திரும்புவதற்கு சில காலம் ஆகும். நுகர்வும் தேவையும் இல்லாமல் சிறு, குறு தொழில்களுக்கு ஆர்டர்கள் கிடைப்பது சிரமமாக இருக்கும். எனவே எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அரசு திட்டங்களை வகுக்க வேண்டும். மாநில முதல்வர்கள், தொழில்துறை செயலாளர்கள் தேவையான பரிந்துரைகளை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும் என்று அவர் கூறினார். வேலைவாய்ப்பு அளவிலும், உள்நாட்டு உற்பத்தியிலும் முக்கியப் பங்கு வகிப்பதாக சிறு, குறு தொழில்கள் உள்ளன. தற்போது கரோனா எதிரொலியால் பாலைவனத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் நிலையில் உள்ள சிறு, குறு தொழில்களுக்கு தகுந்த உதவிகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும். இல்லையென்றால் தொழில்துறையில் பெரிய இழப்புகளைச் சந்திக்க நேரிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x