Published : 25 May 2020 09:58 AM
Last Updated : 25 May 2020 09:58 AM
சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
satheeshkrishnamurthy@gmail.com
ஊரடங்கு இருந்தாலும் பெரும்பான்மை கடைகள் திறந்தாகிவிட்டது. ஆனாலும், தொழில்கள் உடனே பழைய நிலைக்கு திரும்புமா என்பது சந்தேகம்தான். அப்படியே திரும்பினாலும் குறைந்தது சில ஆண்டுகள் ஆகலாம். கரோனா வந்து தொழில்களின் தன்மையை, மக்களின் தேவையை மொத்தமாய் மாற்றிவிட்டது என்று சொல்லலாம். இனி புதிய விதிகளை புரிந்துகொண்டு தொழிலில் மாற்றங்கள் செய்பவர்கள் மட்டுமே செகண்ட் இன்னிங்க்ஸ் ஆட களத்தில் அனுமதிக்கப்படுவார்கள். அதெல்லாம் எதற்கு, பழையபடி ஷட்டரை திறந்து கல்லாவில் அமர்ந்து கரன்சியை எண்ணினால் போதும் என்று நினைப்பவர்களை பார்த்து கரோனாவே பரிதாபப்படும். விற்கும் பொருளை, செய்யும் தொழிலை, விற்பனை உத்தியைமாற்றியமைக்க வேண்டியது இனி காலத்தின் கட்டாயம்.
கரோனா மக்களை கொஞ்ச நஞ்சம் பயமுறுத்தவில்லை. வாங்கும் பொருட்களில் கிருமி இருக்கிறதா என்று பூதக்கண்ணாடி கொண்டு பயத்தோடு பார்க்கும் அளவிற்கு பூச்சாண்டி காட்டியிருக்கிறது. எனவே பொருட்களை வழங்கும்போது முடிந்தவரை பாதுகாப்பானது நம்பிக்கையை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் வகையில் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். அதனால் உங்கள் பொருட்களை கரோனா ப்ரூஃப் ஆக்கும் வழியைத் தேடுங்கள்.
உதாரணமாக ’பீட்டர் இங்கிலாண்ட்’ தான் விற்கும் சட்டை துணியை துளசி மற்றும் வேப்ப இலையின் குணங்கள் கொண்டு தயாரிக்கமுடியுமா என்று பார்க்கிறது. ’டோனியர்’ தான் விற்கும் கோட் சூட்டை ஆண்டி-வைரல் வகையில் தயாரிக்க வழி தேடுகிறது. ‘பாட்டா’ ஆண்டி பாக்டீரியா ஷூ செய்யலாமா என்று யோசிக்கிறது. யார் கண்டது, இந்நேரம் உங்கள் போட்டியாளர்கள் தங்கள் பொருட்களை இது போல் பாதுகாப்பான தாக்கும் வழிகளைத் தேடிக்கொண்டிருக்கலாம். நீங்களும் தயாராகுங்கள்.
செய்யும் தொழிலில் திருத்தங்கள்
பல காலம் பார்க்காமல் இருந்து பார்க்கும் போது மனிதர்கள் முதல் மரங்கள் வரை மாறியிருப்பதைப் பார்க்கிறோம். செய்யும் தொழில் மட்டும் விதிவிலக்கா. தானாக மாறாவிட்டாலும் நீங்களாக மாற்ற வேண்டும். மாற்ற வேண்டி
யிருக்கும். தொழிலில் என்னென்ன மாற்றம் தேவை என்பதை சல்லடை போட்டு தேடுங்கள். சேலம் நகரிலுள்ள ‘நாலெட்ஜ் பிசினஸ் ஸ்கூல்’ தங்கள் எம்பிஏ மாணவர்களுக்கு ஆன்லைன் வீடியோ வகுப்புக்கள் நடத்தும் வகையில் தங்கள் பாடம் எடுக்கும் முறைகளை மாற்றியமைத்திருக்கிறது. ஹோம் ஒர்க் செய்யாத மாணவர்களை ஹோமிலிருந்தே ஒர்க் செய்ய வைத்திருக்கிறது! செய்யும் தொழிலை கரோனா காலத்திற்கு ஏற்றார் போல் மாற்றுங்கள். உங்கள் தொழிலின் ஆயுள் கூடும்.
மார்க்கெட்டிங்கில் புதுமைகள்
மார்க்கெட்டிங் என்றால் விளம்பரம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், அதுமட்டுமல்ல. மார்க்கெட்டிங் என்பது வாடிக்கையாளரை அறிந்து அவர் தேவையை புரிந்து அதை மற்றவர்களைக் காட்டிலும் பெட்டராக தீர்த்து அதை சொல்லிக்காட்டிக்கொண்டே இருக்கும் செயல்பாடுகளின் கலவை. இது கரோனா காலம், பாதி கடைகள் திறக்கவில்லை, மீதி கடைகளில் கூட்டமில்லை, இதில் எங்கிருந்து பொருளை விற்பது என்று சால்
ஜாப்பு கூறினால் சப்ஜாடாய் தொழிலை மூடவேண்டியதுதான். உங்கள் பொருளின் அவசியத்தை வாடிக்கையாளர் உணர என்ன செய்யலாம் என்று சிந்தியுங்கள். நெருக்கடி காலத்தில் உங்கள் பொருளுக்கு மக்கள் முன்னுரிமை தர என்ன செய்வது என்று யோசியுங்கள்.
கரோனா வந்த பிறகு தான் பல ஆண்களுக்கு தங்கள் வீட்டில் சமையல் அறை எங்கிருக்கிறது, எப்படி இருக்கிறது என்றே தெரிந்திருக்கிறது. இன்று பலர் தாங்களே சமையல் செய்வது முதல் மனைவிக்கு உதவுவது வரை கிச்சனில் அதிக நேரம் செலவழிக்கிறார்கள். இதை தங்களுக்கு சாதகமாக்கும் வண்ணம் நாமக்கல் நகரைச் சேர்ந்த ‘அர்பன் ஹோம்ஸ்’ என்ற ஃபர்னிச்சர் கடை வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ஈமெயில் மூலம் வாடிக்கையாளர்களிடம் ‘இப்பொழுது புரிகிறதா உங்கள் மனைவி சாதாரண கிச்சனை கட்டிக்கொண்டு எப்படி கஷ்டப்படுகிறார் என்று. அவளுக்கு நீங்கள் தாஜ் மஹால் கட்டித்தர வேண்டாம், அட்லீஸ்ட் ஒரு அழகான மாடுலர் கிச்சன் ஆர்டர் செய்து தரலாமே. எங்களை அழையுங்கள்.
உங்கள் வீடு தேடி வந்து செய்து தருகிறோம்’ என்று விளம்பரப்படுத்துகிறது. என்ன அழகான ஐடியா பாருங்கள். சமையல் அறையில் வேர்க்க விறுவிறுக்க மனைவிக்கு உதவிவிட்டு வந்து அமரும் கணவன் வாட்ஸ் அப்பில் இந்த மெசேஜை படித்தால் அர்பன் ஹோம்ஸ் கடையை உடனே அழைப்பாரா மாட்டாரா. இவ்வகை மார்க்கெட்டிங்தான் இனி உங்கள் தொழிலுக்கு ஆக்சிஜன் தரும் வெண்டிலேட்டர் என்பதை உணருங்கள்! உலகம் அழியப் போவதில்லை. ஆனால் நிறைய மாறப்போகிறது. தொழிலில் முழுமையான மாற்றம் செய்யும் முறைகளை முழு நேரமும் சிந்தியுங்கள். தொழில் தழைக்க அல்ல, இன்றைய சூழலில் பிழைத்திருக்கவே இது அவசியம். புரிந்தவர்கள் தொழிலுக்கு தடுப்பூசி தரப்படும். மாற மறுக்கும் தொழில்கள் சோஷியல் டிஸ்டன்சிங் செய்யப்படும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT