Published : 31 Aug 2015 10:53 AM
Last Updated : 31 Aug 2015 10:53 AM
ரசகுல்லா- பெயரைக் கேட்டவுட னேயே வாயில் எச்சில் ஊறு கிறதா? ஜீராவில் தள தள என வெள்ளை நிறத்தில் மிதக்கும் ரசகுல்லாவை உங்கள் முன்னே நீட்டினால், ரசகுல்லாவின் பூர்விகம் எது என்று கேள்வி கேட்டுக் கொண்டா இருப்பீர்கள்.
ஆனால் ரசகுல்லாவின் தாயகம் தங்கள் மாநிலம்தான் என்று ஒடிசா மாநிலமும், இல்லவே இல்லை எங்களுடையதுதான் என்று வங்காளிகளும் வரிந்து கட்டிக் கொண்டு மல்லுக்கு நிற்கின்றனர்.
யாருடையதாக இருந்தால் என்ன? வாங்கி சுவைக்க வேண்டியதுதானே என்கிறீர்களா... ஆனால் அவர்கள் அப்படி விடுவதாக இல்லை. ஆமாம் ரசகுல்லாவுக்கு புவிசார் குறியீடு (Geographical Indication -GI) கோரி விண்ணப்பித்துள்ளது ஒடிசா மாநில அரசு.
1999-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் புவிசார் குறியீட்டுக்காக ஒரு சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி ஒரு குறிப்பிட்ட இடத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு அவற்றின் தனித்தன்மைக்காக இத்தகைய புவிசார் குறியீடு அளிக்கப்படும். உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினராக உள்ள இந்தியா அதில் உள்ள ஒப்பந்தப்படி இந்த சட்டத்தைக் கொண்டு வந்தது. இதன் மூலம் வர்த்தகம் தொடர்பான தாவாக்களைத் தவிர்க்கவும், காப்புரிமை சட்டத்தையும், புவிசார் குறியீட்டையும் அளிக்கிறது.
இந்த குறியீடு பெற்ற ஒரு பொருளை மற்ற எந்த ஒரு நிறுவனமுமோ அல்லது வேறு பகுதியினரோ தயாரிக்க முடியாது. இதுவரை 193 பொருள்கள் இவ்விதம் புவிசார் குறியீடு பெற்றுள்ளன.
தற்போது ரசகுல்லாவுக்கு புவிசார் குறியீடு கோரி ஒடிசா விண்ணப்பித்திருப்பதன் நோக்கம், இது தங்கள் மாநிலத்தில் தலைநகர் புவனேஸ்வரத்துக்கும் கட்டாக் நகருக்கும் இடையே உள்ள பஹாலா எனும் கிராமத்தில்தான் தொடக்க காலத்தில் தயாரிக்கப்பட்டது என்பதை நிரூபிக்கவே என்கிறது ஒடிசா. இதன் மூலம் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் தங்களது தயாரிப்பு உரிமையை நிலை நாட்ட முடியும் என்பதால், இதற்கு பஹாலா ரசகுல்லா என புவிசார் குறியீடு அளிக்குமாறு ஒடிசா அரசு விண்ணப்பித்துள்ளது.
நம்மூர் திருநெல்வேலி அல்வா, வில்லிபுத்தூர் பால்கோவா, மணப்பாறை முறுக்கு போல இப்போது தனது அடையாளத்தை தேடி ஓடிக் கொண்டிருக்கிறது ரசகுல்லா.
பஹாலா கிராம ரசகுல்லா பிரபலமானது, 50 ஆண்டுகளுக்கும் மேலான புகழ் கொண்டது. இந்த கிராமத்தில் மட்டுமே 70-க்கும் மேற்பட்ட இனிப்பகங்கள் உள்ளன. இதன் ஆண்டு வருமானம் மட்டும் ரூ. 12 கோடி. இங்கு தயாராகும் ரசகுல்லா சற்று பிரவுன் நிறத்தில் (நம்மூர் குளோப்ஜாமூன் போல) இருக்கிறது. இங்குள்ளவர்களுக்கு போதிய பேக்கிங் வசதிகள் இல்லாததால் வெளிநாடுகளுக்குச் அனுப்ப முடிய வில்லை. மாநில அரசு தற்போது இதற்கான வசதிகளை உருவாக்கி கொடுக்க உள்ளது.
பூரி ஜெகன்னாதர் கோவிலின் தேர் திருவிழா முடிவில் கடவுளுக்கு நைவேத்ய பண்டம் ரசகுல்லாதான். இந்த ஆலயத்தில் 300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ரசகுல்லா நைவேத்தியம் செய்யப்பட்டதற்கான சான்றுகள் உள்ளதாக கூறுகிறார் பூரி ஆலயத்தைப் பற்றிய வரலாற்றில் அறிஞர் சரத் சந்திர மகாபாத்ரா. இதற்கிடையே பஹாலா ரசகுல்லாவுக்கு புவிசார் குறியீடு வழங்குவதற்கு ஒடிசாவிலேயே சில முன்னணி இனிப்பக உரிமையாளர்கள் எதிர்ப்பு காட்டுகின்றனர். இங்குள்ள சேலேபூர் என்கிற ஊரில் மிகவும் பிரபலமான பிகலானந்த் கர் ஸ்வீட் உரிமையாளர் பிரசாந்த் கர், இன்னொரு கதையை கிளப்புகிறார். ஒடிசாவில் ரசகுல்லாவை 80 ஆண்டுகளுக்கு முன்பே பிரபலப்படுத்தியது தங்கள் மூதாதையர்கள்தான், அந்த காலத்தி லேயே ரசகுல்லா தயாரிப்புக்காக பயிற்சி மையத்தைத் எங்கள் பாட்டனார்கள் தொடங்கியுள்ளனர் என்று கூறியுள்ளார். தவிர ஒடிசா மாநிலம் ரசகுல்லா மூலம் ஈட்டும் வருமானம் ரூ.100 கோடியைத் தொடும் என்கிறார் இவர்.
ஒடிசா கதை இப்படியிருக்க, ரசகுல்லா என்றால் அது பெங்காளி ஸ்வீட்தான் என்று எடுத்த எடுப்பிலேயே உரிமை கொண்டாடுகின்றனர் கொல்கத்தா வாசிகள். இங்கு தயாராகும் ரசகுல்லா வெள்ளை நிறத்தில் இருக்கும்.
1866-ம் ஆண்டு வடக்கு கொல்கத் தாவில் பாக்பஜார் எனுமிடத்தில் நோபின் சந்திர தாஸ் முதன் முதலில் ரசகுல்லாவை தயாரித்து விற்பனை செய்துள்ளதாக வரலாற்று ஆதாரம் காட்டுகின்றனர் வங்காளிகள்.
நோபல் அறிஞர் ரவீந்திரநாத் தாகூரை பார்க்கச் செல்லும்போதெல்லாம் இங்கிருந்து ரசகுல்லாவை வாங்கிச் சென்றுள்ளார் பிரபல மருத்துவர் பசுபதி பட்டாச்சார்யா. ஒரு சமயம் இந்த கடையில் ரசகுல்லா தீர்ந்து போக மற்றொரு கடையில் வாங்கிச் சென்று தாகூரிடம் தந்தபோது, அது வழக்கமான சுவையில் இல்லை என்று கூறினாராம்.
கொல்கத்தாவில் 150 ஆண்டுகள் பழமையான கே சி தாஸ் இனிப்பகத்தில் தயாராகும் ஆரஞ்சு, மாம்பழ ரசகுல்லா மற்றும் வெல்லத்தில் தயாராகும் ரசகுல்லா இனிப்பு உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பிரபலம்.
இருந்தாலும் புவி சார் குறியீட்டுக்காக ஒடிசா மாநிலம் விண்ணப்பித்திருப்பது பெங்காளிகளை சற்று வருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது. தங்களது வாழ்வின் அங்கமாக உணரும் ரசகுல்லாவின் பூர்வீகம் வேறு இடமா என்பதை பெங்காளிகளால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. இருந்தாலும் உண்மை சற்று கசப்பாகத் தானே இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT