Published : 30 Mar 2020 09:13 AM
Last Updated : 30 Mar 2020 09:13 AM
சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
satheeshkrishnamurthy@gmail.com
அமெரிக்க விஞ்ஞானிகள் மண்டையைப் பிய்த்துக் கொண்டிருந்தார்கள். ஏன் பல ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்கள் தினம் இரவு சொல்லிவைத்தது போல் ஹாங் ஆகின்றன என்று. ‘வாட்ஸ் அப்’க்கு ஒரே குழப்பம், ஏன் இத்தனை டிராபிக் என்று. அண்டை நாட்டு சதியா? தீவிரவாதிகள் தாக்குதலா? கம்ப்யூட்டர் வைரஸ் அட்டாக்கா?
அதெல்லாம் ஒன்றுமில்லை. அமெரிக்காவில் இரவு துவங்கும் போது இந்தியாவில் காலை நேரம். நம்மவர்கள் கண் விழித்து பல் தேய்க்கிறார்களோ இல்லையோ படுத்தவாக்கிலேயே தங்கள் ஸ்மார்ட்ஃபோன் ஸ்கிரீனை தேய்த்து ஓபன் செய்து தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு ‘குட் மார்னிங்’ மெசேஜ் அனுப்பித் தொலைப்பதுதான் காரணம்.
ஒன்றிரண்டு பேர் குட் மார்னிங் மெசேஜ் அனுப்பினால் இணையதளம் ஸ்தம்பிக்குமா என்று கேட்பவர்களின் கவனத்திற்கு. இரண்டு பேர் அனுப்பினால் தேவலையே. தினம் இந்தியாவில் காலை 2 கோடி மெசேஜ் அனுப்பப்படுகிறதாம். அதுவும் வார்த்தையாக அல்ல. கூடவே பூ, சூரியன், இயற்கை என்று படம் வேறு. இதனால் மெசேஜ் சைஸ் அதிகரிப்பதால் இணையதளமே இளைத்துவிடுகிறது. வாட்ஸ் அப் வாய் பிளக்கிறது!
‘கூகுளி’ல் காலையில் புதுப் புது குட் மார்னிங் மெசேஜ் மற்றும் படங்களின் தேடல் பத்து மடங்கு அதிகரித்திருக்கிறதாம். ‘பின்ட்ரெஸ்ட்’ என்ற சோஷியல் மீடியா சைட் இந்தியாவிற்கென்றே ‘படத்துடன் குட் மார்னிங் மெசேஜ்’ செக்ஷன் ஒன்றை உருவாக்கி கலர் கலராக நிரப்பியிருக்கிறார்கள்.
வேலை இருப்பவர்கள், வேலை இல்லாதவர்கள் எனப் பெரும்பாலானோர் வேலை மெனக்கெட்டு காலை அலாரம் வைத்து எழுந்து கூகுளில் தேடி புதுப்புது படங்களாக அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் கரோனா வைரஸ் தயவால் 21 நாட்கள் வேலை இல்லாமல் சும்மா இருந்தால் எப்படி இருக்கும்?
இது ஏதோ காலையில் மட்டும் நடக்கும் கதை என்றால் தேவலை. இதையே முழு நேர தொழிலாக கொண்டு மெசேஜ் அனுப்புவதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது. இதற்கிடையில் தத்துவ மேசேஜ்கள் வேறு. வந்த மெசேஜை எல்லாம் டிலீட் செய்து நிமிர்வதற்குள் ‘கீப் ஸ்மைலிங்’ என்று நம் வெந்த புண்ணில் வாட்ஸ் அப் மெசேஜ் பாயும். சனி, ஞாயிறாவது நிம்மதியாய் தூங்குவோம் என்று
நினைத்தால் ‘என்ஜாய் யுவர் வீக்எண்ட்’ என்று அரை டஜன் முறை செல்போன் அலறும்.
இது மட்டுமல்ல ஒவ்வொரு தினத்தையும் ஏதோ ஒரு ‘டே’ என்று கொண்டாடி தீர்க்க வேண்டும். ‘மதர்ஸ் டே’, ‘வேலன்டீன்ஸ் டே’ என்று தொடங்கிய இந்த வியாதி ‘சாக்லெட் டே’, ‘சிக்கன் டே’, ‘மட்டன் டே’ வரை வளர்ந்துவிட்டது. விரைவில் ‘புளியோதரை டே’, ‘கீரை வடை டே’ என்று நம்மவர்களும் இந்த ஜோதியில் ஐக்கியமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!
அதுவும் புது வருடம் பிறக்கக் கூடாது, எதோ காணாததை கண்டது போல் குதித்து ‘ஹலோ எவ்ரிபடி விஷ் யூ அ ஹாப்பி நியூ இயர்’ என்று சகலகலா வல்லவன் கணக்காய் வாட்ஸ் அப்பில் ஓட்டிக்கொண்டு வந்துவிடுவார்கள். 2020 பிறந்த போது இந்தியாவில் அனுப்பப்பட்ட விஷஸ் மெசேஜ் எண்ணிக்கை மட்டுமே 2,000 கோடியாம். அதுவும் வார்த்தைகள் மட்டுமில்லாது கூட கொசுரு இணைப்பாக ஒரு படம் வேறு. இணையதளம் என்ன பாடுபட்டிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். இப்படியே போனால் இந்தியர்களுக்கென்று தனியாய் ஒரு இணைய உலகத்தை உருவாக்க வேண்டியிருக்கும்!
நம் பிறந்த நாள் நமக்கு நினைவில்லை என்றாலும் இவர்களுக்கு எப்படித்தான் தெரிந்து தொலைக்கிறதோ. வாழ்த்துகிறேன் என்று துவங்கி அடுத்த பிறந்த நாள் வரை நம் செல்லை அடிக்கடி அலற வைத்து ‘ஏன் பிறந்தாய் மகனே’ என்று நம்மை பாட வைத்துவிடுகிறார்கள். அன்லிமிடெட் டேட்டா குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக இப்படியா?
ஏன் இப்படி இருக்கிறோம்? எங்கிருந்து இதை செய்ய நமக்கு நேரம் கிடைக்கிறது? திட்டமாட்டீர்கள் என்றால் ஒன்று சொல்கிறேன். பொதுவாகவே நம்மிள் பலர் வெட்டியாய் இருப்பதையே விரும்புகிறோம். ‘நான் அப்படியில்லை, என்னை சொல்லாதே’ என்று நீங்கள் கூறலாம். நீங்கள் எப்படி தெரியாது, ஆனால் நூற்றி முப்பது கோடி இந்தியர்கள் தாங்கள் வெட்டியாய் இல்லை என்றுதான் கூறுகிறார்கள். எல்லோருமே ‘பிஸி’. நான் உட்பட. ஆனால் உண்மை வேறு. நம் கால்களை கரையான் அரிக்கும் அளவிற்கு வெட்டியாய் இருக்கிறோம். பொழுது போகவில்லை என்றால் சுவற்றில் பெயிண்ட் காய்வதைக் கூட பார்த்துக்கொண்டிருப்போம். பல்லி பொறாமைப்படும் அளவிற்கு ஒரே இடத்தில் ஆணியடித்தது போல் கூட அமர்ந்திருப்போம். வெட்டியாய் இருப்பதில் நமக்கு ஏனோ ஒரு அசாத்திய வெறித்தனம்!
சரி, மீண்டும் வாட்ஸ் அப் விஷயத்துக்கு வருவோம். வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்புவது ஒருபக்கம் இருக்கட்டும். மறுபக்கம் இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன. சராசரியாக இந்தியர் ஒருவர் வாரத்துக்கு 19.1 மணி நேரம் பாட்டு கேட்கிறான் என்கிறது ஒரு புள்ளி விவரம். ஒரு நாளைக்கு 2.7 மணி நேரம் காதுகளுக்கு குதூகலம் கொடுக்கிறோம். அதாவது தினம் சுமார் 54 பாடல்கள் கேட்கிறோம். இசைஞானி இளையராஜா கூட தினம் இத்தனை பாடல்கள் கேட்பாரா என்பது சந்தேகமே!
அடுத்து டிவி. இந்தியர்கள் ஒரு நாளைக்கு மூன்றேமுக்கால் மணி நேரம் டிவி பார்க்கிறோம் என்கிறது இன்னொரு ஆய்வு. இவ்விஷயத்தில் தென் இந்தியர்களை அடித்துக்கொள்ள முடியாது. தினம் நான்கு மணி நேரத்திற்கு மேல் டிவி பார்க்கிறார்களாம். கையில் கரண்டி பிடிக்கும் நேரத்தை விட ரிமோட்டை பிடிக்கும் நேரம் தான் அதிகம். ஆளுக்கொரு மொபைலை கையில் வைத்து நோண்டிக்கொண்டிருந்தாலும் டிவி ஓடிக்கொண்டிருக்கும். பார்க்கிறோமோ இல்லையோ. தூங்கிய பின்னரும் விடிய விடிய ஓடும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!
உங்களை ஒன்று கேட்கிறேன். மனசாட்சிக்கு விரோதமில்லாமல் பதில் சொல்லுங்கள். நீங்கள் டீவியில் என்னென்ன பார்க்கிறீர்கள் என்பது அனைவருக்கும் தெரிய வரும் என்று ஒரு நிலை வந்தால் உங்கள் டீவி பார்க்கும் நேரம் கணிசமாக குறையும் என்கிறேன். இல்லை என்று கூற முடியுமா!
இன்று டீவியைவிடவும் ஒரு விஷயம் அசுர வளர்ச்சி காண ஆரம்பித்திருக்கிறது. நம் வெட்டித்தனத்திற்க்கு வெல்லம் போல் கிடைத்த ஓடீடீ தான் அது. வீடியோ ஸ்ட்ரீமிங் செய்யும் ‘நெட்ஃளிக்ஸ்’, ‘அமேஸான் பிரைம்’ போன்றவை. டிவியையாவது அது இருக்கிற இடத்தில் இருந்தபடி பார்க்கிறோம். ஆனால், இந்த ஓடிடி பிளாட்ஃபார்ம்கள் லேப்டாப், மொபைல் என எல்லாவற்றிலும் பார்க்கலாம். பார்க்கலாம் என்ன பார்க்கலாம், பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஓடிடியை நம்மவர்கள் பார்க்கும் நேரம் சென்ற வருடத்தை விட 140% கூடியிருக்கிறதாம். எப்பவாவது பார்ப்பேன் என்று கூறாதீர்கள்.
பலர் எப்பவுமே அதைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். சாப்பிடும்போது, குளிக்கும்போது, பாத்ரூமில் என எல்லா இடங்களுக்கு கூடவே இவற்றைக் கொண்டுசெல்லும் அளவுக்குப் பலரின் வாழ்க்கையோடு ஒன்றி இருக்கிறது. ஒரு சீரியல் முடிந்தவுடன் மற்றொன்று, ஒரு படம் முடிந்த கையோடு அடுத்த படம் என்று பார்க்கிறோம். இதை பிஞ்ச் வாட்சிங் என்கிறார்கள். உலகிலேயே பிஞ்ச் வாட்சிங் செய்வதில் இரண்டாவது இடம் இந்தியாவிற்குத்தானாம்.
வீட்டில் தொடங்கும் இந்தப் போக்கு ஆபீஸ் வரை நீளும் அபாயமும் இருக்கிறது. கம்பெனி மேனேஜர் முதல் கடைநிலை ஊழியர் வரை இதுபோன்ற நேரத்தை விரயம் செய்யும் காரியங்களில் சராசரியாக தினம் 30% நேரத்தை வீணடிக்கிறார்கள் என்கிறது அமெரிக்க ஆய்வு. கம்பெனி முதலாளிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. வேலை நேரத்தில்
வாட்ஸ் அப் மெசேஜ், யூ ட்யூபில் வீடியோ பார்ப்பது, வெட்டிப் பேச்சு என்று குறைந்தபட்சம் வாரத்திற்கு சுமார் ஏழு மணி நேரம் வேஸ்ட் செய்கிறார்களாம்.
அமெரிக்க ஊழியர்கள் தினம் இரண்டு மணி நேரம் வெட்டியாய் நேரத்தை வேஸ்ட் செய்கிறார்கள் என்கிறது இன்னொரு ஆன்லைன் ஆய்வு. வேலை நேரத்தில் பணிக்கு சம்பந்தமில்லாத இண்டர்னட் பார்ப்பது, சக ஊழியர்களுடன் அரட்டை, டீ காபி என்று இந்த வெட்டித்தனங்களால் ஆண்டுதோறும் 759 பில்லியன் டாலர்கள் இழப்பாம். தலை சுற்றுகிறது!
இந்தியாவில் இவ்வகை ஆய்வுகள் செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. எப்படியும் வெட்டியாகத்தான் இருப்பார்கள், எதற்கு ஆய்வு செய்துகொண்டு என்று விட்டுவிட்டார்களோ என்னவோ. டைம் பாஸ் என்ற வார்த்தை பிரயோகத்தை கண்டுபிடித்தவர்கள் ஆயிற்றே நாம். ஆனால், இப்படி வெட்டியாகப் பொழுதைக் கழிப்பதில் ஆர்வமுள்ள நாம், கரோனா காரணமாகத் தனிமைப்படுத்தலில் இருக்கும் நாம் வீட்டை விட்டு வெளியில் எங்கும் வர முடியாமல் சும்மா இருக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கும் இந்த சமயத்தில் வெட்டியாய் சும்மா இருப்பதை விரும்பாததுபோல் பேசிக்கொண்டிருக்கிறோம்.
இதுவரையில் நாம் வெட்டியாய் இணையத்தில் எல்லா வேலைகளையும் இன்று எல்லோருமே செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறோம். இந்த 21 நாட்களும் இணையத்தை விட்டால் வேறு வழியில்லை என்ற அளவுக்கு நிலைமை இருக்கிறது. ஃபேஸ்புக்கில் பதிவுகள் இடுவது அதிகரித்திருக்கிறது. இதுபோதாதென்று, இதுவரை இதெல்லாம் எதற்கு வெட்டி வேலை என்றிருந்தவர்கள் கூட, டிக்டாக், ஹெலோ, ஷேர்சேட் என்று எல்லா ஆப்களையும் டவுன்லோட் செய்து உலா வர ஆரம்பித்துவிட்டார்கள். வாட்ஸ் அப்கள் செய்திகளாலும் வதந்திகளாலும் நிரம்பி வழிகிறது. இணையத்தின் பயன்பாடு முந்தைய நாட்களை விட கரோனா நாட்களில் 30 சதவீதம் உயர்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அத்தியாவசியப் பொருட்களுடன் சேர்த்து இன்று மக்களின் தவிர்க்க முடியாத ஒன்றாக இந்த இணையம் உள்ளது. எதுவுமே செயல்படாவிட்டாலும் இணையம் என்பது பொருளாதாரத்தைக் காக்கும் சக்தியாக மாறலாம் என்பதை இது உணர்த்தியிருக்கிறது. இணைய வசதி மூலம் வீட்டிலிருந்தே வேலை செய்யும் சாத்தியங்களும் இனி அதிகரிக்கலாம் என்றே தோன்றுகிறது. இனி வீட்டிலேயே இருந்தாலும் பொருளாதாரத்துக்குப் பெரிய பாதிப்பு இருக்காது போலிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT