Published : 30 Mar 2020 08:34 AM
Last Updated : 30 Mar 2020 08:34 AM

எண்ணித் துணிக: கொஞ்சம் ஈஸி, கொஞ்சம் கஷ்டம்!

சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
satheeshkrishnamurthy@gmail.com

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை. ஸ்டார்ட் அப் எல்லாம் தழைத்துவிட்டால் `எண்ணித் துணிக’ பகுதி தேவையில்லை! சமயங்களில் ஸ்டார்ட் அப்பில் எதிர்பார்த்த விற்பனை நடப்பதில்லை. விரும்பிய வருமானம் கிடைப்பதில்லை. அது போன்ற ஏழரை நாட்டு சனி பீடித்த சமயங்களில் என்ன செய்வது? கம்பெனியில் கணபதி ஹோமம் செய்யலாம். குலதெய்வத்திற்கு கிடா வெட்டி பொங்கல் வைக்கலாம். இதைச் செய்தால் விற்பனை கூடும் என்றால் கணபதி ஹோமம் செய்யும் சாஸ்திரிகள் அனைவரும் பிஸியாய் இருப்பார்கள். ஊரில் ஒரு கிடா பாக்கி இருக்காது.

என் போன்ற கன்சல்டன்ட்களுக்கு வேலை இருக்காது. நல்ல காலம், ஆண்டவன் எங்களை கைவிடவில்லை. கன்சல்டன்ட்கள் தங்கள் தொழில் தழைக்ககிடா வெட்டினார்களா என்பது பற்றி தகவல் இல்லை! நீங்கள் ஸ்டார்ட் அப்தொடங்கும் போது நிறைய கனவு கண்டிருப்பீர்கள். ஸ்ட்ராங் ஐடியா, சூப்பர் பிளான், செம டீம் எல்லாம் ரெடி. இனி பிராண்டை பெட்டி பெட்டியாய் விற்று கத்தை கத்தையாய் பணம் பெற்று புதிது புதிதாய் பிசினஸ் செய்து பணக்காரர் லிஸ்ட்டில் பில்கேட்ஸ் பெயருக்கு பக்கத்தில் இடம்பெறலாம் என்று கண்ணை திறந்துகொண்டே கனவு கண்டிருப்பீர்கள்.

ஆனால் ஆரம்பித்த நாள் முதல் சில்லறை கேட்டு கூட உங்கள் கடைக்கு யாரும் வரவில்லை என்றால், என்ன செய்வது. அட்ரஸ் விசாரிக்ககூட உங்கள் ஆபீசில் ஆள் நுழையவில்லை என்றால் யாரைச் சொல்வது. எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் என்னத்தை செய்வது. பெரியதாக ஒன்றும் வேண்டாம், உங்களை நீங்களே சில கேள்விகள் கேட்டுப் பாருங்கள். விட்டேத்தியாய் பதில் தேடாமல் விவரமாய் பாருங்கள். வியாபார வில்லங்கங்கள் விளங்கும். விடியலுக்கு வழி தெரியும். விற்கும் பிராண்ட் வாடிக்கையாளருக்குத் தேவையா? இக்கேள்விக்கு பதில் கிடைத்தவுடன்தான் ஸ்டார்ட் அப் தொடங்கியிருக்கவேண்டும்.

ஆனால் பலர் ஆர்வ கோளாறில் கிடைத்த ஐடியாதான் அடுத்த ஜாக்பாட் என்று அவசரப்பட்டு ஆராயாமல் தொழில் தொடங்கி அவதிப்படுகின்றனர். உங்கள் பொருள் வாடிக்கையாளரின் தேவையை மற்ற போட்டியாளர்களை விட பெட்டராக பூர்த்தி செய்கிறதா என்று பாருங்கள். இல்லையெனில் போட்டியாளர்களை விட உங்கள் பிராண்டை வித்தியாசப்படுத்தும் வழி தேடுங்கள். ஒன்று புரிந்து கொள்ளுங்கள். பிராண்ட் வெற்றி பெற அது வாடிக்கையாளருக்கு தேவையானதாக இருக்கவேண்டும். மற்றவர்களைவிட வித்தியாசப்பட்டிருக்க வேண்டும். உங்கள் பிராண்ட் வித்தியாசம் காலப்போக்கில் குறையலாம். அதனால் விற்பனை சரியலாம். பிராண்ட் வித்தியாசம் குறையாமல் பார்த்து போட்டியாளர்களை விட பெட்டர் என்று காட்டவேண்டிய பொறுப்பு உங்களுடையது. செய்து பாருங்கள்.

சரிந்த விற்பனை விரிந்து நிற்கும்! பிராண்டின் விலை சரியாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதா? பொருள்விலையை குறைத்தால் விற்பனை கூடும் என்பது எல்லா நேரங்களிலும் நடப்பதில்லை. எல்லா பொருட்களுக்கும் பொருந்துவதில்லை. மற்றவற்றைவிட எங்கள் மினரல் வாட்டர் பாட்டில் விலை கம்மி, வெறும் எட்டு ரூபாய் மட்டுமே என்று விற்றுப் பாருங்கள். முகம் கழுவ கூட மக்கள் அதை வாங்கமாட்டார்கள். அத்தனை குறைவான விலையில் விற்கப்படும் தண்ணீர் எப்படி தரமானதாக இருக்க முடியும் என்று சந்தேகப்படுவார்கள். உங்கள் பிராண்டின் தன்மைக்கும், தரத்திற்கும், பயனுக்கும் ஏற்றபடி விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதா என்று பாருங்கள்.

அங்கு பிராப்ளம் இருந்தால் சரி செய்யுங்கள். போட்டியாளர்களை விட உங்கள் பொருள் விலை அதிகமாக கூட இருக்கலாம், தப்பில்லை. அதன் பயன் வாடிக்கையாளருக்கு தேவையானதாக இருக்கவேண்டியது முக்கியம். ‘அக்வா ஃபீனா’ மற்ற பிராண்டுகளை விட இரண்டு ரூபாய் அதிகம் இருந்தும் அமோகமாய் விற்பதை கவனியுங்கள். பிராண்ட் பற்றிய தெரிதல் புரிதல் இருக்கிறதா? தெரியாத பிராண்டை யார் வாங்குவார்கள். பிராண்டை பற்றி முழுமையாக தெரியாதபோதும் எப்படி வாங்குவார்கள். பிராண்ட் பற்றிய விழிப்புணர்வை தேவையான அளவு இருக்கிறதா என்று தேடுங்கள். வெறும் விழிப்புணர்வு மட்டுமே பத்தாது. பிராண்ட் பெயர் மட்டும் தெரிந்தால் மட்டுமே யாருக்கும் வாங்கத் தோன்றாது.

பிராண்டின் தன்மைகளும் பயன்களும் முழுமையாக தெரிந்திருக்க வேண்டும். தேவையை பூர்த்தி செய்யும் விதம் புரிந்திருக்கவேண்டும். அப்பொழுது தான் பிராண்ட் வாடிக்கையாளர் கண்ணில்படும், மனதில் நிற்கும், வாங்கவும் தோன்றும். உங்கள் பிராண்ட் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும் அளவுக்கு வாடிக்கையாளருக்கு தெரிந்திருந்தால்தான் உங்கள் கல்லா நிறையும். பிராண்ட் சரியாக விநியோகிக்கப்படுகிறதா? பொருள் பற்றி தெரிதலும் சரியான விலையும் இருந்தால் மட்டும் பத்தாது. விநியோக முறையும் சரியானதாக இருத்தல் அவசியம்.

பல நேரங்களில் பிராண்ட் விற்பனை குறைவிற்கு காரணம் அது சரியான விநியோக முறைப்படி விற்கப்படாததால். ஒன்று, பிராண்ட் உங்கள் வாடிக்கையாளர் வாங்கும் கடையில் இல்லாமல் போகலாம். இல்லை வாடிக்கையாளர் கண்ணில் படாத வண்ணம் கடையில் மறைந்திருக்கலாம். இன்றைய அவசர உலகில் வாடிக்கையாளர் உங்கள் பிராண்ட் கடையில் இல்லாத போது அடுத்த கடை தேடி போகமாட்டார்.

கண்ணில் படாமல் இருந்தால் தேடி வாங்கும் பொறுமை இல்லாமலும் இருப்பார். இவ்வளவுதான் பிராப்ளங்களா. இதை சரிசெய்துவிட்டால் தொங்கிக் கொண்டிருக்கும் என் தொழிலை தூக்கி செங்குத்தாக நிறுத்திவிட முடியுமா என்று கேட்பவர்கள் ஆர்வத்தை மனமார பாராட்டுகிறேன். ஸ்டார்ட் அப் அத்தனை ஈசியென்றால் அனைவரும் ஆரம்பித்திருப்பார்களே. ஏன், நானே கூட ஆரம்பித்திருப்பேனே. இப்படிகன்சல்டன்ட்டாய் கம்ப்யூட்டரில் கட்டுரை எழுதிக்கொண்டிருக்க மாட்டேன். விற்பனை வில்லங்களும் விவரங்களும் இன்னமும் விலாவாரியாய் உண்டு. தொடர்ந்து விவாதிப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x