Published : 16 Mar 2020 09:36 AM
Last Updated : 16 Mar 2020 09:36 AM
உலகை அச்சுறுத்தும் கொடிய வைரஸாக உருவெடுத்துள்ள கோவிட்-19, ஒரு புதிய பாடத்தை மக்களிடம் விதைத்துள்ளது. தனி நபர் சுகாதாரம் மட்டுமின்றி சுற்றுப்புற தூய்மை மிகவும் அவசியம் என்பதுதான் அது. தான் மட்டும் சுத்தமாக இருந்தால் போதாது, சுற்றுப்புறமும் தூய்மையாக இல்லாவிடில் பாதிப்புக்குள்ளாக நேரிடும் என்பதை உலகிற்கே உணர்த்தியுள்ளது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் கோவிட்-19 வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அரசும் இந்த நோயைக் கட்டுப்படுத்துவது மற்றும் நோயைக் கண்டறிவதற்கான சாதனங்களை வாங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஆனால் இந்த வைரஸ் பரவும் வேகம் மிக அதிகமாக உள்ளது. அதை ஈடுகட்ட பரி சோதனை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியது அவசியமாகிறது.
ரத்த மாதிரி சேகரிப்பு மையங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது. இத்தகைய சூழலில் அரசுக்கு உதவ தனியார் நிறுவனங்களும் முன்வரலாம். ஏனெனில் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையின் வேகத்தைவிட நோய் பரவும் வேகம் அதிகமாக உள்ளது.
தற்போதைக்கு ஒரு லட்சம் பரிசோதனை கருவிகள் இருப்பில் உள்ளதாகவும் கூடுதலாக வாங்கவும் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதுபோன்ற சமயங்களில் இத்தகைய சோதனை கருவிகளை உள்நாட்டிலேயே தயாரிப்பது மேலும் பலனளிக்கும். அதிக எண்ணிக்கையிலான உற்பத்திக்கும் வழி வகுக்கும்.
இதன் மூலம் அதிக அளவிலான மக்களைப் பரிசோதித்து நோய் தாக்குதல் இல்லாதவர்களை அடையாளம் காண முடியும். தங்களுக்கு நோய்இல்லை என்பதே மனதளவில் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும். இது கோவிட்-19 வைரஸ் பீதியால் ஏற்பட்டுள்ள மன உளைச்சலிலிருந்து விடுபட வழியேற்படுத்தும்.
தற்போது இந்தியாவில் 52 சோதனை மையங்களும், 56 ரத்த மாதிரி சேமிப்பு மையங்களும் உள்ளன. இவை அனைத்துமே அரசு மையங்களாகும். இதற்கு முன்பு சார்ஸ் தொற்று பரவியபோது ஏற்படுத்தப்பட்டவை. தற்போது கோவிட்-19 வைரஸ்தோற்றுநோய் சோதனைக்கும் பயன்படுத்தப்படுகின்றன.
அரசும் தனியார் வசம் உள்ள பரிசோதனை மையங்களுக்கு அங்கீகாரம் அளித்து அவற்றிலும் நோய் கண்டறிதல் சோதனை நடத்த அனுமதிக்கலாம். நோய் கண்டறியும் மையங்கள் அதிகரிப்பதன் மூலம் வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கலாம். இதன் மூலம் அவர்களால் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும்.
பரிசோதனை மையங்களில் இரண்டு வகையில் சோதனை நடத்தப்படுகின்றன. ஒன்று ரத்த மாதிரி மற்றொன்று சளியை எடுத்து பரிசோதிப்பது. இத்தகைய சோதனைகளின் முடிவுகள் 24 மணி நேரத்துக்குப் பிறகு வெளியாகின்றது. அமெரிக்காவில் உள்ள மயோ கிளினிக் மற்றும் தென் கொரியாவில் உள்ள சீஜின் உயிரி மருந்து ஆய்வகத்தில் கோவிட்-19 வைரஸ் தொற்றை 4 மணி நேரத்தில் கண்டறியக்கூடிய அதி நவீன தொழில்நுட்பம் உள்ளது. இந்திய விஞ்ஞானிகளும் இதுபோன்று விரைவாக நோய் கண்டறியும் நுட்பத்தை கண்டுபிடிக்குமாறு அறிவுறுத்தலாம்.
தனியார் பரிசோதனை மையங்களில் சோதனை நடத்துவதற்கான கட்டணம் அதிகமாக இருக்கும். அது தவிர்க்க முடியாது. ஆனால் அத்தகைய கட்டணத்தை செலுத்த வசதி படைத்தவர்கள் செலுத்தட்டும். மற்றவர்களுக்கானதை நிறுவனங்கள் செலுத்தலாம். நிறுவனங்கள் சமூக பொறுப்புணர்வுக்காக (சிஎஸ்ஆர்) செலவிடும் நிதியில் குறிப்பிட்ட தொகையை இதுபோன்ற கொடிய நோய் தொற்றை கண்டறியும் நடவடிக்கைகளுக்கும் செலவிடலாம். அரசு தனியார் பங்கேற்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கும்போதுதான் நோயின் தீவிரம் குறையும்.
‘எத்தகைய நெருக்கடியும் ஒருபோதும் வீணாகப் போனது இல்லை’ என்ற வின்ஸ்டன் சர்ச்சிலின் வாசகம்தான் நினைவுக்கு வருகிறது. கோவிட்-19 வைரஸ் தாக்குதலும் உலக அளவில் மிகப் பெரிய மாறுதலுக்கு வழிவகுத்துள்ளது. தனி நபர் சுகாதாரம் மட்டுமல்ல, சுற்றுப்புற தூய்மையும் அவசியம் என்பதை இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு உணர்த்தியுள்ளது. இனியாவது சாலையில்
எச்சில் உமிழ்வது, சிறுநீர் கழிப்பது போன்ற அநாகரிக செயல்கள் குறையும் என்று நம்பலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT