Published : 09 Mar 2020 10:36 AM
Last Updated : 09 Mar 2020 10:36 AM

அலசல்: யார் சொல்வதை நம்புவது?

வங்கிகளின் வாராக் கடன் 2019 செப்டம்பரில் ரூ.7.27 லட்சம் கோடியாக குறைந்துவிட்டது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். நாட்டில் உள்ள வங்கிகளின் நிதிநிலை மேம்பட அரசு எடுத்த உறுதியான பல நடவடிக்கைகளின் பலனாக வங்கிகளின் நிதி நிலை மேம்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் பொதுத் துறை வங்கிகளில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நிர்வாகச் சீர்திருத்தங்கள், கண்காணிப்பு நடவடிக்கைகள், கடன் தள்ளுபடி நடவடிக்கைகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை வங்கித் துறையில் புகுத்தியதன் பலனாக வங்கிகளின் வாராக் கடன் விகிதம் குறைந்துள்ளதாக அவர் பெருமைபடக் குறிப்பிட்டார்.

உள்ளபடியே வங்கிகளின் நிதி நிலை மேம்பட்டு, வாராக் கடன் விகிதமும் குறைந்துள்ளது என்ற செய்தி நிச்சயம் அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கும் விஷயம் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்கவே முடியாது. ஆனால், உண்மையில் வங்கிகளின் நிதி நிலை குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கைக்கும், அமைச்சர் தெரிவித்த கருத்துக்கும் முரண்பாடு இருக்கும்போதுதான், அரசுக்கும், ரிசர்வ் வங்கி செயல்பாட்டுக்கும் இடையிலான வெளிப்படைத் தன்மை கேள்விக்குறியாகிறது.

2018-ம் ஆண்டு மார்ச் 31 நிலவரப்படி பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் அளவு ரூ.8,95,601 கோடியாகும். 2018-19-ம் நிதி ஆண்டில் கூடுதலாக சேர்ந்த வாராக் கடன் அளவு ரூ.2,16,763 கோடியாகும். இதில் வசூலான தொகை ரூ.1,33,844 கோடி. தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ரூ.1,83,391 கோடி. ஆக மார்ச் 31,2019 நிலவரப்படி வங்கிகளின் வாராக் கடன் அளவு ரூ.7,39,541 கோடி என்று ரிசர்வ் வங்கி டிசம்பர் 24, 2019-ல் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது. இதில் ஐடிபிஐ வங்கி தெரிவித்த விவரங்கள் சரிவர இல்லை என்பது வேறு விஷயம்.

நிதி அமைச்சர் குறிப்பிட்டபடி செப்டம்பர் 30, 2019 நிலவரப்படி வங்கிகளின் வாராக் கடன் தொகை ரூ.7.27 லட்சம் கோடி. ஆனால், ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட தொகை மார்ச் 31,2019-லியே ரூ.7.37 லட்சம் கோடி. அதாவது 6 மாதங்களுக்கு முன்பாகவே (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) வங்கிகளின் வாராக் கடன் தொகை கணக்கில் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு வித்தியாசம் உள்ளது. இதில் வேடிக்கையான விஷயம் என்னவெனில் அரசு குறிப்பிடும் வசூலான என்பிஏ தொகை ரூ.1,33,844 கோடி. ஆனால் தள்ளுபடி செய்யப்பட்டதோ அதைவிட அதிகம் (ரூ.1,83,891 கோடி) என்பதே. வங்கிகளின் லாபக் கணக்கில் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை கழிக்கப்பட்டால் அது வங்கிகளின் நிதி நிலையை ஸ்திரப்படுத்த உதவாது என்பது நிதர்சனமான உண்மை.

இத்துடன் ரிசர்வ் வங்கி டிசம்பர் 27, 2019-ல் வங்கிகளின் நிதி நிலை தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் வங்கிகளின் ஒட்டுமொத்த வாராக் கடன் (ஜிஎன்பிஏ) விகிதத்தில் எவ்வித மாறுதலும் இல்லாமல், அதாவது 9.3 சதவீதத்திலேயே நீடிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. இது 2019 மார்ச் முதல் செப்டம்பர் வரையான காலத்தில் 0.2 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. வங்கிகள் அனைத்துக்குமான நிலைமை இதுதான். அப்படியிருக்கையில் பொதுத் துறை வங்கிகள் மட்டும் எப்படி சிறப்பாக செயல்பட்டிருக்க முடியும். ரிசர்வ் வங்கி 2019 டிசம்பரில் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில் (வங்கிகளின் ஸ்திர நிலை குறித்தது) பொதுத் துறை வங்கிகளின் லாபமானது குறைந்துள்ளது. இதற்கு வாராக் கடனுக்கான ஒதுக்கீடு அதிகரித்ததே காரணம் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் சமீபத்தில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், வங்கித் துறை செயல்பாடு திருப்திகரமாக உள்ளது என்றாலும் பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் அளவு குறைந்திருந்தாலும் திரும்பாக் கடன் சுமை பிரச்சினையாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படி வங்கிகள் வாராக் கடனுக்கு தங்களது லாபத்தில் ஒதுக்கீடு செய்வதால் அவற்றின் லாப அளவு குறைகிறது என்ற நிலையில் வங்கிகள் சிறப்பாக செயல்படுவதாக அமைச்சர் கூறுவதை நம்புவது சற்று கடினம்தான். மேலும் நடப்பு நிதி ஆண்டின் முதல் 6 மாதங்களில் வாராக் கடன் வசூல் அதிக அளவில் இருந்தது என்றும் கூற முடியாது. அப்படியிருக்கையில் வாராக் கடன் குறைந்துள்ளதாக அமைச்சர் கூறுவது சரியா, ரிசர்வ் வங்கி அறிக்கை சரியா என்ற குழப்பம் சாதாரண மக்களின் மனதில் எழுவதை யாரும் தடுக்க முடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x