Published : 20 Jan 2020 02:06 PM
Last Updated : 20 Jan 2020 02:06 PM

ஓய்வுகால காப்பீட்டு திட்டத்தில் எது சிறந்தது?

ராதிகா மெர்வின்
radhika.merwin@thehindu.co.in

சந்தையில் தற்போது பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக ஓய்வு காலத்துக்கேற்ற திட்டங்கள் பலப்பல. காப்பீட்டு நிறுவனங்கள் ஓய்வு காலத்துக்கென சில திட்டங்களை வகுத்து உங்கள் ஓய்வு காலத்தில் நிரந்தரவருமானத்துக்கு வழி வகுப்பவையாக உள்ளன.

ஓய்வு கால காப்பீட்டுத் திட்டங்கள்இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படுகின்றன. முதலாவது ஒரு குறிப்பிட்ட தொகையை ரெகுலர் பிரீமியமாக வசூலிப்பது. இரண்டாவது அவ்விதம் வசூலித்த தொகையை மாதாந்திர ஓய்வூதியமாக தொடர்ந்து வழங்குவதாகும். எத்தனை வயதிலிருந்து ஓய்வூதியம் தேவை என்பதை தீர்மானிப்பதாகும். இதற்கான வயது 40 முதல் 70 வயது வரையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஓய்வுக்கால நிதி அளவானது நீங்கள் தொடர்ந்து செலுத்தி சேர்த்ததொகுப்பு நிதியிலிருந்து வழங்கப்படுவதாகும். எனவே ஓய்வுக்காலத்துக்கான காப்பீட்டு திட்டங்களை தேர்வு செய்வது சிறந்த வழியாக இருக்கும். ஓய்வு கால காப்பீட்டுத் திட்டங்கள் எவை, எந்தஅளவுக்கு நிதி சேரும், அது எப்படி செயல்படுகிறது என்பதைப் பார்க்கலாம்.

வழக்கமான திட்டங்கள்

பொதுவாக மேற்கொள்ளப்படும் சேமிப்பு திட்டங்களைப் போன்று ஓய்வுகாலத்துக்கென சேமிப்பை திட்டமிடுவதும் அவசியம். ஆனால் பெரும்பாலான நிறுவனங்கள் பங்கேற்பு ஓய்வூதிய திட்டங்களை அளிக்கின்றன. ஓய்வுக்கால வயதை திட்டமிட்டு அதற்குரிய குறிப்பிட்ட சேமிப்பு நிதி மற்றும்போனஸ் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் கணக்கிட்டு வழங்குகின்றன.

ஹெச்டிஎஃப்சி லைஃப் பெர்சனல் பென்ஷன் பிளஸ் திட்டமானது உங்கள் வசதிக்கேற்ப தீர்மானிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓய்வு காலத்துக்கான நிதியை 10 ஆண்டு முதல் 40 ஆண்டுகள் வரை செலுத்தும் வசதி உள்ளது. அதேபோல ஓய்வூதியம் பெறும் வயதை 55 முதல் 75 வயதாகவும் நிர்ணயித்துள்ளது.

எஸ்பிஐ சரள் பென்ஷன் திட்டமானது வழக்கமான ஓய்வூதிய திட்டமாகும். இதில் ஓய்வூதியம் பெறும்வயது 40 முதல் 70 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் முதல் ஐந்து ஆண்டுகளுக்கு உத்திரவாதமான போனஸ் வழங்கப்படும். அதன்பிறகு திருத்தப்பட்ட விகித அடிப்படையில் டெர்மினல் போனஸ் வழங்கப்பட்டு ஓய்வு காலத்திலிருந்து அளிக்கப்படும்.

ஓய்வுக்கால யுலிப் திட்டங்கள்

வழக்கமான யு-லிப் திட்டங்களைப்போலத்தான், இத்திட்டங்களும் சந்தை ஏற்ற-இறக்கங்களுக்கேற்ப வருமானம் தரக்கூடியவை. பங்குகள் மற்றும் கடன் பத்திரங்கள் அல்லது இரண்டிலும் முதலீடு செய்வது ஆகியவற்றை முதலீட்டாளர் தேர்வுக்கேற்ப தீர்மானிக்கப்படும். முதலீட்டுத் தொகை அதிகரிக்கும்போது அதன் பலனும் அதிகமாகவே இருக்கும். இருப்பினும் யு-லிப் திட்டங்கள்பெரும்பாலும் சந்தை அபாயங்களுக்குட்பட்டவை. ஹெச்டிஎஃப்சி கிளிக் 2 ரிடையர், ஐசிஐசிஐ புரூ ஈஸி ரிடையர்மென்ட், எஸ்பிஐ ரிடையர் ஸ்மார்ட் ஆகியன யுலிப் சார்ந்த ஓய்வுக்கால திட்டங்களாகும்.

ஹெச்டிஎஃப்சி கிளிக் 2 ரிடையர் திட்டத்தில் உங்களது ஓய்வூதிய வயது 45 முதல் 75 ஆகும். எஸ்பிஐ-யின் ரிடையர்ஸ்மார்ட் திட்டத்தில் இது 40 முதல் 80 ஆகஉள்ளது. ஐசிஐசிஐ புரூ ஈஸி திட்டத்தில் 45 முதல் 80 வயது வரை உள்ளது.

வழக்கமான யுலிப் திட்டங்களைப் போல இத்திட்டங்களுக்கும் காப்பீடு நிர்வாக கட்டணம், பிரீமியம் ஒதுக்கீடு கட்டணம், நிதி மேலாண் கட்டணம் உள்ளிட்டவை வசூலிக்கப்படும். அதேசமயம் ஆன்லைன் திட்டங்களான ஹெச்டிஎஃப்சி கிளிக் 2 ரிடையர் திட்டத்தில் காப்பீடு நிர்வாக கட்டணம், பிரீமியம்ஒதுக்கீடு கட்டணங்கள் கிடையாது.

ஆயுள்கால யுலிப் திட்டங்கள்

இத்திட்டங்கள் அதிக அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளன. இது 99 வயது வரை காப்பீடு அளிக்கின்றன. ஓய்வுக்காலம் முழுவதற்கும் ஓய்வூதியம்அளிக்கிறது. குறிப்பாக பஜாஜ் அலையன்ஸ் லாங் லைஃப் கோல் திட்டமானது ஆயுள்கால யுலிப் திட்டமாகும். இதில் ஆர்எல்ஐ எனப்படும் ஓய்வுக்கால வருமான திட்டத்தை தேர்வு செய்யலாம்.

இதை திட்ட காலத்தில் எப்போது வேண்டுமானாலும் முடிவு செய்யலாம். ஓய்வூதியத்தை 55 வயது அல்லது திட்டம் தொடங்கி 10-வது ஆண்டிலிருந்து பெறலாம். உங்களது சேமிப்பு நிதியில் 12 சதவீதம் ஆண்டுக்கு கிடைக்கும். இதை ஆண்டுதோறும் அல்லது அரையாண்டு, காலாண்டு அல்லது மாதந்தோறும் என்ற விதத்தில் உங்கள் விருப்பத்தின் அடிப்படையில் பெறலாம். அதேபோல ஆர்எல்ஐ சதவீதம் மாறுதலுக்குட்பட்டது. இதையும் நீங்கள் எந்த நிலையிலும் மாற்றிக் கொள்ளலாம்.

ஹெச்டிஎஃப்சி லைஃப் கிளிக் 2 வெல்த் திட்டத்தில் ஓய்வுக்கால சலுகை திட்டத்துடன் ஆயுள் காப்பீடு வசதியும் உள்ளது. குறித்த கால இடைவெளியில் குறிப்பிட்ட தொகையை திரும்பப் பெறும்வசதியும் உள்ளது. இது ஓய்வுக்கால நிதியை அதிகரித்துக் கொள்ள உதவும்.

சந்தை அடிப்படையிலான அபாயத்தை எதிர்கொள்ள தயாராக இருப்பின் ஹோல் லைஃப் யுலிப் திட்டங்களை தேர்வு செய்வது சிறப்பானது.

பரிந்துரை

பஜாஜ் அலையன்ஸ் லைஃப் லாங் திட்டத்தில் 8 நிதி திட்டங்கள் உள்ளன. ஹெச்டிஎஃப்சி கிளிக் 2 வெல்த் திட்டத்தில் 10 வகையான திட்டங்கள் உள்ளன.இவை இரண்டிலுமே காப்பீட்டு நிர்வாகக் கட்டணம் ஏதும் விதிப்பது கிடையாது. ஹெச்டிஎஃப்சி கிளிக் 2 திட்டத்தில் பிரீமியம் ஒதுக்கீடு கட்டணமும் கிடையாது.

ஆனால் பஜாஜ் அலையன்ஸ் லைஃப் லாங் திட்டத்தை ஆன்லைன் மூலம் வாங்கும்போது மட்டுமே கட்டணம் கிடையாது. நிதி ஒதுக்கீடு கட்டணமாக 0.8 சதவீதம் முதல் 1.35 சதவீதம் வரை நிதியத்தின் தன்மையைப் பொறுத்து ஹெச்டிஎஃப்சி லைஃப் வசூலிக்கிறது. பஜாஜ் அலையன்ஸில் இது 0.95 சதவீதம் முதல் 1.35 சதவீதமாக உள்ளது.

இந்த காப்பீட்டுத் திட்டங்களில் வழக்கமான ஓய்வூதிய திட்டங்களை விட பல சாதக அம்சங்கள் உள்ளன. மேலும் இதிலிருந்து பெறப்படும் தொகைக்கு வருமான வரி கிடையாது. பெறப்படும் தொகையானது இறந்த பிறகு கிடைக்கும் பலனை கணிசமாகக் குறைத்துவிடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பரஸ்பர நிதித் திட்டங்களில் தொடர்ந்து முதலீடு செய்யலாம். பங்குச் சந்தை அபாயத்துக்குட்பட்டதாக இருந்தாலும், குறித்த கால இடைவெளியில் பணம் பெறும் வசதியும் உள்ளது. இருப்பினும் நீண்ட கால மூலதன ஆதாய வரி விதிப்புக்குட்பட்டது இது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

வெறுமனே காப்பீடு வசதியுடன் கூடிய ஓய்வுக்கால திட்டத்தை நீங்கள் விரும்பினால் ஹோல் லைஃப் யுலிப் திட்டத்தை தேர்வு செய்யலாம். இதில் பணத்தை எடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் வழக்கமான யுலிப் திட்டங்களைக் காட்டிலும் இதற்கு கூடுதலாக செலவிட வேண்டியிருக்கும்.

ஒருவேளை உங்களுக்குப் பிறகு வாரிசுதாரர் யாருக்கும் பணத்தின் பலன் கிடைக்க தேவையில்லாத பட்சத்தில் நீங்கள் வழக்கமான யுலிப் திட்டங்களை தேர்வு செய்தால் போதுமானது. ஆனால், ஓய்வுக்காலத்தில் குறிப்பிட்ட நிதி கிடைக்கும் வகையில் ஒரு கணிசமான தொகையை மூலதனமாக சேர்ப்பது குறித்து திட்டமிட்டு சேர்க்க வேண்டும். அந்த வகையில் நீண்ட கால செயல்பாடுகளில் சிறப்பான யுலிப் திட்டங்களை தேர்வு செய்யலாம். ராதிகா மெர்வின்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x