Published : 16 Dec 2019 12:10 PM
Last Updated : 16 Dec 2019 12:10 PM
முகம்மது ரியாஸ்
riyas.ma@hindutamil.co.in
‘எங்களுக்கென்று ஒரு தனித்த தீவு வேண்டும். புதிய சிந்தனைகள், புதிய கண்டுபிடிப்புகள் என அனைத்து பரீட்சார்த்த முயற்சிகளுக்கும் வழி செய்வனவாக அந்த இடம் இருக்க வேண்டும். இதனால் சமூகத்துக்கு என்ன பயன்? தனி மனிதனுக்கு என்ன பயன்? என்ற கேள்விகள் எதுவும் ஒலிக்காத, கண்டுபிடிப்பதன் இன்பத்துக்காவே நாங்கள் எங்கள் வாழ்நாளை செலவிட வேண்டும்’.
இது 2013-ம் ஆண்டு கூகுள் நிறுவன நிகழ்வு ஒன்றில், அதன் நிறுவனர் லாரி பேஜ் பேசியது. குறிப்பிடும்படியாக, பொதுவெளியில் அவர் இறுதியாக நிகழ்த்திய உரையும் இதுவே. கடந்தவாரம் அவரும், இணை நிறுவனரான செர்கி பிரினும் தங்கள் பொறுப்புகளிலிருந்து விலகிக் கொண்டதை நாம் இவ்வுரை வழியாக புரிந்துகொள்ள முடியும்.
கூகுளின் தயாரிப்புகளை ஒருங்கிணைக்கும் பொருட்டு 2015-ம் ஆண்டு ஆல்ஃபபெட் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. அதுவரை கூகுளின் சிஇஓ-வாக இருந்த லாரி பேஜ் அந்த பொறுப்பை சுந்தர் பிச்சையிடம் ஒப்படைத்து விட்டு, ஆல்ஃபபெட் நிறுவனத்தின் சிஇஓ-வாக பொறுப்பேற்க, அதன் தலைவராக பொறுப்பேற்றார் செர்கி பிரின். அப்போதைய சூழலில், கூகுள் நிறுவனத்தின் சிஇஓ-வாக சுந்தர் பிச்சை தேர்ந்தெடுக்கப்பட்டது உலகின் கவனத்தை ஈர்த்தது.
மீண்டும் அதுபோலான வரலாற்று நிகழ்வு கடந்த வாரம் அரங்கேறி உள்ளது. ஆல்ஃபபெட் நிறுவனப் பொறுப்புகளிலிருந்து லாரி பேஜும், செர்கி பிரினும் விலகிக் கொள்ள, ஆல்ஃப பெட்டுக்கும் சிஇஓ-வாக நியமிக்கப்பட்டுள்ளார் சுந்தர்பிச்சை. கூகுளில் என்ன பிரச்சினை? ஏன் அவர்கள் தாங்கள் கட்டியெழுப்பிய சாம்ராஜ்யத்தில் இருந்து விலகினர்? ஏன் மீண்டும் அவர்கள் சுந்தர் பிச்சையை தேர்ந்தெடுத்தனர்? கூகுளின் கடந்த பத்து ஆண்டுகால பயணத்திலேயே அதற்கான பதில் இருக்கிறது.
கூகுளின் தோற்றுவாய்
ஆண்டு 1995, ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம், அமெரிக்கா. இங்குதான் லாரி பேஜூம், செர்கி பிரினும் அறிமுகமாகிறார்கள். இருவரும் தங்கள் அளவில் கணினி சார்ந்து தீவிர தேடல் உடையவர்கள். பேஜின் தந்தை கணினி அறிவியல் துறையில் பேராசிரியராகவும், தாயார் கணினி நிரல்கள் தொடர்பான பயிற்சியாளராகவும் பணிபுரிந்தவர்கள். இதனால் பேஜின் குழந்தைப்பருவம், அறிவியல் புத்தகங்கள், கம்ப்யூட்டர்கள் என தொழில் நுட்பச் சூழல் சார்ந்து கழிந்துள்ளது. இந்தச்சூழல் அவரை தீவிர வாசிப்பாளராக மாற்றியது. அதுவே அவருக்கு வலுவான கட்டுமானத்தை அமைத்து தந்தது. பிரினின் குடும்பப் பின்புலமும் இத்தகையதே.
பிரின் ரஷ்யாவில் பிறந்தவர். தந்தை கணிதப் பேராசிரியர்; தாய் விண்வெளி ஆய்வாளர். பிரினின் 6-ம் வயதில் அவருடைய குடும்பம் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தது. இவ்வாறாக இயல்பிலேயே கணிணி சார்ந்து தீவிரதேடலுடையவர்களான அவர்கள், கல்லூரியில் மேற்கொண்ட புராஜெக்ட்தான் தற்போது உலகை ஆட்டிப்படைக்கும் கூகுள் நிறுவனத்துக்கான விதை. வெவ்வேறு இணையப் பக்கங்களை ஒன்றோடு ஒன்று இணைப்பது குறித்த தீவிரமான ஆராய்ச்சியில் லாரி பேஜ் ஈடுபட்டிருந்த சமயம்,
பிரினின் அறிமுகம் கிடைக்கிறது.
அந்த அறிமுகத்துக்குப் பிறகே பேஜ் தனது ஆராய்ச்சி குறித்த தெளிவான பார்வையை பெறுகிறார். அவ்வாறாக உருவானதுதான் கூகுளுக்கு அடித்தளமாக அமைந்த ‘பேஜ்ரேங்’. கல்லூரிக்குள் அவர்களுடைய ‘பேஜ்ரேங்’ அல்காரிதம் பெரும் கவனத்தை ஈர்க்கிறது. அதைத் தொடர்ந்து 1998-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தை தொடங்குகின்றனர்.
நிர்வாகத்தில் அனுபவமின்மை
ஆரம்பத்தில், கூகுளை தொடர்ந்து நடத்தும் எண்ணம் அவர்களுக்கு இல்லை. நிறுவனத்தை விற்க சில முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அவர்கள் எதிர்பார்த்த விலைக்கு யாரும் வாங்க முன்வராததால் அந்த முயற்சியை கைவிடுகின்றனர். இவ்வாறாக ஆரம்பமான கூகுளின் பயணம், அடுத்த ஓரிரு ஆண்டுகளிலேயே குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டுகிறது.
அவர்களின் திறனைக் கண்டு கூகுள் நிறுவனத்தில் பலர் முதலீடு செய்ய ஆரம்பிக்கின்றனர். நிறுவனம் இன்னும் பெரிதாக வளரும் என்பது முதலீட்டாளர்களின் கணிப்பு. ஆனால், கூகுள் நிர்வாகத்தை கவனிக்க வேறு நபரை தேர்வு செய்ய முதலீட்டாளர்கள் தீர்மானித்தனர். முதலீட்டாளர்களின் விருப்பத்துக்கு செவிசாய்க்க வேண்டிய கட்டாயத்துக்கு இருவரும் தள்ளப்பட்டனர். இந்த சமயத்தில்தான் எரிக் ஸ்கிமிட்டின் அறிமுகம் அவர்களுக்கு கிடைக்கிறது.
புதிய கண்டுபிடிப்புகளில் தீவிரம்
எரிக் ஸ்கிமிட் மிகச் சிறந்த நிர்வாகி. மென்பொருள் நிறுவனமான நோவலில் சிஇஓ-வாக இருந்தவர். ஸ்கிமிட்டின் வருகை இருவருக்கும் பலவிதங்களில் உதவியாக இருந்தது. ஆரம்பம் முதலே அவ்விருவருக்கும் நிர்வாகத்தில் ஆர்வமில்லை. அவர்களது தேடல் முழுவதும் புதிய தொழில்நுட்ப முயற்சிகளிலேயே இருந்தது. எனினும், நிர்வாகப் பொறுப்பை வேறு யாரிடமும் தர மனமில்லை. ஆனால், ஸ்கிமிட்டை சந்தித்ததும் நிறுவனத்தை நடத்த அவரே பொருத்தமானவர் என்று முடிவு செய்கின்றனர்.
கூகுளின் நிர்வாகப் பொறுப்பை ஸ்கிமிட் கவனித்துக்கொள்ள, இவர்களோ ஆராய்ச்சிப் பணிகளில் தீவிரமாக இறங்குகின்றனர். இந்த காலகட்டத்தில்தான் கூகுள் மேப், செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. ஆன்ட்ராய்ட், யூட்யூப் போன்றவற்றை கூகுள் நிறுவனம் வாங்குகிறது.
ஆன்லைன் தொழில்நுட்பங்கள் தவிர்த்து, அறிவியல், மருத்துவம் உள்ளிட்ட பிற துறைகளிலும் மிக முக்கிய முன்னெடுப்புகளை கூகுள் மேற்கொள்ளத் தொடங்கியது.
தானியங்கி கார், மனித வாழ்நாளை நீட்டிப்பது தொடர்பான ஆராய்ச்சி என அவர்களின் எல்லை விரிந்தது. இந்த காலகட்டத்தில்தான் (2004), சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தில் சேருகிறார். அவருடைய தலைமையின்கீழ் கூகுள் குரோம் (2008) உருவாக்கப்படுகிறது. அது சுந்தர் பிச்சையை மிக முக்கியமான ஆளுமையாக நிறுவுகிறது.
உருவானது ஆல்ஃபபெட்
இவ்வாறாக பத்து ஆண்டுகள் கழியவே, 2011-ல் மீண்டும் சிஇஓ-வாக பொறுப்பேற்கிறார் பேஜ். பேஸ்புக், அமேசானின் சந்தைகள் விரிவடைந்து வந்த நிலையில், அதற்கு ஏற்றார்போல் கூகுளையும் முன்னகர்த்தி செல்ல வேண்டிய தேவை ஏற்படுகிறது. வெவ்வேறு தளத்தில் தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் தீவிரப்படுத்தப்படுகின்றன. கூகுள் தயாரிப்புகளின் எண்ணிக்கை விரிவடையத் தொடங்குகிறது.
இந்நிலையில் அதன் நிர்வாகத்தை எளிமைப்படுத்த திட்டமிடுகின்றனர். அதன் விளைவாக தொடங்கப்பட்டதே ஆல்ஃபபெட். பேஜும், செரினும் ஆல்ஃபபெட் நோக்கி தங்கள் கவனத்தை திருப்ப விரும்புகின்றனர். எனில் கூகுள் நிறுவனத்தை யார் கவனித்து கொள்வது? அவர்கள் முன்னால் இருந்த ஒரே நம்பிக்கையான தேர்வு சுந்தர் பிச்சை. கூகுள் குரோம் உருவாக்கத்தில் சுந்தர் பிச்சையின் பங்களிப்பு அவர் மீது நம்பிக்கை ஏற்பட வழிசெய்தது. கூகுளின் அன்றாடச் சூழலிருந்து அவர்கள் விடுதலையானார்கள். சுந்தர் பிச்சை அந்தப் பாரத்தை தாங்கத் தயாரானார்.
கூகுள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
தரவுகளை முறைகேடாக பயன்படுத்துதல், அரசியல் சார்போடு செயல்படுதல், நிர்வாக உயர் அதிகாரிகள் மீதான பாலியல் புகார் என கடந்த சில ஆண்டுகளாக கூகுள் நிறுவனம் கடும் பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. பெண் ஊழியர்கள் மீதான பாலியல் வன்முறை குறித்து சரியான நடவடிக்கை எடுக்கத் தவறியதாக, கடந்த ஆண்டு கூகுள் நிறுவனத்தின் 20,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலையை புறக்கணித்து கூகுளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இது கூகுள் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி.
சட்ட ரீதியாகவும் கூகுள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. இணைய நிறுவனங்களின் தகவல் கையாளும் முறை குறித்த விசாரணை கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. அப்போது டிவிட்டர், பேஸ்புக் நிறுவனர்கள் அனைவரும் கலந்து கொண்ட அந்த நிகழ்வில், ஒரே ஒரு இருக்கை மட்டும் காலியாக இருந்தது. அது லாரி பேஜுக்குக்காக ஒதுக்கப்பட்ட இருக்கை.
ஆராய்ச்சிகளிலும், கண்டுபிடிப்புகளுமே வாழ்க்கையாக இருந்தவர்களுக்கு, இத்தகைய அரசியல் நெருக்கடி மிகுந்த மனச் சோர்வை அளித்தது. இந்தச் சூழலிருந்து தங்களை முற்றிலும் துண்டித்துக் கொண்டு, தங்கள் தேடலில் முழு கவனம் செலுத்த முடிவெடுக்கின்றனர். அதன் நீட்சியாகவே அவர்களின் தற்போதைய விலகலை அர்த்தப்படுத்த முடியும்.
கூகுளின் முகமாக சுந்தர் பிச்சை
சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் 15 ஆண்டுகால ஊழியர். கடந்த 4 ஆண்டுகளாக, கவனிக்கத்தக்க வகையில் அதன் நிர்வாகப் பொறுப்புகளையும் கையாண்டு வருகிறார். கூகுள் நிறுவனம் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு குற்றம்சாட்டினார். அந்தப் புகார்களை சுந்தர் பிச்சை எதிர்கொண்ட விதம் அவர் மீதான நம்பிக்கையை அதிகரித்தது. அந்த வகையில் கூகுள் நிறுவனத்தின் மக்கள் முகமாக சுந்தர் பிச்சை விளங்குகிறார் என்றால் அது மிகையல்ல.
அதேசமயம் சுந்தர் பிச்சை முன் பல்வேறு சவால்கள் நிறைந்திருக்கின்றன. பல்வேறு முனைகளில் இருந்து அழுத்தங்கள் வந்து கொண்டிருக்கிற இந்த நிலையில்தான், அதன் பொறுப்புகள் சுந்தர் பிச்சையிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் சுந்தர் பிச்சையின் இதுவரையிலான அனுபவங்களில் இருந்து, அவர் இச்சூழலையும் சிறப்பாகவே கையாளுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இரட்டையர்களின் அடுத்த திட்டம் என்ன?
பிரச்சினைகள் மீதான இருவரின் அணுகுமுறையும் முற்றிலும் வேறுபட்டது. பிரச்சினையை தீர்ப்பதற்கான ‘சிறந்த வழி’யை தேடுவது பிரினின் அணுகுமுறை என்றால், ‘சரியான வழி’யை தேடுவது பேஜின் அணுகுமுறை. இதுவே இருவரும் ஒன்றாக இணைந்து பெரும் சாதனைகளை நிகழ்த்த காரணமாக இருந்தது எனலாம். கணினி யுகத்தின் மகத்தான, கண்டுபிடிப்பாளர்களாக பேஜும் பிரினும் வரலாற்றில் நினைவு கூரப்படுவர். அவர்களுடைய தற்போதைய முடிவு, அன்றாட அலுவலகப் பணிகளில் இருந்து விலகிக் கொண்டதே தவிர, தொழில்நுட்பங்கள் ரீதியான தங்கள் தேடலை நிறுத்திக் கொண்டதாக அர்த்தமில்லை.
சொல்லப்போனால், அதற்காகத்தான் இந்த முடிவையே அவர்கள் எடுத்திருக்கக் கூடும். ஆல்ஃபபெட் நிறுவனம் தொடங்கப்பட்ட முதலே, அவ்விருவரும் பொது நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை; ஓரிரு தருணங்களைத் தவிர. டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு, குடியுரிமை சார்ந்து கடும் கட்டுப்பாடுகளை கொண்டுவந்தார்.
பிற நாட்டவர்கள் அமெரிக்காவில் குடியேறுவது தொடர்பான டிரம்பின் நடவடிக்கை செர்கி பிரினை மிகவும் பாதித்தது. அடிப்படையில் தன்னை ஒரு அகதியாக உணரும் அவர், டிரம்புக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டார். இரண்டு வருடங்களுக்கும் மேலாக பொதுவெளியிலிருந்து விலகி இருந்தவர், அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
கடந்த 5 ஆண்டுகளாக தொடர்புகளுக்கு அப்பாற்பட்டு தங்களுக்குள் தனித்து செயல்பட்டு வந்த அவர்கள், தற்போது முழுவதுமாக விலகி உள்ளனர். அதேசமயம் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்கு அவர்களிடம்தான் உள்ளன. உலகின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் பேஜ் 9-வது இடத்திலும், பிரின் 10-வது இடத்திலும் உள்ளனர்.
அயன் ராண்டின் புகழ்பெற்ற நாவல் ‘அட்லஸ்ஷ்ரக்ட்’. கண்டுபிடிப்பாளர்களும், தொழில் முனைவோர்களுமே உலகை முன்னோக்கி செலுத்துகின்றனர். அரசு விதிகள் அவர்களை கட்டுப்படுத்துகிறது என்பது அந்நாவலின் மையச் சரடு. கதையின் நாயகன், தன்போலான நபர்களை ஒன்றிணைத்து, அவர்களுக்கென்று தனித்த உலகத்தை கட்டமைக்கிறான்.
அங்கு அவர்கள் தங்கள் ஆளுமைகளை எந்தக் கட்டுப்பாடுமின்றி வெளிப்படுத்த முடியும். முழுக்க முழுக்க திறமை மற்றும் பங்களிப்பு அடிப்படையிலான உலகமாக அது கட்டமைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட இதுபோலான ஒரு கனவைதான் லாரி பேஜ், செர்கி பிரினின் முடிவு உணர்த்துகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT