Published : 27 Jul 2015 10:43 AM
Last Updated : 27 Jul 2015 10:43 AM
ஒரு காலத்தில் ஜீப் என்பது கிராமப்புற மற்றும் மலைப் பகுதி மக்களின் போக்குவரத்தில் மிக முக்கிய அங்கம். ராணுவம், எல்லை பாதுகாப்பில் ஜீப்புக்கென்றே முக்கிய இடமுண்டு. ஜீப் என்றாலே மஹிந்திரா நிறுவனம்தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு 65 ஆண்டுகளாக இன்றளவும் ஜீப் உருவாக்கத்தில் தனது இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது.
மாறிவரும் உலகில் மாற்றங்களுக் கேற்ப புதிய ஜீப் உருவாக்கத்தில் தங்கள் இந்நிறுவனம் எப்போதுமே பின் தங்கியதில்லை என்பதை பறைசாற்றும் வகையில் இந்நிறுவனம் புதிதாக `தார்’ ஜீப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேம்படுத்தப்பட்ட இந்த ஜீப்பின் அறிமுக விழா கடந்த வாரம் மும்பையை அடுத்த நாசிக்கில் நடைபெற்றது. கொட்டும் மழையைப் பார்க்கும் வாய்ப்பு சென்னைவாசியான எனக்கு இதன் மூலம் கிடைத்தது. மும்பையிலிருந்து சாலை வழியாக நாசிக்கிற்கு பயணம், கொட்டும் கன மழை, தெருவெங்கும் பச்சைப்பசே லென்ற பட்டு போர்த்தியது போன்ற மலைத் தொடர், அற்புதமான பயணம்.
மாலை வேளையில் அறிமுக விழா, இருந்தாலும் வழக்கமாக வாகனத்தை அறிமுகப்படுத்தியதோடு தங்கள் பணி முடிந்தது என்றில்லாமல், தங்கள் வாகனம் காடு, மலைகளை எப்படி கடந்து செல்கிறது என்பதை செய்தியாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அடுத்த நாள் காலையில் ஜீப்பில் பயணிக்கும் வாய்ப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது மஹிந்திரா நிறுவனம்.
இதற்காக நாசிக்கிலிருந்து மும்பை வழியில் இகத்புரி எனுமிடத்தில் ஒரு சாகச பயண மையத்தையே இந்நிறுவனம் உருவாக்கியிருந்தது. மலை சூழ்ந்த இந்த இடத்தில் சாகச பயணம் தொடங்கியது. ஜீப்பை இயக்கத் தெரிந்த செய்தியாளர்கள் காடு, மலைகளில் இது எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஓட்டிப் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றனர். எதற்கு விஷப்பரிட்சை என்கிற ரீதியில் மற்றவர்கள் ஓட்டுவதைப் பார்த்து, அதன் மூலம் இன்ஜினின் செயல்திறனை அறிந்து கொள்ளும் சாதாரண பயணியாக பயணித்தேன். முதல் முறை இத்தகைய பயணங்களில் மிகுந்த அனுபவம் மிக்க ஓட்டுநரோடு பயணம். அடுத்து ஆட்டோமொபைல் செய்தியாளருடன். இரு முறையும் மிகவும் ரசிக்கத்தக்க, சுகானுபவமாக பயணம் இருந்தது.
எந்த ஒரு பயணமும் சுகமாக அமையவேண்டுமென்றால் அதற்கு வாகனம் சிறந்ததாக இருக்க வேண்டும்.
லேசான தூரல் மழையில் பயணம். மலை உச்சி வரை சென்று திரும்பியபோது வாகனத்தின் செயல்பாடு உண்மையிலேயே சிறப் பாகத்தானிருந்தது.
சாலைகளுக்கு அப்பால் அதாவது ஆஃப் ரோடர் எனப்படும் மலைகள், காடுகள், பாலைவனங்களில் செல்லக் கூடிய வாகனங்களை விரும்புவோர் அதிகம். அதிலும் இப்போதெல்லாம் இளைஞர்கள் இதுபோன்ற பயணத்தை அதிகம் விரும்புகின்றனர். அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு வந்துள்ளது தார் சிஆர்டிஇ.
பார்ப்பதற்கே கம்பீரமான தோற்றம். இதற்கு உறுதுணையாக முன்புறமும், பின்புறமும் உறுதியான பம்பர்கள். பாறைகளிலும், காடுகளிலும், சகதி யிலும் பயணிக்கும்போது வழுக்காமல் உறுதியான பிடிப்பை அளிக்கக் கூடிய அகலமான டயர்கள். பனி மூட்டத் திலும், கும்மிருட்டிலும் பயணிக்க ஏதுவாக அதி ஒளி பாய்ச்சக் கூடிய முகப்பு விளக்குகள், இவை அனைத் துக்கும் மேலாக மழைக் காலத்தில் பயணிகளைக் காக்க, மேம்படுத்தப்பட்ட தார் பாய் (கனோபி).
வெளிப்புற தோற்றம் இப்படி யெனில் உள்புறமும் பல்வேறு மாறுதல் களுக்குள்ளாக்கப்பட்டிருந்தது தார். இரட்டை வண்ணத்திலான டாஷ் போர்டு, சவுகரியமான பயணத்துக்கு அகலமான இருக்கைகள், மேம்படுத் தப்பட்ட ஸ்டீரிங் வீல், கைகளை வசதியாக வைப்பதற்கேற்ப கதவுகளில் கைப்பிடி வசதி. பாலைவனத்தில் பயணிக்கும்போது குளிர்ச்சியை அளிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட ஏசி வென்ட், தண்ணீர் பாட்டில்களை வைக்கும் வசதி, புதிய வின்ட் ஷீல்ட் டெமிஸ்டர், புதிய கியர் நாப், செல்போன் பேட்டரி சார்ஜ் செய்யும் வசதி, பயணத்தின்போது அலுப்பு தராமலிருக்க பாட்டு கேட்கவும் வசதி இப்படி அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் உருவாக் கப்பட்டுள்ளது.
அனைத்துக்கும் மேலாக இது போன்ற சாகச பயணம் செய்வோர் நீண்ட காலமாக கோரி வந்த, பின் சக்கரத்தை லாக் செய்யும் தொழில் நுட்பம் இதில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சாகசப் பயணத்தின் போது இந்தத் தொழில்நுட்பம் எப்படி செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
அதாவது புதை மணலில் அல்லது வழுக்கும் சகதியில் பின்புறத்தின் ஒரு சக்கரம் சிக்கிக் கொண்டு சுழன்று கொண்டிருந்தால், 10 விநாடி களுக்கு அப்புறம் அதன் சுழற்சி நின்றுவிடும். அதன் சக்தி முழுவதும் அதற்கு இணையாக உள்ள மற்றொரு பின் சக்கரத்துக்கு மாறி வேக மாக செயல்படும்போது வாகனம் முன்னேறி விடுகிறது. இதில் உள்ள 2500 சிசி குதிரை திறன் மற்றும் அதிகபட்சமான 200 மி.மீ. உயரம் ஆகியன இதன் செயல் திறனை அதிகரித்துள்ளது.
இளையதலைமுறையினர் இப்போ தெல்லாம் சாகசப் பயணத்தை வெகுவாக விரும்புகின்றனர். வார விடுமுறை நாள்களில் இதுபோன்ற பயணம் மேற்கொள்வோருக்கு இது மிகச் சிறந்ததாக இருக்கும் என்று அறிமுக விழாவில் நிறுவனத்தின் ஆட்டோமோடிவ் பிரிவின் தலைவர் பிரவீண் ஷா கூறினார்.
இருப்பினும் மலைப்பகுதி மக்களின் போக்குவரத்துக்கு உதவும் வழக்கமான கிளாசிக் மாடல் உற்பத்தியும் தொடரும் என்று அவர் தெரிவித்தார்.
‘‘ஜீப் போக்குவரத்து வசதி மட்டும் எங்கள் பகுதியில் இல்லாதிருந்தால் காபி, தேயிலை தொழிலே அழிந்து போயிருக்கும் என்று ஜீப்பின் பெருமை யைப் போற்றினார்’’ கூர்க் பகுதியிருந்து வந்திருந்த இளைஞர் பொன்னப்பா. சிறு வயது முதலே ஜீப்புடன் இணைந்திருந்த இவரது வாழ்க்கை இப்போது ஆப்ரோடர் பயணத்தை விரும்ப ஆரம்பித்துவிட்டது. சாகச பயணத்துக்கு இப்போது வெகுவாக உதவுகிறது என்கிறார் இவர். கர்நாடக மாநிலத்திலிருந்து அறிமுக நாளில் ஜீப்பை அறிந்து கொள்வதற்காக நாசிக் வந்திருந்த இவரது கருத்தை பிறரும் அறிந்து கொள்ளும் வாய்ப்பை மஹிந்திரா உருவாக்கியிருந்தது.
ஆண்டில் 38 வார விடுமுறை சாகச பயணங்களை மேற்கொள்வதுதான் தனது வழக்கம் என்ற மேற்கு வங்கத் தைச் சேர்ந்த ஆர்கா-வின் கருத்தும் அனைவரையும் ஈர்த்தது. இகத்பூரில் வாகனத்தை ஓட்டிப் பார்த்தவர்களில் இவரும் ஒருவர். வாகனத்தின் செயல்பாடு இவரையும் கவர்ந்ததில் வியப்பில்லை.
சாலைகளில் மட்டுமல்ல சாலை களுக்கு அப்பாலும் பயணத்துக்கு வழி வகுக்கும் `தார்’ ஒரு புதிய அனுபவத்தை அளித்தது. அதை நீங்களும் அனுபவித்தால் மட்டுமே உணர முடியும். சென்னையில் இதன் விற்பனையக விலை ரூ. 8.32 லட்சமாகும்.
கருப்பு, சிவப்பு, சில்வர், ராக்கி பீச், டயண்ட் வொயிட் என்ற ஐந்து வண்ணங்களில் இது வெளிவந் துள்ளது.
ramesh.m@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT