Published : 13 Jul 2015 10:41 AM
Last Updated : 13 Jul 2015 10:41 AM
படிக்கும் காலத்தில் நல்ல நண்பர்கள் கூட்டு சேர்ந்தால், எதையும் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணமாக இருக்கிறார்கள் இந்த நண்பர்கள். சொந்த தொழில்தான் செய்ய வேண்டும் என்கிற நோக்கம் கொண்ட ஐந்து நண்பர்கள் சேர்ந்து பைவ் பிங்கர்ஸ் என்கிற பெயரில் நான் ஓவன் பைகளை தயாரிக்கும் தொழிலை நாமக்கல் நகரில் செய்து வருகின்றனர்.
தற்போது ஐந்து நண்பர்களில் இருவர் நேரடி வேலையிலிருந்து விலகிக் கொள்ள மற்ற மூன்று பேரும் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். அவர்களது அனுபவத்தை `வணிகவீதி’ வாசகர்களுக்காக பகிர்ந்து கொண்டனர்....
முதலில் தயாரிப்பு பணிகளை கவனித்துக் கொள்ளும் அருண்குமார் ஆரம்பித்தார். இவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் டி. கரிசல்குளம் கிராமம். தகுதி அடிப்படையில் கோவை குமரகுரு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்து படிக்க சேர்ந்தவர். இந்த தொழிலை தொடங்க திட்டமிட்ட ஐந்து பேரும் பல ஊர்களைச் சேர்ந்தவர்கள். படித்து முடித்தபின் வேலை தேடி அலைவதைவிட சொந்த தொழில்தான் சரியாக இருக்கும் என்பதை அவ்வப்போது பேசிக்கொள்வோம்.
இதை செயல்படுத்த வேண்டும் என்றால் இப்போதிலிருந்தே திட்டமிட வேண்டும் என படிக்கும் போதே யோசித்தோம். இதற்காக கோவை தவிர சென்னை, பெங்களூரு என பல ஊர்களில் நடைபெறும் தொழில் கண்காட்சிகளுக்கு செல்லத் தொடங்கினோம். கல்லூரியின் கடைசி வருடங்களில் எங்களோடு படித்த மாணவர்கள் கேம்பஸ் இண்டர்வியூக்கு தயாராவார்கள். நாங்கள் பேக்கை மாட்டிக்கொண்டு கண்காட்சிகளுக்கு புறப்படுவோம்.
பெங்களூரு தொழில் கண்காட்சிக்கு சென்றபோதுதான் இந்த தொழில் குறித்து தெரிந்து கொண்டோம். படித்து முடித்து கோவையிலேயே ஆரம்பிக்கலாம் என்றால் இடம், வாடகை, பராமரிப்பு செலவுகள் கட்டுபடியாகாது என்பதால் ஐந்து பேரில் ஒருவரான ஆனந்தின் சொந்த ஊரான நாமக்கலில் தொடங்குவது என திட்டமிட்டோம்.
இதற்கான திட்ட மதிப்பீடுகளை பக்காவாக தயார் செய்து கொண்டு வங்கிகளை அணுகினோம். எங்களது முயற்சியை பார்த்து நாமக்கல் மாவட்ட தொழில் மையத்தை சேர்ந்தவர்களும் உதவி செய்தனர். மேலும் பேங்க் ஆப் பரோடாவின் நிதி உதவியும் கிடைத்தது என்று தாங்கள் தொழிலுக்குள் நுழைந்த அனுபவத்தை விவரித்தார்.
தொழிலை தொடங்கிவிட்டோம்... ஆனால் நாங்கள் தொடங்கிய நேரம் மின்வெட்டு பிரச்சினை அதிகமாக இருந்தது, இதனால் தொழிலே முடங்கிவிடும் அபாயம் இருந்தது என்று முகம்மது இம்ரான் பாதுஷா தொடங்கினார்.. மார்க்கெட்டிங் வேலைகளை இவர் கவனித்துக் கொள்கிறார்.
இதுதான் தொழில் என இறங்கி, வங்கிக் கடனும் வாங்கிவிட்டோம், இனிமேல் நடைமுறை பிரச்சினைகளை எப்படி சமாளிக்க வேண்டும் என்றுதான் யோசிக்க வேண்டுமே தவிர, தொழிலை விட்டுவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். கையிலிருந்த சேமிப்பு, வீட்டினரின் உதவிகள் இவற்றை கொண்டு ஆறுமாதங்கள் சமாளித்தோம்.
ஆரம்பத்தில் எட்டு மணி நேரம் மட்டுமே வேலை நடக்கும். நான் மார்க்கெட்டிங் செல்வேன், தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று மொத்த வியாபாரம் செய்பவர்களைச் சந்தித்து ஆர்டர் பிடிப்பேன். கேரளாவுக்கு சென்றால், அங்கு பேருந்து நிலையம், ஆட்டோ ஓட்டுநர்கள் என யாரிடமாவது பேச்சு கொடுத்து மொத்த விற்பனையாளர்களை தெரிந்து கொள்வோம். அருண்குமார் உறவினர் ஒருவர் அந்தமானில் இருக்கிறார். அவர் எங்களது தயாரிப்பை கேள்விபட்டு அங்கு விற்பனை செய்ய மொத்தமாக ஆர்டர் கொடுத்தார். இப்போது அந்தமானில் எங்களுக்கு என்றே இரண்டு நபர்கள் வேலை செய்து வருகின்றனர்.
தொடர்ந்து நிர்வாகம் மற்றும் கணக்கு வழக்குகளை பார்த்துக் கொள்ளும் ஆனந்த்.. தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
ஆர்டர்களுக்கு ஏற்ப பார்சல் அனுப்பும் வேலைகளைக் கூட நாங்களே செய்வோம். ஏற்றி இறக்கும் செலவுகளுக்கு ஒரு பண்டலுக்கு பத்து ரூபாய் என்றோ, அல்லது லோடு கணக்கிலோ கூலி கொடுக்க வேண்டியிருக்கும். ஒரு மாதத்தில் இரண்டு மூன்று தடவை இப்படி அனுப்புகிறோம் என்றால், ஒவ்வொரு முறையும் 2 ஆயிரம், 3 ஆயிரம் கொடுக்க வேண்டியிருக்கும்.
எனவே இந்த வேலைகளையும் நாங்களே செய்வோம். இன்ஜினீயரிங் படித்துவிட்டு இப்படி மூட்டை தூக்குகிறோமே என்றுகூட சில நேரங்களில் யோசிப்போம். ஆனால் இதையே விளையாட்டாக பேசி சோகத்தை விரட்டிவிடுவோம். இப்படித்தான் நாங்கள் இந்த தொழிலை வளர்த்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.
தற்போது நான்கு பேருக்கு வேலை கொடுத்துள்ளனர். மின்வெட்டு பிரச்சினை பெரிதாக இல்லை என்பதால் ஒரு நாளில் 20 மணி நேரமும் உற்பத்தி செய்கின்றனர். அந்தமானுக்கு அனுப்புவது தவிர, கொங்கு மண்டலம், கேரளா மற்றும் தென் மாவட்டங்களில் சந்தை வைத்துள்ளனர். தொழிலில் வீட்டில் உள்ளவர்களின் தலையீட்டை அனுமதிப்பதில்லை. வேலையை பகிர்ந்து கொள்வதால் எந்த சிக்கலும் இல்லாமல் சிறந்த முறையில் நடைபெறுகிறது என்கின்றனர். ரிஸ்க் எடுப்பதற்கு வயது தடையில்லை, முயற்சி யும் ஆர்வமும் வேண்டும் என்பதுதான் இவர்கள் முன்வைக்கும் பாடம்.
maheswaran.p@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT