Published : 06 Jul 2015 11:06 AM
Last Updated : 06 Jul 2015 11:06 AM
நான் சம்பளம் வாங்கத் தொடங்கிய மூன்றாவது மாதத்தில் எனது முதலீட்டுப் பயணத்தைத் துவங்கினேன். இந்தக் கட்டுரைத் தொடரில் என்னென்ன விஷயங்களெல்லாம் ஆபத்தானவை, செய்யத்தகாதவை என்று சுட்டிக் காட்டி எச்சரித்தேனோ அவற்றையெல்லாம் செய்திருக்கிறேன். பங்குகளை சரியான விலையில் வாங்கி, பொறுமையின்றி, தவறான விலையில் விற்றிருக்கிறேன்.
ஊரார் சொல் பேச்சு கேட்டு தவறான பங்குகளை ஆராயாமல் வாங்கி, இழப்புகளைச் சந்தித்திருக்கிறேன். ஒரு நண்பர் பரிந்துரைத்த விற்பனையாளர் ஒருவரிடம் ஒரு முதலீடு கலந்த காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து ஒரு தொகையை இழந்திருக்கிறேன்.
தப்பிப் பிழைத்தேன்
ஆனால், ஓரளவு அதிர்ஷ்டம், ஓரளவு என் முயற்சி ஆகியவை காரணமாக சீக்கிரமே இத்தகைய நடவடிக்கைகளைக் கைவிட முடிந்தது. நேரடி பங்குச் சந்தை முதலீடுகளைப் பெருமளவு குறைத்துக் கொண்டேன். காப்பீட்டுத் திட்டத்திலிருந்து ஓரிரு மாதங்களில் வெளியேறி விட்டேன். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்ற ரீதியில் தப்பிப் பிழைத்தேன்.
அதன் பின்னர் ஒரு ஆலோசகரின் உதவியுடனும், சற்றுக் கற்றுத் தெரிந்தும் பரஸ்பர நிதிகள் பற்றிப் புரிந்து கொண்டு அவற்றில் முழு வீச்சுடன் முதலீடு செய்யத் துவங்கினேன். இன்று எனது நிதி வளத்தில் 90% பரஸ்பர நிதிகளில் தாம் உள்ளன. எனது தேவைக்கேற்ற ரிஸ்குடன் - பாதுகாப்பாக, ஆரோக்கி யமாக. காப்பீடு என்ற வகையில் ஒரு டேர்ம் திட்டம் மட்டுமே வைத் திருக்கிறேன்.
இந்த எனது பயணத்தில் நான் அறிந்து கொண்டவைகளை, நான் முழுதுணர்ந்து செயல்படுத்தும் விஷயங்களையே உங்களிடம் இந்த கட்டுரைத் தொடர் மூலமாகப் பகிர்ந்து கொள்ள முனைந்தேன்.
இந்தக் கட்டுரைத் தொடரில் பேசப் பட்ட விஷயங்களை ஒரு சாராம்ச பட்டி யலாகப் பார்க்கலாம்.
10 விஷயங்கள்
முதலில், ரிஸ்க் எடுப்பது நல்லது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ரிஸ்க் எடுக்காத முதலீட்டு முறைகள் யாவையுமே உங்களுக்கு ‘நிஜ லாபத்தை’ பெற்றுத் தராது. வரிகள் மற்றும் பணவீக்கம் போக உங்கள் கையில் மிஞ்சும் நிதியின் அளவு உங்கள் முதலை விட குறைவாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம்.
இரண்டாவது, ரிஸ்க் என்பதைச் சரியான அளவில் உங்கள் முதலீட்டுக் காலம், உங்கள் வயது, ரிஸ்க் ஏற்புத்திறன் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எடுக்க வேண்டும். யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டு மானாலும் ரிஸ்க் எடுக்கலாம் என்பது சரியான அணுகுமுறை அல்ல.
மூன்றாவது, பங்குச் சந்தை முதலீடு என்பது முதலீட்டு ரிஸ்கினை அளந்து எடுப்பதற்கு ஒரு இன்றியமையாத சாதனம். அதை உதாசீனப்படுத்துவது தவறு. அது குறித்து இருக்கும் மனத் தடைகள் களையப்பட வேண்டியவை.
நான்காவது, நேரடி பங்குச் சந்தை முதலீடு என்பது தேர்ந்த முதலீட்டா ளர்களுக்கு மட்டுமே கைவரக் கூடிய விஷயம். அதைப் போகிற போக்கில் அசட்டையாகவோ, அதீத ஆர்வத்துடனோ செய்ய முற்பட்டால், முதலுக்கு மோசம் உண்டாவதற்கே சாத்தியம் அதிகம்.
ஐந்தாவது, பங்குச் சந்தை முதலீட்டினை செய்ய சிறந்த சாதனம் பரஸ்பர நிதிகளே. இவற்றின் மூலமாகவே, தேர்ந்த நிபுணர்களின் பராமரிப்பு, பரவலாக்குதல் மூலமாக ரிஸ்க் குறைத்தல், நமக்கு வேண்டியபடி முதலீடு செய்யும் வசதி ஆகியவை சாத்தியமாகின்றன.
ஆறாவது, ரிஸ்கினை காலத்தால் வெல்லலாம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். காலம் கூடக் கூட நமது முதலீட்டின் ரிஸ்க் அளவு குறைகிறது. இதைச் சரிவர செயல்படுத்த சிறந்த வழி மாதாமாதம் ஒரு தொகையை நிதித்திட்டத் தொகுப்பில் முதலீடு செய்யும் ஸிப்(SIP - Systematic Investment Plan) முறை மூலமாக முதலீடு செய்வதே.
ஏழாவது, ஒரு நல்ல நிதிவள ஆலோசகரை நாடத் தயங்காதீர்கள். அவரைத் தேர்ந்தெடுக்கும் போது அவர் ஒரு ஆலோசராக இருப்பதும், வெறும் விற்பனையாளராக இல்லாமலிருப்பதும் முக்கியம். ஒரு நல்ல ஆலோசகர் கொடுக்கும் வழிகாட்டுதல்களும், பரிந்துரைகளும் உங்களை முதலீட்டுத் திட்டங்களில் ஆரம்பிக்க மட்டுமல்ல, தொடர்ந்து முதலீடு செய்யவும் வழி அமைத்துக் கொடுக்கும்.
எட்டாவது, அப்படியே உங்க ளுக்கு ஒரு ஆலோசகர் அமைய வில்லையென்றாலும் பரவாயில்லை. ஒரு எளிமையான திட்டத்தினை நமக்கு நாமே வகுத்துக் கொள்வதும் சாத்திய மானதே. சில எளிய வழிமுறைகளையும், விதிகளையும் பின்பற்றி ஒரு நிதித் தொகுப்பினை உருவாக்கி முதலீடு செய்யத் துவங்கலாம்.
ஒன்பதாவது, நாம் நல்ல திட்டங்களில் முதலீடு செய்தால் மட்டும் போதாது. தவறான திட்டங்களில் நுழையாமல் இருப்பதும் முக்கியம். இதில் முக்கியமாக நாம் கருத வேண்டியது காப்பீடு சார்ந்த முதலீட்டுத் திட்டங்கள். இவற்றை முற்றிலும் புறக்கணிப்பதே சரியானது.
பத்தாவது, முதலீடு சார்ந்த காப்பீடு திட்டங்களை ஒதுக்க வேண்டுமே ஒழிய, மொத்தமாக காப்பீட்டுத் திட்டங் களையே ஒதுக்கக் கூடாது. காப்பீடு என்பது முக்கியமானது, குறிப்பாக ஆயுள் காப்பீடு. இதற்காக வெறும் காப்பீடு மட்டுமே வழங்கும் டெர்ம் திட்டங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதே சரியானது. முடிவாக ஒரு விஷயம். ஒரு முதலீட்டுத் திட்டத்தினை எவ்வளவு சீக்கிரம் ஆரம்பிக்கிறோமோ அவ்வள வுக்கு அவ்வளவு நல்லது. ஆனால், ஆரம்பித்து விட்டால் மட்டும் போதாது. தொடர்ந்து அந்தத் திட்டத்தினை கைவிடாது செயல்படுத்திக் கொண்டி ருக்க வேண்டும்.
வெற்றி ரகசியம்
தனது பதினோராம் வயதில் தனது பங்குச் சந்தை முதலீடுகளைத் துவக்கிய உலகப்புகழ் முதலீட்டாளரான வாரன் பஃபெட் சொன்னதை மீண்டும் நினைவு படுத்துகிறேன். முதலீடுகள் என்பது பொறுமையற்றவர்களிடமிருந்து பணத்தை எடுத்து பொறுமை உள்ளவர்களுக்குக் கொடுக்கும் ஒரு சாதனம் என்பதே அவரது கூற்று. பணம் உங்களிடமிருந்து எடுக்கப்படுகிறதா, கொடுக்கப்படுகிறதா என்பது நீங்கள் எவ்வளவு பொறுமையாக உங்கள் முதலீடுகளைக் கையாள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. வள்ளுவர் சொன்னது போல், இது எண்ணித் துணிய வேண்டிய விஷயம்; துணிந்த பின் எண்ணுவது (பின் வாங்குவது) பிழை.
நமது நிதிவளத்தை மேம்படுத்த சிறப்பான வழிகள், சரியான பாதைகள் எவை என்று நாம் உள்ளத் தெளிவுடன் தெரிவு செய்வதே முதல் படி. பின்னர் நமக்குத் தேவை நம்பிக்கையும், மனதிலும் காரியத்திலும் உறுதியும். இவை இருந்தால் நெருங்கின பொருட் கள் கைப்படும்; தனமும் இன்பமும் சேரும்; கனவுகள் மெய்ப்படும்.
வாழ்க வளமுடன்!
முதலீடுகள் என்பது பொறுமையற்றவர் களிடமிருந்து பணத்தை எடுத்து பொறுமை உள்ளவர்களுக்குக் கொடுக்கும் ஒரு சாதனம் என்பதே உலகப்புகழ் முதலீட்டாளரான வாரன் பஃபெடின் கூற்று. பணம் உங்களிடமிருந்து எடுக்கப்படுகிறதா, கொடுக்கப்படுகிறதா என்பது நீங்கள் எவ்வளவு பொறுமையாக உங்கள் முதலீடுகளைக் கையாள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.
srikanth@fundsindia.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT