Published : 20 Jul 2015 10:55 AM
Last Updated : 20 Jul 2015 10:55 AM

உன்னால் முடியும்: மக்கள் கொடுத்த ஆதரவுதான் என் வளர்ச்சி

மதுரை சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில் நாற்பது பணியாளர்களுடன் பரபரப்பாக இயங்குகிறார் திண்ணப்பன். நொறுவைகள் என்கிற ஸ்நாக்ஸ் வகையறா தயாரிப்பில் மதுரை சுற்று வட்டாரங்களில் வெற்றிகரமான தொழில்முனைவோராக வலம்வருகிறார். படித்தது எம்பிஏ. செட்டிநாடு பாரம்பரிய ஸ்நாக்ஸ் என்று வீட்டிலேயே சிறிய அளவில் தொடங்கியவர், இன்று தேவகோட்டை, மதுரை என இரண்டு ஊர்களில் தொழில் கூடங்கள் வைத்துள்ளார்.

மதுரை தவிர புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், திருநெல்வேலி, சிவகங்கை என எட்டு மாவட்டங்களில் சந்தையை பிடித்துள்ளார். இவரது தொழில் அனுபவம் இந்த வாரம் உன்னால் முடியும் பகுதியில் இடம்பெறுகிறது.

இந்த வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்தது எனது பெற்றோர்தான், அவர் களுக்கான நன்றியோடு தொடங்குகிறேன் என பேசத் தொடங்கினார். காரைக்குடிதான் சொந்த ஊர். பிகாம் படித்தேன். பிறகு தொலைநிலை வழியில் எம்பிஏ முடித்திருந்தேன். படிக்கும் காலத்திலேயே உணவு துறையில் ஈடுபாடு இருந்தது. அதிலும் எங்கள் செட்டிநாடு வகையறா நொறுக்குத் தீனி, இனிப்புகள் மீது மிகுந்த ஈடுபாடு.

வீட்டில் அப்பா சிறிய அளவில் சோப்பு ஆயில் போன்றவை தயாரித்து வந்தார். அம்மா ஊறுகாய் தயாரித்து கேட்பவர்களுக்கு கொடுப்பார். அப்பா அம்மாவின் சிறிய வருமானத்தில்தான் எங்கள் குடும்பமே இருந்தது. படித்து விட்டு வேலைக்கு போவேன் என நினைத் தார்கள். ஆனால் நான் உணவுதயாரிப்பில் ஆர்வமாக இருந்ததும் இதை தொழிலாக செய்ய திட்டமிட்டதற்கும் மறுப்பு சொல் லாமல் அம்மா அப்பாவும் இதற்கு ஊக்கம் கொடுத்தனர்.

அம்மாவின் அம்மா, அதாவது எனது ஆச்சி செட்டுநாடு பகுதியில் செய்யக்கூடிய சுருள் முறுக்கு நன்றாகச் செய்வார். முதலில் அதை மட்டுமே செய்து பிரபலப்படுத்துவது என திட்ட மிட்டேன்.

அவரிடம் பக்குவம் கேட்டு, வீட்டிலேயே சிறிய அளவில் 25 ஆயிரம் முதலீட்டில் அதை மட்டும் செய்யத் தொடங்கினேன்.

மற்ற நொறுவைகள் சந்தையில் இருந்தாலும், தனித்துவமாக இருந்தால் தான் இதில் நீடிக்க முடியும் என்பதால் தரம்தான் முக்கியம். இதற்கு ஏற்ப விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் மக்கள் வரவேற்பு கொடுப்பார்கள் என்பது என் எண்ணம்.

நானே தயாரித்து பாக்கெட் போட்டுக்கொண்டு கடைகளுக்கு செல்வேன். வாங்கவே தயங்குவார்கள். மேலூர் பக்கத்தில் ஒரு கடையில் முதலில் 5 பாக்கெட் போடச் சொன்னார்கள். அதிலிருந்து ஏறுமுகம்தான்.

அந்த மேலூர் கடையில் இப்போது வாரத்துக்கு 500 பாக்கெட் வாங்குவதுதான் காலம் கொடுத்த பரிசு.

நான் என் வீட்டிலேயே சிறிய அளவில் தயாரித்து வந்தவரை எந்த பிரச்சினையுமில்லை. கொஞ்சம் வளர ஆரம்பித்த பிறகு ஏரியாவில் சிலர் பிரச்சினை செய்யத் தொடங்கினர். உடனே வீட்டை காலிசெய்ய வேண்டிய நிலைமை. பிசினஸ் நன்றாக போகிறது என்பதால் விரிவுபடுத்த வேண்டிய தேவையும் இருந்தது.

இவை இரண்டையும் கணக்கிட்டு மதுரை சிட்கோவில் இடம் வாங்கினேன். ரூ.25 ஆயிரம் முதலீட்டில் தொடங்கிய தொழில், அதிலிருந்து வருமானம் எடுத்துதான் இந்த இடத்தை வாங்கினேன். அதற்கு பின்னால் என் கடின உழைப்பு தவிர வேறில்லை.

தொழிலை விரிவுபடுத்திய பிறகு உற்பத்தியை அம்மா கவனித்துக் கொள்ள நான் மார்க்கெட்டிங் செல்வேன். செட்டிநாடு பாரம்பரிய திண்பண்டங்களுக்கு மக்கள் கொடுத்த ஆதரவுதான் என் வளர்ச்சி. இப்போது கைகளால் செய்துவந்த பல வேலைகளுக்கு இயந்திரம் வைத்துள் ளோம்.

சுமார் நாற்பது நபர்களுக்கு வேலை கொடுத்துள்ளேன். மதுரையில் தயாரிப்பை நான் கவனித்துக் கொள்ள, அப்பா தேவக்கோட்டை தயாரிப்பு யூனிட்டை கவனித்துக் கொள்கிறார். அங்கு சில்லறை விற்பனை கடையும் தொடங்கியுள்ளோம்.

எனது உறவினர்களில் சிலரே ”முறுக்கா விக்கிற” என கேட்டிருக்கிறார்கள். அவர்கள் சாதாரணமாக கேட்கிறார்களா அல்லது கிண்டல் செய்கிறார்களா என்பது குறித்தெல்லாம் யோசித்த தில்லை. ஆனால் இப்போது அவர்களே போன் செய்து ஆர்டர்களை கொடுக்கிறார்கள்.

எல்லா சந்தர்ப்பங்களிலும் மொத்த குடும்பமும் என்னை ஊக்குவித்து பின்னால் நிற்கிறது. தவிர என் உழைப்பை இந்த சமூகம் அங்கீகரிக்கிறது. எனக்கு இது போதும் என்று நெகிழ்ச்சியோடு கூறுகிறார் இந்த செட்டிநாட்டு ஸ்நாக்ஸ்காரர்.

maheswaran.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x