Published : 08 Jun 2015 11:32 AM
Last Updated : 08 Jun 2015 11:32 AM
நான் படித்த மயிலை விவேகானந்தா கல்லூரியின் வெள்ளிவிழாக் கொண்டாட்டங்களுக்கு அப்போ தைய குடியரசுத் தலைவர் வி.வி.கிரி அவர்களை அழைத்து இருந்தோம். முன்னேற்பாடுகளைச் சரிபார்க்க வந்த பாதுகாப்பு அதிகாரிகள் கல்லூரி வாசலிலிருந்து விழாமேடை வரை ஒவ்வொன்றாக ஆராய்ந்தனர். எங்களை அவர்கள் கேட்ட முதல் கேள்வி குடியரசுத் தலைவரின் வாகனம் எதுவரை வந்து நிற்கும் என்பது.
கல்லூரி வாயிலைக் காண்பித்தவுடன் குடியரசுத் தலைவர் இவ்வளவு தூரம் எப்படி நடப்பார் என்றதும் காரை விழாமேடை வரை எடுத்துச் செல்லலாமே என்றோம். அப்படியானால் முதலில் அதற்குச் சரியான சாலையை அமையுங்கள் என்றனர். சரியென்றதும் பாதுகாப்புக் குறித்துப் பலகேள்விகள் கேட்டுவிட்டு அன்று மழை பெய்தால் என்ன செய்வது என்று கேட்டனர். இது மழைக்காலம் இல்லை என்றோம்.
எங்களை உதாசீனமாகப் பார்த்துவிட்டு, ஒருகால் மழைபெய்தால் என்ன செய்வீர்கள் என்றனர். இதுகூடத் தெரியாதா என்று நினைத்துக்கொண்டு, குடைபிடிக்க வேண்டியது தானே என்றோம். அவர்கள் இரு குடைகள் தயாராக வைத்துக் கொள்ளப்பட வேண்டுமென்றும் அக்குடைகளை பிடித்துக்கொள்வது யார் என்றும் கூட முடிவு செய்ததாக ஞாபகம்!
தொடக்கத்திலேயே யோசித்து சிறுசிறு விஷயங்களைக் கூட கவனத்தில் கொண்டதால் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக அமைந்தது. சற்றே எண்ணிப் பாருங்கள். அவ்வாறு முன் ஏற்பாடுகள் செய்யாதிருந்தால் குடியரசுத் தலைவரை 150 மீட்டர் நடக்கவிட்டிருக்க முடியுமா? தவறி மழை பெய்திருந்தால், அவரை நனைய விட்டுப் பின்னர் துண்டு கொடுத்து தலையைத் துவட்டி மேடையில் உட்கார வைத்திருக்க முடியுமா?
எந்தச் செயலையும் தொடங்கும்முன்பே நன்கு ஆராய்ந்து திட்டமிட்டுச் செய்தால் தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்கலாம். ஆரம்பித்து விடுவோம் எல்லாம் தானாக நடக்கும் என்பது சிலரது நம்பிக்கை, அதாவது மூடநம்பிக்கை!
ராணுவ அணிவகுப்புகள், கலைநிகழ்ச்சிகள் பலநாள் ஒத்திகைக்குப் பிறகு நடத்தப்படுகின்றன. மங்கள்யான் திட்டத்தில் செவ்வாய்க்கிரகத்திற்குப் பயண தூரம் 78 கோடி கிமீ! புவிஈர்ப்பு சக்தியை மீறிச் செல்வதற்கு வேண்டிய வேகம் வினாடிக்கு 11கிமீ!! மிகத் துல்லியமாக திட்டம் போட்டதால் முதல் முறையே வெற்றிகொண்ட முதல் நாடாக பெருமை கொண்டது நம்நாடு!
அலுவலகத்திலும் வணிகத்திலும் அப்படித்தான். வேலை செய்யாத தொழிலாளியைப் பணி நீக்கமோ பணியிடை நீக்கமோ செய்வதென்றால் அதன் சாதக பாதகங்களை ஆராய வேண்டுமில்லையா? எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயலாற்ற முடியாது. மானசீகமாக எடுத்துக்கொண்ட செயலின் முடிவு வரை பயணித்துத் திரும்புவது நன்று! Devil’s Advocate என்றும் கேள்விப்பட்டிருப்பீர்கள்!!
ஒரு செயலைத் தொடங்கும்முன்பு, அதைச் செய்து முடிக்கும் வழியையும் ஆராய்ந்து அதன் பின்னரே தொடங்க வேண்டும்; தொடங்கிய பின்னர் அதைத் தொடரலாமா எப்படி முடிப்பது என்று ஆராய்வது புகழைக் கெடுக்கும் எனும் குறளின் மேலான மேலாண்மை யோசனையைக் கேட்போமா,
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு
somaiah.veerappan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT