Published : 01 Jun 2015 10:41 AM
Last Updated : 01 Jun 2015 10:41 AM

இந்தியா ஒளிர்கிறதா?

இந்தியா வளர்கிறது, இந்தியா ஒளிர்கிறது, மேக் இன் இந்தியா என அரசியல் கட்சிகள் மாறும்போது எழும் கோஷங்கள் ஒருபுறமிருந்தாலும், நிதர்சனமான உண்மையை பிரதிபலிப்பது புள்ளிவிவரங்கள்தான்.

தாராளமயம் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சியை கணித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை, முந்தைய 10 ஆண்டுகளில் இருந்ததைவிட அதாவது 1990 முதல் 1999 வரையான காலத்தை விட 2000-வது ஆண்டிலிருந்து 2012-ஆம் ஆண்டு வரையான காலத்தில் இந்தியா பின்தங்கியுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை ஆசிய பிராந்தியத்தில் பொருளாதார சமூக சூழல் குறித்த அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் இந்த யுஎன் இஎஸ்சிஏபி என்ற அறிக்கையில் இந்தியா மற்றும் சீனாவில் நிலவும் சமூக ஏற்றத் தாழ்வும், வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

மொத்தம் ஆசிய பிராந்தியத்தில் 16 நாடுகளில் சமூக, பொருளாதாரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் இந்தியா 14- வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. முந்தைய கால கட்டத்தில் (1990-1999 வரை) இந்தியா 13-வது இடத்தில் இருந்தது. தற்போது மேலும் ஒரு படி கீழிறங்கியுள்ளதானது சமூக பொருளாதார சூழலில் இந்தியா பின்னோக்கி செல்வதையே காட்டுகிறது.

ஒருங்கிணைந்த வளர்ச்சி என்பதில் மூன்று முக்கிய அளவுகோல்கள் பின்பற்றப்பட்டுள்ளன. பொருளாதார வளர்ச்சி. சமுதாய வளர்ச்சி மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட அளவீடுகள் அடிப்படையில் நாடுகள் தர வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியா, சீனா மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் ஏழை, பணக்காரர் இடையிலான இடைவெளி அதிகரித்துள்ளது. ஏற்றத் தாழ்வு அதிகம் காணப்படுவதோடு வேலையில்லாத் திண்டாட்ட நிலை மிகவும் மோசமாக உள்ளது. இருந்தாலும் இந்த நாடுகள் ஏழ்மை ஒழிப்பில் முன்னேற்றம் கண்டுள்ளதாக கூறி வருகின்றன.

அறிக்கையில் ஏழ்மை ஒழிப்பில் முன்னேற்றம் எட்டப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அது எந்த அளவுக்கு என்பது இங்குள்ள அரசியல்வாதிகள், பொருளாதார மேதைகளுக்கே வெளிச்சம். நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 5 சதவீதத்தை சுகாதாரத்துக்கு செலவிட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. ஆனால் இந்தியா தனது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5 சதவீதத்தைக் கூட செலவிடவில்லை என்பதுதான் உண்மை நிலவரமாகும்.

கடந்த இருபது ஆண்டுகளில் முதலிடத்தை கஜகஸ்தான் தக்க வைத்திருக்கிறது. ருஷிய குடியரசு, தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

முந்தைய காலகட்டத்தை விட முன்னேற்றம் கண்ட நாடுகள் வரிசையில் இலங்கை, ஈரான், சீனா ஆகியன இடம்பெற்றுள்ளன. அண்டை நாடான நேபாளம் கடந்த முறை 15-வது இடத்திலிருந்து 13-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

கிரிக்கெட்டில் பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்தால் ஏற்படும் மகிழ்ச்சி ஆரவாரத்தைப் போல இந்த பட்டிய லிலும் பாகிஸ்தான் கடைசி இடத்தில் அதாவது 16-வது இடத்தில் இருப்பதைப் பார்த்து பெருமைப்பட்டுக் கொள்வதா? சிந்திக்க வேண்டிய தருணமிது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x