Last Updated : 29 Jun, 2015 10:39 AM

 

Published : 29 Jun 2015 10:39 AM
Last Updated : 29 Jun 2015 10:39 AM

திவாலாவதில் இருந்து தப்புமா கிரீஸ்?

இன்று உலகம் முழுவதும் கொண்டாடும் ஒலிம்பிக் போட்டியை உலக நாடுகளுக்கு வழங்கிய கிரேக்கம் எனப்படும் கிரீஸ் மிகப் பெரிய நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

இந்த ஆண்டுக்குள் சர்வதேச செலாவணி நிதியத்துக்கு 970 கோடி யூரோவை செலுத்தியாக வேண்டும். குறிப்பாக வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் சர்வதேச செலாவணி நிதியத்துக்கு (ஐஎம்எப்) 173 கோடி டாலர் (150 கோடி யூரோ) கடனை திரும்ப செலுத்த வேண்டும். இதைச் செலுத்தாவிட்டால் கிரேக்கம் திவாலாகிவிடும்.

இவ்வாறு கிரேக்கம் திவாலாவதைத் தடுப்பதற்காக ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள நாடுகள் அந்நாட்டுக்கு கடன் அளித்து அதை நெருக்கடியிலிருந்து மீட்க திட்டமிட்டுள்ளன.

இதற்காக கடந்த ஒரு வாரமாக பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய நாடுகளின் நிதி அமைச்சர்கள் நடத்திய 10 சுற்று பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டப்படவில்லை.

இதனி டையே கடன் வழங்கும் நாடுகள் விதிக்கும் நிபந்தனைகள் குறித்து கருத் தொற்றுமை எட்டுவதற்காக ஜூலை 5-ம் தேதி நாடாளுமன்றத்தைக் கூட்டியுள்ளார் கிரீஸ் பிரதமர் அலெக்சிஸ் சிபிராஸ்.

கிரீஸ் நிதி நெருக்கடியில் சிக்கியது எப்படி?

வீட்டைப் போலத்தான். வரவு எவ்வளவு என்று தெரியாமலேயே கடன் வாங்கி செலவு செய்தால் என்னவாகுமோ அதே பிரச்சினைதான் கிரீஸுக்கு இப்போது ஏற்பட்டுள்ளது. மன்னராட்சி யிலிருந்து மாறி ராணுவப் புரட்சிக்கு உள்ளாகி 1970-களில் ஜனநாயகப் பாதைக்குத் திரும்பிய கிரீஸ், தற்போது நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

டாலருக்கு மாற்றாக ஒரு வலுவான கரன்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கியதுதான் யூரோ. 1999-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த கூட்டமைப்பில் 19 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இதில் சிறிய நாடான கிரிஸும் ஒன்றாகும். இந்த நாடுகள் அனைத்தும் யூரோவை பயன்படுத்துகின்றன.

டாலருக்கு நிகரான யூரோவின் மாற்று மதிப்பு கடந்த சில ஆண்டுகளாக சரியத் தொடங்கியது. இதனால் 2010-ம் ஆண்டிலிருந்தே நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது கிரீஸ்.

கிரீஸுக்கு 2,400 கோடி யூரோவை கடனாக வழங்குவது குறித்துதான் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் சர்வதேச செலாவணி நிதியத்தின் தலைவர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்தத் தொகையை விடுவிக்க வேண்டுமென்றால், சில நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என்று கடன் வழங்க முன்வரும் நாடுகள் வலியுறுத்துகின்றன.

அரசு செலவுகளைக் குறைக்க வேண்டும், ஓய்வூதிய வயதை அதிகரிக்க வேண்டும் (தற்போது கிரிஸீல் ஓய்வு பெறுவோர் வயது 57 ஆகும்), ஓய்வூதியத் தொகையைக் குறைக்க வேண்டும், வரி விதிப்பு அளவை அதிகரிக்க வேண்டும் என்பன முக்கியமான நிபந்தனைகளாகும்.

இந்த நிபந்தனைகளை ஏற்பதா வேண்டாமா என்பது குறித்து விவாதிப் பதற்குத்தான் ஜூலை 5-ம் தேதி நாடாளுமன்றத்தைக் கூட்டியுள்ளார் கிரீஸ் பிரதமர் அலெக்சிஸ் சிபிராஸ்.

ஒருவேளை கடன் வழங்கும் நாடுகள் விதிக்கும் நிபந்தனைகளை கிரீஸ் ஏற்காமல் போனால் ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறும்.

இதனால் ஐஎம்எப்-க்கு வழங்க வேண்டிய கடன் தொகையை திரும்பச் செலுத்த முடியாமல் போகும். நாடு திவாலாகிப் போகும். இந்த ஆண்டுக்குள் சர்வதேச செலாவணி நிதியத்துக்கு 970 கோடி யூரோவை செலுத்தியாக வேண்டும். அதில் ஒரு பகுதி தவணையான 150 கோடி யூரோவை இம்மாதம் 30-ம் தேதிக்குள் செலுத்தியாக வேண்டும். ஒருவேளை நிதி வழங்கும் நாடுகள் அளிக்கும் நிபந்தனையை கிரீஸ் ஏற்றுக் கொண்டால் இத்தவணையை திரும்பச் செலுத்த ஒரு மாதம் அவகாசம் அளிக்கக்கூடும்.

ஒருவேளை நிபந்தனையை கிரீஸ் ஏற்கவில்லையென்றால், கூட்டமைப் பிலிருந்து கிரீஸ் வெளியேறுவதைத் தடுக்க வேண்டாம் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் உறுப்பு நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளார். அவ்விதம் வெளியேறினால்தான், உண்மை நிலையை கிரீஸ் உணரும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேசமயம், கிரீஸ் வெளியேற அனுமதித்தால் அது தங்கள் கூட்ட மைப்புக்கு பலவீனமாக அமைந்துவிடும் என்று ஐரோப்பிய நாடுகள் கருதுகின்றன.

உலக ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) கிரீஸின் பங்களிப்பு வெறும் 0.3 சதவீதம்தான். ஆனால் அதனால் ஏற்படும் பிரச்சினை ஐரோப்பிய நாடுகளை மட்டுமல்ல பிற நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

ஒருவேளை கூட்டமைப்பிலிருந்து கிரீஸ் வெளியேறினால், அதைத் தொடர்ந்து இதேபோன்ற நிதி நெருக் கடியில் இருக்கும் இத்தாலி, போர்ச் சுக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளும் வெளியேறும் நிர்பந்தம் உருவாகும். அது ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பை மேலும் பலவீனமடையச் செய்யும்.

ஐரோப்பிய வங்கிகள் வழங்கிய கடன் அளவில் கிரீஸ் நிறுவனங்களுக்கு அளித்த தொகை ஒரு சதவீதத்துக்கும் குறைவானதாகும். இருந்தாலும் கிரீஸ் வெளியேறும் பட்சத்தில் அது சர்வதேச நிதிச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து கிரீஸ் வெளியேறினால் அங்கு மிகப் பெரிய நிதி நெருக்கடி உருவாகும். ஏற்கெனவே வங்கிகளிலிருந்து ரொக்கத்தை எடுக்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருத்து எடுத்துச் செல்கின்றனர். ஏடிஎம்கள் பலவும் வறண்டு போய்விட்டன. வேலையில்லாத் திண்டாட்டம் 28 சதவீத அளவுக்கு அங்கு அதிகமாக உள்ளது. இதனால் உள்நாட்டுக் கலவரம் ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது.

ramesh.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x