Published : 15 Jun 2015 10:16 AM
Last Updated : 15 Jun 2015 10:16 AM
தற்போதைய நிலைமையில் வங்கி களின் மிகப்பெரிய பிரச்சினை வாராக் கடன். அது தனியார் வங்கியாக இருந்தாலும் சரி, பொதுத்துறை வங்கியாக இருந்தாலும் சரி வாராக்கடன் நிரந்தர தலைவலியை கொடுத்துவருகிறது.
இந்த நிலையில் கடந்த வாரம் வாராக்கடன் பிரச்சினையை தீர்க்க ரிசர்வ் வங்கி எஸ்டிஆர் எனும் உத்திசார் கடன் மறு சீரமைப்பு (strategic debt restructuring) என்னும் திட்டத்தை அறிவித்தது. இதன்படி கடன் பிரச்சினையில் சிக்கித்தவிக்கும் நிறுவனங்களின் கடன்களை, பங்குகளாக மாற்றி வங்கி எடுத்து கொள்ள முடியும்.
இதற்கான joint lenders forum ஒன்றினை அமைத்து வாராக்கடன் மற்றும் திருப்பி செலுத்தாத வட்டியை நிறுவனத்தின் பங்குகளாக மாற்றலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் 51 சதவீத பங்குகள் வரை கடன் கொடுத்த வங்கிகளுக்கு கிடைக்கும். மேலும் வங்கியின் இயக்குநர் குழுவை மாற்றி அமைக்கும் அதிகாரமும் வங்கிகளுக்கு கிடைக்கும்.
மேலும் கடன் வாங்கியவருக்கு அந்த நிறுவனம் அவருடைய கட்டுப் பாட்டில் இருந்து விலகிவிடும் என்று கூறப்பட்டிருக்கிறது.
தேவை என்ன?
இப்போது கடன் வாங்கிய நிறுவனங் கள் கடனை திருப்பி செலுத்த முடிய வில்லை என்றால் Corporate debt restructuring என்று கடனை மறுசீரமைப்பு செய்வார்கள். அதாவது வங்கிகளும் கடன் வாங்கிய நிறுவனமும் ஏதாவது ஒருவகையில் சமரசம் ஏற்பட்டு கடனை திருப்பி செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்குவார்கள்.
ஆனால் பெரும்பாலான நிறுவனங் களால் கடனை மறுசீரமைப்பு செய்தும் கூட கடனை திருப்பி செலுத்த முடிவ தில்லை. வங்கிக்கு கடன் திரும்ப கிடைப்பதில் நிர்வாகம் இடையூறாக இருப்பதால், இப்போது நிர்வாகத்தை கையில் எடுக்கும் திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தி இருக்கிறது.
வங்கியாளர்கள் சொல்வது என்ன?
பெரும்பாலான வங்கியாளர்கள் இந்த திட்டத்தை வரவேற்றிருக்கிறாரகள். ஹெச்டிஎப்சி வங்கியின் தலைவர் ஆதித்யா பூரி கூறும் போது, இந்த திட்டம் வரவேற்கத்தக்கது, நிறுவனத்தின் புரமோட்டர்களுக்கு நிறுவனம் கையைவிட்டு செல்லும் என்று சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் நிறுவனத்தை சரியாக நடத்துவார்கள் என்று கூறியிருக்கிறார். பெரும்பாலான வங்கியாளர்கள் இதே கருத்தை கூறியிருக்கிறார்கள்.
நடைமுறை சிக்கல் என்ன?
நிறுவனம் கடனை திருப்பி செலுத்த வில்லை என்றால், அந்த நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை எடுத்துக்கொள்ள முடிவது சாதகமாக இருந்தாலும், அதனை செயல்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன.
ஏற்கெனவே நிறுவனம் கடனில் இருப்ப தால் அந்த நிறுவன பங்கின் விலைகள் மிகவும் குறைவாகவே வர்த்தகமாகும். அதனால் அந்த பங்குகளை நேரடியாக பங்குச்சந்தையில் விற்பது அவ்வளவு லாபகரமாக இருக்காது.
அடுத்தது, ஏற்கெனவே ஒரு நிறுவனம் கடனில் இருக்கும் போது அந்த நிறுவனத்தை நிர்வகிக்க யார் வருவார்கள். வங்கியின் வசம் 51 சதவீத பங்குகள் இருந்தாலும் வங்கி எப்படி அந்த நிறுவனத்தை நிர்வாகம் செய்து லாப பாதைக்கு திருப்ப முடியும்.
பல துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் இந்த சிக்கலை சந்திக்கும் போது, ஒவ்வொரு துறையை சேர்ந்த தகுதியான நபர்களை வங்கிகள் எப்படி கண்டுபிடித்து கொடுத்த கடனை திருப்பி வசூலிக்கும் என்று பல கேள்விகள் தொக்கி நிற்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT