Published : 08 Jun 2015 11:06 AM
Last Updated : 08 Jun 2015 11:06 AM

உன்னால் முடியும்: வாடிக்கையாளர் குறை சொல்ல வேண்டும்

அழகிய பரிசுப் பொருட்களுக்கு மேலும் அழகு சேர்க்கும் அழகிய பரிசுப் பொருள் பெட்டிகள் (கிப்ட் பாக்ஸ்கள்) தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார் ரதீஷ் குமார் கதிர்வேலு. எனக்கு நானேதான் உற்சாகம் கொடுத்துக் கொள்கிறேன்.

நானே போட்டியும் போட்டுக்கொள்கிறேன். வாடிக்கையாளர்கள் எனது தயாரிப்பில் குறை கண்டுபிடித்து அதை மீண்டும் சரியாக செய்து கொடுப்பதில் கிடைக்கும் திருப்திதான் இந்த தொழிலில் நிலைத்து நிற்பதற்கு காரணம் என்று கூறும் இவரது அனுபவம் இந்த வாரம் இடம் பெறுகிறது.

மின்னணு டிப்ளமோ படித்து முடித்து சிறு சிறு வேலைகள் செய்து கொண்டிருந்தேன். பிறகு நானும் எனது நண்பரும் சேர்ந்து சிறிய அளவில் பிரிண்டிங் வேலைகள் எடுத்து செய்து வந்தோம். அதனோடு பிரிண்டிங் டிசைன் மற்றும் பிரிண்டிங் பேக் என அடுத்தடுத்து வளர்ந்தபோது சில காரணங்களால் இருவரும் சேர்ந்து தொடர முடியவில்லை. அதனால் பொருளாதார இழப்பும் ஏற்பட்டது. அதை சரிக்கட்ட வேலைக்குச் செல்லத் தொடங்கினேன்.

பரிசுப் பெட்டிகளை வாங்கி அதில் பரிசுப் பொருட்களை அனுப்பிவைக்கும் ஒரு ஏற்றுமதியாளரிடம் வேலை கிடைத்தது. அங்கு இருந்த காலத்தில் விதவிதமான கிப்ட் பாக்ஸ்களுக்குத் தேவை இருப்பதை உணர்ந்தேன். மேலும் அந்த ஏற்றுமதியாளர் லெபனானைச் சேர்ந்தவர். நம்மவர்களைப் போல எந்த விஷயத்தையும் செண்டிமெண்டாக அணுக மாட்டார். ``வேலை செய்தால் சம்பளம், அதைத்தாண்டி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’’ என்பது போல பணியாளர்களிடம் அணுகக் கூடியவர்.

அவரிடம் இருந்த காலத்தில் அந்த தொழிலை கற்றுக்கொள்ள வேண்டும். தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது மட்டும்தான் என் நோக்கமாக இருந்தது. இதனால் அந்த நிறுவனத்தின் அனைத்து வேலைகளையும் தட்டாமல் இழுத்து போட்டு செய்வேன்.

ஒருவேளை நான் பொறுப்பாக வேலை பார்க்கிறேன் என்று, கொஞ்சம் அணுசரணையாக நடந்து கொண்டிருந்தால் தனியாக தொழிலில் இறங்கி இருக்க மாட்டேன். அவரிடம் இருந்த அந்த குணம்தான் சொந்த தொழிலை நோக்கித் தள்ளியது. இப்போது அவரும் என்னுடைய வாடிக்கையாளர்களில் ஒருவராக இருக்கிறார் என்பதுதான் காலம் எனக்கு கொடுத்த சந்தோஷம்.

சொந்தமாக இந்த தொழிலை தொடங்கலாம் என முடிவெடுத்தபோது கையில் இருந்தது 6,000 ரூபாய்தான். ஒருவரை வேலைக்கு வைத்துக் கொண்டு வீட்டிலேயே கிப்ட் பாக்ஸ்களை தயார் செய்து கொடுக்கத் தொடங்கினேன். ஏற்கெனவே இருந்த தொடர்புகள் மூலம் தொழில் மெல்ல மெல்ல வளரத் தொடங்கியது. அதற்கு பிறகு அவ்வப்போது ஆர்டர்களுக்கு ஏற்ப தற்காலிகமாக நான்கு, ஐந்து பேர்களை வேலைக்கு அமர்த்திக் கொண்டிருந்தேன்.

நிறுவனங்கள், நேரடி வாடிக்கை யாளர்கள், ஏற்றுமதி என வளரத் தொடங்கியபோது நிரந்தர பணியா ளர்களை அமர்த்திக் கொண்டேன். வாடிக்கையாளர்கள் கேட்கும் டிசைன் மட்டுமில்லாமல், நானே உருவாக்கும் டிசைன்களும் வாடிக்கையாளர்களை ஈர்த்தது. ஆரம்பத்தில் நானே முன்நின்று எல்லா வேலைகளையும் செய்வேன். அப்போதுதான் முழு திருப்தி கிடைக்கும்.

வாடிக்கையாளர்கள் முழு திருப்தி அடைந்தால்தான் என் திறமை மீதே எனக்கு நம்பிக்கை வரும். அவர்கள் குறை கண்டுபிடித்து, அதை நான் சரிசெய்து கொடுக்கும்போதுதான் கஷ்டப்பட்டு உழைத்துள்ளோம் என்கிற எண்ணம் வரும். ஆரம்பத்தில் இப்படி இருந்தது. நமது தொழில் நமக்கு மட்டும்தான் பொறுப்பு என்று. ஆனால் நமது பொறுப்பை ஏற்றுக்கொள்ளத்தான் பணியாளர்களை வைக்கிறோம்.

அவர்களுக்கும் அந்த பொறுப்பையும், திருப்தியையும் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதற்கு பிறகு ஒரு ஆர்டர் கிடைத்தாலும், அது எங்கு செல்கிறது, என்ன பயன்பாடு என்பதை வேலை பார்ப்பவர்களுக்கு விளக்கி விடுவேன். அவர்களும் பொறுப்பாக முழு திருப்தியோடு செய்கிறார்கள்.

ஏதோ தலைவிதி வேலைக்கு வந்தோம் என்றோ, அல்லது வேறு வேலை கிடைக்கவில்லை இந்த வேலைக்கு வருகிறோம் என்று நினைத்துக் கொண் டிருப்பவர்களுக்கு நம்பிக்கையூட்டி, இந்த தொழிலும் நமது வாழ்க்கையை மேம்படுத்தும், எந்த தொழில் என்றாலும் ஈடுபாட்டோடு செய்தால் மனதிருப்தி கிடைக்கும் என்பதை என்னிடம் வேலை பார்பவர்களுக்கும் கொண்டு செல்கிறேன்.

அதற்கு எனது கதையையே உதாரணமாகச் சொல்கிறேன். இப்போது பதினைந்து நபர்களுக்கு வேலை கொடுக்கிறேன். பத்து வருடங்களுக்கு முன்பு ஆறாயிரம் முதலீட்டில், வீட்டிலேயே கைத்தொழிலாக தொடங்கிய தொழில் இன்று இயந்திரங்கள் மூலம் செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. இதற்கு காரணம் தொழில் ஈடுபாடுதான்.

maheswaran.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x