Published : 18 May 2015 12:48 PM
Last Updated : 18 May 2015 12:48 PM

கடன் சூழ் உலகு

கடன் அன்பை முறிக்கும் என்பது வெறும் பழமொழி அல்ல; அது முன்னோர்களின் அனுபவப் பாடம். கடனில்லாத வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை என்று முன்னோர்களும் வாழ்ந்து சென்றிருக்கலாம். ஆனால் இன்றைய காலத்தில் கடனில்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே முடியாது. இன்று எவற்றிற்கு கடன் வாங்கலாம் என்கிற எந்த வரம்புகளும் இல்லாமல் வாங்கிக் குவிக்கிறோம். கட்ட முடியாத அளவுக்கு வாங்கிக் குவித்து, வருமானத்தை கடனுக்கும், வட்டிக்கும் கட்டி வருகிறது பல குடும்பங்கள்.

இதற்கு ஏற்ப கடன் வாங்குவதற்கான வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. கடன் கொடுப்பதற்கு என்றே `லோன் மேளா’-க்களை நடத்துகின்றன வங்கிகள். தொலைக்காட்சிகளில் சரிபாதி விளம்பரங்கள் வீட்டுக்கடன், வாகனக் கடன் என்பதாகவே இருக்கிறது. இதுதவிர தனிநபர் கடன், திருமணம், கல்வி, சுற்றுலா, மருத்துவச் செலவு என அனைத்து வகைகளிலும் கடனை வாங்குவது அதிகரித்துள்ளது. கூடவே வீட்டு உபயோகப்பொருட்கள் கடன், கிரெடிட் கார்டு கடனும் சேர்ந்து கொள்கிறது. ஆக கடனில்லாத ஒரு வாழ்க்கையை வாழ முடியாது என்பதுதான் உண்மை. ஒரு சராசரி குடும்பம் ஏதாவது ஒரு வகையில் கடன் வாங்கியே ஆகவேண்டும்.

நல்லதா, கெட்டதா?

கடன் குறித்த இந்தக் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லிவிட முடி யாது. அது தேவையை பொறுத்தது. அத்தியாவசிய தேவை, ஆடம்பர தேவை இதைப் பொறுத்துதான் கடன் வாங்குவது நல்லதா கெட்டதா என்பதை முடிவு செய்ய முடியும் என்பதுதான் நிதி ஆலோசகர்களின் கருத்து.

மார்க்கெட்டிங் வேலையில் இருக்கும் ஒருவருக்கு பைக் அவசியமானதாக இருக்கும். அவரது தொழிலில் நீடிக்க முடியும். வருமானம் அதிகரிக்க முடியும் என்கிற நிலையில் வாகனக் கடன் அவசியமாகிறது. அதே நேரத்தில் வருமானத்தில் பல கடன்கள் இருந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு நடுத்தர குடும்பம் வாகனக் கடன் வாங்க ஆசைப்படுவது வருமானத்துக்கு மீறியது. சுற்றுலா செல்ல வேண்டும் என்று தனிநபர் கடன் வாங்கினால் அது சுமையாக மாறிவிடும்.

கடன் குறித்த பயமும், பயன்பாடும் இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள். அதாவது நமது வருமானத்தை முன்கூட்டியே செலவு செய்து கொண்டிருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

கடன் அளவு

கடன் வாங்குவதற்கான அடிப் படை தகுதி அதை எப்படி திருப்பி செலுத்துவோம் என்பதை பொறுத்து தான். மொத்தமாகவோ அல்லது தவணை முறையிலோ திருப்பிச் செலுத் தும் அளவுக்கு வருமானம் இருந்தால் கடன் கிடைக்கும். வருமானத்தில் 60 சதவீதம் அல்லது மாத வருமானத்தில் செலவுகள் போக மிச்சமிருக்கும் உபரி தொகை இந்த இரண்டின் அடிப்படையில் கடன் வாங்கும் அளவு தீர்மானிக்கப்படுகிறது.

கடன் தகுதி

கடன் வாங்குபவரின் வயது மற்றும் எத்தனை ஆண்டுகளில் அந்த கடனை கட்டி முடிப்பார் என்பதை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. அதிகபட்ச வயது வரம்பு 60 என்று கணக்கிடப்படும். இளம் வயதிலேயே கடன் வாங்கினால் கடனைத் திருப்பி செலுத்த அதிக காலம் கிடைக்கும். 30 வயதில் கடன் வாங்கினால் அடுத்த 30 ஆண்டு காலம் வரை கடனை கட்ட முடியும். 50 வயதான நபர் வாங்குகிறபோது அவருக்கும் 10 ஆண்டுகள்தான் இருக்கும்.

சிபில்

வங்கிகளில் நாம் விண்ணப்பித்த உடன் கடன் கிடைக்காது. கடன் தகுதி அளவிடும் நிறுவனமான சிபில் நிறுவனத்தின் அறிக்கை அடிப் படையில்தான் கடன் கிடைக்கும். சிபில் அறிக்கையில் புள்ளிகள் குறைவாக இருப்பவர்களுக்கு கடன் கிடைக்காது. கடந்த காலத்தில் கடன் வாங்கி முறையாகச் செலுத்தாமல் இருந் திருந்தால் சிபில் புள்ளிகள் குறையும். எனவே பழைய கடனை திரும்ப கட்டிய பிறகே புதிதாக கடன் கிடைக்கும்.

ஒரே கடன்

பல இடங்களிலும் கடன் வாங்குவது பாதுகாப்பனதல்ல. எதைக் கட்டுவது என்று குழம்பம் வரும். எல்லா கடன்களையும் மொத்தமாக ஒரே கடனாக மாற்றிகொண்டால் செலுத்துவதற்கு வசதியாக இருக்கும். கிரெடிட் கார்டில் வாங்கும் கடன்களை உரிய காலத்தில் கட்டவில்லை என்றால் வட்டி அதிகமாக கட்ட வேண்டும். மீட்டர் வட்டி கடன்கள், தினசரி வட்டி கடன்கள் பக்கம் போகவே வேண்டாம். தனிநபர் கடன்கள் வாங்குவதை தவிர்ப்பதும் நல்லது.

அடமானக் கடன்

மூத்தக் குடிமக்களுக்கு என்று வங்கி அடமானக் கடன் கொடுக்கிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சொந்த வீட்டின் மதிப்பின் அடிப்படையில் வங்கியில் இந்த கடன் வாங்கலாம். அவர்களுக்குப் பிறகு அந்த வீடு விற்கப்பட்டு கடனுக்கு ஈடான தொகை எடுத்துக் கொள்ளப்படும்.

கடனுக்கு முன்பு

கடன் வாங்கும்போது எழுதி கொடுக்கும் முத்திரைத்தாளில் கடனுக் கான வட்டி, திரும்பச் செலுத்தும் காலம், கடன் தொகை போன்றவை சரியாகக் இருக்கிறதா என்பதை பார்த்து கையெழுத்திட வேண்டும். வங்கியில் கடன் வாங்கும்போது கடன் வாங்க என்னென்ன ஆவணங்கள் கொடுக்கிறோம் என்கிற பட்டியலை உரிய அதிகாரியின் கையெழுத்து மற்றும் முத்திரையுடன் பெற்றுக் கொள்ள வேண்டும்.

கடனுக்கு பின்பு

கடன் வாங்கிய பிறகும் சில நடைமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். வாகனக் கடன் வாங்கினால் வாகனத்தின் ஆர்சி புக் வங்கியில் இருக்கும். கடனை திருப்பிச் செலுத்திய பிறகு அதை நமது பெயருக்கு மாற்றி வாங்க வேண்டும். அசையா சொத்துகளின் பேரில் வாங்கிய கடனை திரும்ப செலுத்திய பிறகு மூல ஆவணங்களையும், கடன் பாக்கி இல்லை என்பதற்கான நோ டியூ சான்றிதழ் மற்றும் வங்கிக்கு அந்த சொத்து மீது எந்த உரிமையும் இல்லை என்பதற்கான சான்றிதழையும் (liability certificate) வாங்க வேண்டும். அடமானக் கடனை பதிவு செய்திருந்தால் அதை ரத்து செய்ய வேண்டும்.

கடன் நமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் செய்யும். அதேநேரத்தில் வரம்பு மீறிச் சென்றால் நமது வாழ்க்கைத் தரத்தை சீர்குலைக்கவும் செய்துவிடும். சரியாகப் பயன்படுத்த தெரிந்தால் கடன் வாங்குவதும் நல்ல வாய்ப்புதான் . ஆனால் வாங்குவதற்கு முன் ஒன்றுக்கு பத்து முறை யோசித்து செயல்படுவது சிறப்பு.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x