Last Updated : 25 May, 2015 12:09 PM

 

Published : 25 May 2015 12:09 PM
Last Updated : 25 May 2015 12:09 PM

உன்னால் முடியும்: ஈடுபாட்டோடு செய்தால் வெற்றி நிச்சயம்

தனக்கு கொஞ்சமும் அறிமுகமில்லாத தச்சு தொழிலில் இறங்கி, இன்று பலரும் பாராட்டும் வகையில் செயல்பட்டு வருகிறார் வந்தவாசியைச் சேர்ந்த ஞா.பன்னீர் செல்வம்.

இந்த தொழிலில் 36 வயதிலேயே பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட வரைப்போல பல நுணுக்கமான வேலைப்பாடுகளை அனாயசமாக செய்கிறார். இதனால் இந்த சுற்று வட்டார பகுதிகளில் புதிய புதிய வாடிக்கையாளர்கள் இவரைத் தேடி வருகிறார்கள்.

எதையும் சுய ஈடுபாட்டோடு செய்தால் வெற்றி நிச்சயம் என்பதுதான் நான் கண்ட உண்மை. செய்ய முடியாது என்பதற்கான காரணங்களை ஆராயாமல்,செய்து முடிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்தால் திட்டமிடுகிற வேலை சுலபமாக முடிந்துவிடும் என்றவர் தனது தொழில் அனுபவத்தை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

“நான் பிறந்தது மதுரை மாவட்டத்தில் உள்ள சோழபுரம். படிச்சதெல்லாம் மதுரையில்தான். எனக்கான விருப்பப் பாடமாக டெக்ஸ்டைல்ஸ் எடுத்துப் படிச்சேன். படிச்சிட்டு சிறிது காலம் துணி விற்பனை செய்துகிட்டிருந்தேன். அதற்கு பிறகு திருமணமாகி வந்தவாசி வந்தேன். என்னோட மாமா மர விற்பனை தொழில் செய்து வந்தார். அதனால் நானும் அந்த தொழிலை மேற்கொள்ள வேண்டிய சூழல் வந்தது.

ஆரம்பத்தில் இந்த தொழில் குறித்து எனக்கு ஒன்றுமே தெரியாது. எது கொங்கு மரப் பலகை, எது வேங்கை மரப் பலகைன்னுகூட என்பதுகூட எனக்குத் தெரியாது. ஆனா அதுக்காக தயங்கி நிற்கமாட்டேன். அனுபவசாலிகளிடம் அதை ஆர்வமாக கேட்டுத் தெரிந்து கொள்வேன். கேட்கிறதோட விடாம நானே ஒவ்வொண்ணா கூர்ந்து கவனிச்சுத் தெரிஞ் சுக்கிட்டேன்.

வாடிக்கையாளர்கள் மரப்பலகை வாங்கி வந்து அதிலே வாசல் நிலை, கதவு, ஜன்னல் செய்ய சொல்வாங்க. அதைச் செய்வதற்கு ஆசாரிகளை அழைத்து, அவர்களிடம் அந்த வேலைகளைச் செய்ய கொடுப்போம்.

சில சமயங்களில் வேலைகள் குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் தாமதமாகும். இதனால் வாடிக்கையாளர்கள் நம்மிடம் வருத்தப்படுவார்கள். ஒரே நேரத்தில் பல ஆர்டர்கள் கிடைத்துவிட்டால், மறுக்க முடியாமல் வாங்கி வைத்துக்கொண்டு அல்லாடும் நிலை இருந்தது. இதை எப்படி சரி செய்வது என்று பல நாட்கள் யோசித்திருக்கிறேன்.

எதையும் நாம மனசில தீவிரமா யோசிச்சிக்கிட்டே இருந்தா, அதற்கான வழிமுறைகள் நம்மைத் தேடிவரும்னு சொல்வாங்க.

அப்படித்தான், 2009-ல் எனது நண்பரொருவர் மூலமாக சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்ற ஒரு கண்காட்சிக்குப் போயிருந்தேன். அங்கதான், கம்ப்யூட்டர்ல டிசைன் செஞ்சு, அதை அப்படியே மரத்தில செதுக்கும் மெஷினைப் பார்த் தேன். அந்த இயந்திரத்தை வாங்க முடிவெ டுத்தேன்.

ஏற்கனவே, இந்த இயந்திரத்தை வாங்கி நாமக்கல் பகுதியில் சிலர் வேலை செய்ததை கேள்விபட்டு போய் பார்த்தேன். அவங்களோட அனுபவத்தின் மூலம் நம்பிக்கை பிறந்தது.

அந்த நம்பிக்கையோடு இயந்திரத்தை வாங்கி, ஒவ்வொண்ணா நானே கத்துக்கிட்டேன். கம்ப்யூட்டர்ல டிசைன் போடுறது, மிஷினை இயக்குவது என எல்லாத்தையும் நானே செய்வேன்.

ஒரு ஆசாரி 3 நாட்கள் உட்கார்ந்து பல மணி நேரம் செய்ய வேண்டிய ஒரு கதவுக்கான டிசைனை, 5 மணி நேரத்தில மிஷின் செஞ்சு முடிச்சிடுது. செலவும் 20 முதல் 30 சதவீதம் குறையுது. வொர்க் பினிஷிங் ரொம்ப நேர்த்தியாகவும் இருக்குது. அடுத்ததாக மலேசியா போன்ற நாடுகளுக்கு என்னுடைய மர டிசைன்களை ஏற்றுமதி செய்யிற முயற்சியிலேயும் இருக்கேன்.

வந்தவாசி சுற்றுப்பகுதிகளில் மட்டு மில்லாமல் மேல்மருவத்தூர், செங்கல் பட்டு, கூடுவாஞ்சேரியில் இருந்தெல்லாம் வாடிக்கையாளர்கள் வர்றாங்க. மனசுக்கு ரொம்ப நிறைவாகவும் இருக்கு.

இன்னும் ஏதாவது புதுமையா, வாடிக்கையாளர்களைத் திருப்திபடுத்துற மாதிரி செய்யணும்னு யோசிக்கிறேன்.

கிடைக்காத ஒன்றிற்காக ஏங்கி நிற்காமல், கிடைத்தை மனம் ஒன்றிச் செய்தால் வெற்றி வெகுதூரமில்லை’ என்று கூறும் இந்த இளைஞர் இன்னும் வளரட்டும்.

murugesan.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x