Published : 25 May 2015 12:13 PM
Last Updated : 25 May 2015 12:13 PM
நீங்கள் உபயோகிப்பது ஸ்மார்ட்போன் தானே? இல்லையென்றால் விரைவில் அதை வாங்க வேண்டுமென்ற திட்டமிருக்கும். இருக்காதா பின்னே? 2014ம் ஆண்டு உலகில் விற்பனையான ஸ்மார்ட் போன்கள் மொத்தம் 130 கோடியாம்! அதுசரி. உங்கள் கைபேசியில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன? ஆண்ட்ராய்டா, ஐஓஎஸ்ஸா, வின்டோஸா? ஒரு கைபேசியின் மூளையாயிற்றே அது.
விற்பனையில் இவர்கள் மூவரும் மேற்கொண்ட யுக்திகள் வித்தியாசமானவை. சுமார் 12 வருடக் கதை இது. 2003ல் ஆண்டிராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைக் கண்டுபிடித்த கூகுள் நிறுவனம் அதை வெவ்வேறு ஸ்மார்ட்போன்களிலும் உபயோகப்படுத்த அனுமதித்தது.
சாம்சங், சோனி, மைக்ரோமேக்ஸ், மோட்டோரோலா, ஹெச்டிசி என்று அந்த வரிசை நீளும்! ஆனால், “என்வழி தனிவழி”, என்று தங்களுக்கு மட்டும் தனியாக ஒரு ஐஓஎஸ் சிஸ்டத்துக்கு வழிவகுத்துக் கொண்டது உலகின் முன்னணி நிறுவனமான ஆப்பிள்! “எங்களது, எங்களுக்கு மட்டும்” என்பது அவர்கள் கொள்கையாக இன்றும் இருந்து வருகிறது. மைக்ரோசாஃப்டின் விண்டோஸ் பலரும் அறிந்தது. நோக்கியாவில் இவர்களது ஆப்பரேட்டிங் சிஸ்டம்தான். அதனால் அதன் விற்பனை நோக்கியா கைபேசிகளின் விற்பனையைச் சார்ந்தே இருக்குமில்லையா?
இன்றைய நிலை என்ன? ஸ்மார்ட்போன்களின் விற்பனை ஆண்டுக்கு சுமார் 30% அதிகரித்தாலும் வெவ்வேறு ஸ்மார்ட்போன்களின் விற்பனை பெருமளவில் வித்தியாசப்படுகின்றது. 2015ன் முதல் காலாண்டில் ஆண்ட்ராய்ட் போன்களின் சந்தைப் பங்களிப்பு மட்டும் 78%. அதாவது உலகில் விற்கும் 4 ஸ்மார்ட்போன்களில் 3ல் அவர்கள் சிஸ்டம்தான்! ஐஓஎஸ் 18.3% விண்டோஸ் 2.7% மற்றவை 1 சதவீதம். ஒரு செயலைத் தொடங்கும் முன்பு அதனால் வரும் பின்விளைவுகளை முற்றிலுமாக ஆராயாமல் தொடங்குவது பகைவரை நன்கு வளரும் நிலத்தில் வேரூன்றச் செய்வது போன்றது என்கிறது குறள்.
தற்பொழுது வணிக உலகில் நடைபெறும் பெரும்போர் விற்பனைக்காகத்தான். விற்பனையைக் கூட்டவும், சந்தையில் முதலிடம் பிடிக்கவும், மொத்த விற்பனையில் சந்தையின் சதவீத பங்களிப்பை அதிகரிக்கவும் நடைபெறும் போட்டி இது. எப்படி விற்போம் யாருக்கு விற்போம் என்பது இன்றைய தொழில்நுட்ப உலகில், அவசர உலகில் மிக முக்கியம்! மோட்டோஜீ போன்களை பிளிட்கார்ட் மூலமே விற்போம். அதனால் மேற்செலவுகள் குறையும் என்று சமீபத்தில் வந்த அறிவிப்பைப் பார்த்து இருப்பீர்கள்.
பகைவர்கள் வெற்றிபெற பல காரணங்கள் உண்டு. அந்த வெற்றி எதிரியின் படை பலத்தினால் மட்டுமின்றி பகைதொடுக்கும் காலத் தினாலும், பகைபுரியும் இடத்தினாலும், கூட இருக்கலாம்! ஆனால் வள்ளுவர் கூறும் காரணம் சிந்திக்கத்தக்கது. சிலசமயங்களில் நாம் முழுவதுமாக ஆராயாமல் எதிரியே எதிர்பாராத உதவியைச் செய்து அவர்கள் பெரும்வெற்றி பெற நாமே வகை செய்து விடுவோம் என்கிறார். நாம் இன்று இதைக் செய்தால் நாளை என்ெனன்ன நடக்கலாம் என்பதைத் தீர ஆலோசித்தே எதையும் தொடங்க வேண்டும் என்கிறது குறள்.
வகைஅறச் சூழாது எழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோர் ஆறு
somaiah.veerappan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT