Published : 27 Apr 2015 11:12 AM
Last Updated : 27 Apr 2015 11:12 AM
சமீப காலமாக பங்குச்சந்தையை தீர்மானிக்கும் சக்தியாக குறைந்த பட்ச மாற்று வரி (எம்ஏடி) இருக்கிறது. கடந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தை ஊசலாட்டத்துக்கு இதுதான் காரணம்.
சமீபத்தில் வெளியான பட்ஜெட்டில் குறைந்த பட்ச வரியை ஏப்ரல் 1-ம் தேதி முதல் நீக்குவதாக அருண் ஜேட்லி அறிவித்தார்.
இந்த நிலையில் இதற்கு முந்தைய ஆண்டுகளில், (அதாவது எம்ஏடி இருந்த காலத்தில்) அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் இந்தியாவில் கிடைக்கும் வருமானத்துக்கு குறைந்தபட்சம் 20 சதவீதம் வரி செலுத்த சொல்லி வருமான வரித்துறை பலருக்கும் நோட்டீஸ் அனுப்பியது. இந்த தொகை சுமார் 40,000 கோடி ரூபாய் இருக்கும் என்று கணிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இந்தியா வரி ஏய்ப்பாளர்களின் சொர்க்கம் அல்ல, இது சட்டபூர்வமானது இதில் விலக்கு ஏதும் கொடுக்க முடியாது என்று அருண் ஜேட்லி தெரிவித்தார். சட்டபூர்வமாக வரி வசூல் செய்வது வரித் தீவிரவாதம் ஆகாது என்றார்.
சில நாட்கள் கழித்து இரட்டை வரி விதிப்பு தடுப்பு ஒப்பந்தம் செய்யப்பட்ட (டிடீஏஏ) நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் குறைந்தபட்ச மாற்று வரி செலுத்த தேவை இல்லை என்று மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதாவது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஏதாவது ஒரு நாட்டில் வரி செலுத்தி இருந்தால் போதுமானது, இந்தியாவில் வரி செலுத்த வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்தியா 88 நாடுகளுடன் இதுபோன்ற ஒப்பந்தத்தை போட்டுள்ளது. மொரீஷியஸ், சிங்கப்பூர் ஆகிய நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்களுக்கு இதில் விலக்கு என்று சொல்லப்பட்டது. ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்தை சேர்ந்த முதலீட்டாளர்கள் வரி செலுத்த வேண்டும்.
இந்திய பங்குச்சந்தையில் 20 சதவீதம் அளவுக்கு அந்நிய முதலீடு உள்ளது. மொத்த அந்நிய முதலீட்டில் அமெரிக்காவில் இருந்து 32 சதவீதமும், மொரீஷியஸில் இருந்து 22 சதவீதம் அளவுக்கு அந்நிய முதலீடு வருகிறது.
ஒப்பந்தம் இருக்கும் நாடுகளுக்கு வரி விலக்கில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்த நிலையில், சமீபத்தில் 602 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 68 நபர்கள்/நிறுவனங்களுக்கு மட்டுமே நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக மக்கள வையில் எழுத்து பூர்வமாக தெரிவித்தார்.
40,000 கோடி ரூபாயிலிருந்து 600 கோடி ரூபாய் அளவுக்கு சுருங்கிவிட்டது. அதை விட தெளிவான கொள்கை இல்லை என்று மும்பையில் உள்ள பங்குச்சந்தை நிபுணர் ஒருவர் தெரிவித்தார். அமைச்சர் ஒன்றையும் செயலாளர் வேறு ஒன்றையும் தெரிவிக்கிறார்கள்.
இதே பிரச்சினைதான் முந்தைய காங்கிரஸ் அரசிலும் இருந்தது என்றார். இதுவரை பிஜேபி அரசு பேசுவதை தவிர வேறு எதையும் செய்ய வில்லை என்று சர்வதேச ஹெட்ஜ் பண்ட் மேனேஜர் ஜிம் ரோஜர்ஸ் கூறி இருக்கிறார்.
நடக்கும் நிகழ்வுகளும் இதைத்தான் உணர்த்துகின்றன!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT