Published : 06 Apr 2015 12:29 PM
Last Updated : 06 Apr 2015 12:29 PM
ஒரு முதலீட்டுச் சாதனம் என்ற முறையில் பரஸ்பர நிதிகளைப் பற்றிச் சொல்லப்படும் குறை ஒன்று உண்டென்றால், அது மிகவும் குழப்பமாக இருக்கிறது என்பதுதான். அதாவது, பரஸ்பர நிதிகளில் பல்வேறு வகைகளும், ஒவ்வொரு வகையிலும் பல்வேறு திட்டங்களும் இருப்பதினால், ஒரு முதலீட்டாளருக்கு ஆரம்பத்திலேயே தயக்கமும், அதனால் ஒரு வித மனச்சோர்வும் ஏற்பட்டு விடுகிறது. இந்தக் காரணத்தினாலேயே பரஸ்பர நிதிகளை ஒதுக்கி விட்டு “எளிமையான” முதலீட்டுத் திட்டங்களுக்கு செல்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
சிக்கல், பார்வை
இது ஒரு வினோதமான பிரச்சினை. துரதிர்ஷ்டவசமானதும் கூட. எந்த விஷயத்தை பரஸ்பர நிதி நிறுவனங்கள் சாதகமாக, மேன்மையாக பார்க்கிறார்களோ, அதுவே சந்தையில் (மக்களிடையே) ஒரு பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது. நிதி நிறுவனங்களைப் பொருத்தவரை, இத்தகைய பரவலான திட்டங்கள் இருப்பது என்பது, நுகர்வோருக்கு ஏற்ற பல தேர்வுகள் கொடுப்பதாகக் கருதுகிறார்கள்.
அதுவே ஒரு சிக்கலாக இருப்பதை வினோதமாக நினைக்கிறார்கள். முதலீட்டாளர்களைப் பொருத்த வரை, இந்தக் காரணத்தினால் வேறு முதலீட்டு முறைகளுக்குச் செல்வதன் மூலம் நல்ல லாப சாத்தியங்களை இழக்கிறார்கள் என்பது துரதிர்ஷ்டவசமானது.
இந்த நிலைமை இப்படி இருக்கத் தேவையில்லை. சில அடிப்படைப் புரிதல்கள் மட்டும் இருந்தால் போதும். பரஸ்பர நிதிகளின் வகைகளைப் புரிந்து கொள்வதும் அவற்றிலிருந்து நமக்குத் தேவையானவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதும் எளிதில் சாத்தியப்படும்.
தேவையானதைத் தேர்ந்தெடு
இப்படிப் பார்க்கலாம் - சில ‘உயர்ந்த’ உணவகங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றுக்குள் நுழைந்ததும் நமக்குக் கொடுக்கப்படும் உணவுப் பட்டியல் (menu) பல பக்கங்களுக்கு நீளும். அதைக் கண்டு நாம் அஞ்சுகிறோமா? இல்லையே. நமக்கு என்ன தேவை என்பது எந்தப் பகுதியில் இருக்கும் என்று தெரிந்து, அதிலிருந்து தேர்வு செய்கிறோம் அல்லவா? மேலும், சில வேளைகளில் இந்த உணவகத்தில் இந்தப் பண்டங்கள் நன்றாக இருக்கும் என்று தெரிவதும் நமது தேர்வுகளை வடிவமைக்கின்றன அல்லவா? அது போலத்தான் பரஸ்பர நிதிகளின் வகைகளும் திட்டங்களும். நமக்கு எது தேவை என்பதை அடிப்படையாக உணர்ந்தால் போதும். மீதி எல்லாம் சுலபம் தான்.
பசி நேரத்தில் பத்தி எழுதினால் இப்படித்தான் உதாரணங்கள் வரும். விஷயத்திற்குச் செல்வோம்.
இரண்டு வகை
பரஸ்பர நிதிகள் அடிப்படையில் இரண்டு வகை - ஒன்று பங்குச் சந்தையில் முதலீடு செய்பவை; மற்றது கடன் சந்தையில் (வைப்பு நிதிச் சந்தை என்றும் சொல்லலாம்) முதலீடு செய்பவை. மூன்றாவதாக, தங்கத்தில் மட்டும் முதலீடு செய்பவை. இப்போதைக்கு மூன்றாவதை விட்டு விடுவோம்.
மேற்சொன்ன இரண்டு வகைகளுக்குள்ளும் உட்பிரிவுகள் உள்ளன. அவற்றுக்குள் போகும் முன்னர் ஒரு அடிப்படை விதியைப் புரிந்து கொண்டால், மற்றவை அனைத்தும் எளிதில் விளங்கி விடும்.
அந்த விதி இது தான். ஒவ்வொரு நிதித் திட்ட வகைக்கும் ஒரு ரிஸ்க் அளவு உண்டு. நாம் நீண்ட கால முதலீடுகள் செய்யும் போது அதிக ரிஸ்க் உள்ள திட்டங்களைப் பயன்படுத்த வேண்டும் (ஏனெனில், ரிஸ்கினைக் காலத்தால் வெல்லலாம்); குறுகிய கால முதலீடுகள் செய்யும் போது குறைவான ரிஸ்க் உள்ள திட்டங்களைப் பயன்படுத்த வேண்டும்.
இதில் நீண்ட காலம் என்றால் ஐந்து வருடங்களுக்குக் குறையாமல் இருப்பது. குறுகிய காலம் என்றால் இரண்டு வருடங்களுக்கு உட்பட்டு இருப்பது. இவை இரண்டிற்கும் இடைப்பட்ட காலம் என்றால் அதிக ரிஸ்க் திட்டங்கள் கொஞ்சம், குறைந்த ரிஸ்க் திட்டங்கள் கொஞ்சம் என்று கலந்து முதலீடு செய்யலாம்.
ரிஸ்க் அதிகம்
இப்பொழுது மீண்டும் பரஸ்பர நிதி வகைகளுக்கு வருவோம். ரிஸ்கைப் பொருத்தவரை, பங்குச் சந்தைத் திட்டங்கள் கடன் சந்தைத் திட்டங்களை விட ரிஸ்க் அதிகமானவை. ஆகையால், பங்குச் சந்தை சார்ந்த நிதித் திட்டங்களை நீண்ட கால கண்ணோட்டத்துடன் செய்ய வேண்டியது அவசியம் என்று சொல்கிறோம்.
கடன் சந்தை சார்ந்த திட்டங்களிலும் சில உட்பிரிவுகளில் கொஞ்சம் ரிஸ்க் அதிகம்; இருப்பினும், அவற்றில் பெரும்பான்மையானவற்றில் குறைந்த கால முதலீடுகள் செய்யலாம். பரஸ்பர நிதித் திட்ட வகைகள் குறித்து இந்த அடிப்படை வித்தியாசத்தை நீங்கள் நினைவில் கொண்டால் போதுமானது.
உட் பிரிவுகள்
இந்த இரண்டு வகைகளுக்குள் உட் பிரிவுகள் உள்ளன என்று சொன்னேன். அவையும் ரிஸ்க் அளவுபடி வரிசைப் படுத்தப்படக் கூடியவையே. உதாரணத்திற்கு, பங்குச் சந்தைத் திட்டங்களில் மிகப் பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்யும் திட்டங்கள், சிறிய நிறுவனங்களில் முதலீடு செய்யும் திட்டங்களை விட ரிஸ்க் குறைவானவை. கடன் சந்தைத் திட்டங்களில் குறுகிய கால கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் திட்டங்கள், நீண்ட கால கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் திட்டங்களை விட ரிஸ்க் குறைவானவை.
பங்குச் சந்தை, கடன் சந்தை ஆகிய இரண்டிலும் சேர்த்து முதலீடு செய்யும் ‘கலப்புத்’ திட்டங்களும் உள்ளன. இவற்றுள் எவை கடன் சந்தையில் அதிகம் முதலீடு செய்கின்றனவோ அவை, பங்குச் சந்தையில் அதிகம் முதலீடு செய்யும் திட்டங்களை விட ரிஸ்க் குறைவானவை.
திரும்பித் திரும்பிப் பார்த்தால் ஒரே விஷயம் தான். பங்குச் சந்தைத் திட்டங்கள்; கடன் சந்தைத் திட்டங்கள். முன்னதில் ரிஸ்க் அதிகம், ஆதலால் நீண்ட கால முதலீட்டிற்கு உகந்தவை; பின்னதில் ரிஸ்க் சற்று குறைவு, ஆதலால் குறைந்த மற்றும் இடைப்பட்ட கால முதலீட்டிற்கு உகந்தவை.
இசையில் ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம் என்பது போல், பரஸ்பர நிதித் திட்டங்கள் இந்த ஆதார கோட்பாடுகளின் அடிப்படையில்தான் அத்தனை வகைகளும், உட்பிரிவுகளும், முதலீட்டுத் திட்டங்களும் அடங்கியிருக்கின்றன. நமது தேவைகள், நமது முதலீட்டுக் கால அளவைகள், எவ்வளவு ரிஸ்க் நம்மால் எடுக்க முடியும் போன்ற விஷயங்களை மனதில் கொண்டு நமக்கான தேர்வுகளை நாம் செய்து கொள்ளலாம்.
ஆகையால், நிதித்திட்ட வகைகள் என்பதைக் கண்டு நாம் குழம்ப வேண்டியதில்லை; அது நமக்குச் சாதகமாகப் பயன்படுத்தப் பட வேண்டியது. ஆனால், சீரான பரஸ்பர நிதி முதலீட்டுத் திட்டத்திற்கு தோதாக நமது தேவைகளை வகுத்துக் கொள்வது எப்படி? அவற்றிற்கேற்ப நிதித்திட்டங்களைத் தேர்தெடுப்பது எப்படி? மேலும் பார்ப்போம்.
srikanth@fundsindia.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT