Published : 27 Apr 2015 10:11 AM
Last Updated : 27 Apr 2015 10:11 AM
உலகத்திலேயே இந்திய ரயில்வே மட்டும்தான் போட்டி இல்லாத தனியொரு நிறுவன மாக இயங்குகிறது. கிட்டத்தட்ட அனைத்து ஜனநாயக நாடுகளும் ரயில்வே துறையில் தனித்துவத்தை ஒழித்து அந்தத் துறையில் போட்டியை உருவாக்கி விட்டார்கள்.
இந்த போட்டி காரணமாக சேவை வேகமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறது. வாடிக்கையாளர்களும் சந்தோஷமாக இருக்கிறார்கள், ரயில்வே நிறுவனங்களின் நிதி நிலைமையும் மேம்பட்டிருக்கிறது.
பிரதமர் நரேந்திரமோடி மற்றும் துடிப்பான ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவும் இருப்பதால், இப்போது ரயில்வே துறையை நவீனப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எழுந்திருக்கிறது. ரயில்வே துறை மேம்பாட்டுக்கான பிபக் தேப்ராய் கமிட்டி தன்னுடைய இடைக்கால அறிக்கையை மார்ச் 31-ம் தேதி சமர்ப்பித்தது.
கடந்த கால பாடங்கள் மற்றும் மற்ற நாடுகளில் ரயில்வே துறை சிறப்பாக செயல்படும் விதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த பரிந்துரை தயாரிக்கப்பட்டிருக்கிறது. அவை இதோ...
முதலாவது உரிமையாளருக்கும் நிர்வாகிக்குமான இடைவெளி அதிகரிக்கப்பட வேண்டும். ரயில்வேயின் உரிமையாளரும் நிர்வாகியும் ரயில்வே அமைச்சகம் எனும்போது செயல்பாடுகளில் முன்னேற்றம் இல்லாமல் போகும். ரயில்வே அமைச்சகம் கொள்கை முடிவுகளை மட்டுமே உருவாக்கி போட்டியை அதிகப்படுத்த வேண்டும். ரயில்வே அமைச்சகம் ரயில்களை இயக்கவில்லை என்றால் எதிர்காலத்தில் ரயில்வே பட்ஜெட் தேவை இருக்காது. அதேபோல ரயில்வே அமைச்சகம் என்ற ஒன்றே தேவை இருக்காது. அதனை போக்குவரத்து அமைச்சகத்திடம் இணைத்துவிடலாம்.
இரண்டாவது இந்திய ரயில்வேயை இரண்டாகப் பிரிக்க வேண்டும். ஒரு நிறுவனம் தண்டவாளம் மற்றும் கட்டுமான திட்டங்களை கவனிக்க வேண்டும். மற்றொரு நிறுவனம் தனியார் நிறுவனங்களுக்கு எதிராக ரயில்களை இயக்க வேண்டும். இரண்டுமே பொதுத்துறை நிறுவனமாக இருக்க வேண்டும்.
மூன்றாவது ரயில்வே துறைக்கு ஒரு ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும். இந்த ஆணையம் கட்டணம், பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களை முடிவு செய்யவேண்டும். இந்த அமைப்பு ரயில்வே துறைக்கு கட்டுப்படாமல் நாடாளுமன்றத்துக்கு கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும்.
நான்காவதாக, ஒழுங்குமுறை ஆணையம் இருப்பதால் தனியார் நிறுவனங்கள் பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களை இயக்க அனுமதிக்க வேண்டும்.
ஐந்தாவதாக, இந்திய ரயில்வே ரயில் போக்குவரத்து துறையில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். பள்ளி, மருத்துவமனை, காவல், அச்சகம், குடிநீர் உள்ளிட்ட இதர வேலைகள் செய்வதை நிறுத்த வேண்டும். பெரும்பாலான பணியாளர்கள் இதர பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதை தவிர்த்து முக்கிய விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.
ஆறாவதாக, ரயில்வே சார்ந்த உற்பத்தி மற்றும் கட்டுமான திட்டங்களுக்கு தனிப்பட்ட அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும். தனி நிறுவனங்கள் போல இவை செயல்பட வேண்டும். மற்ற நிறுவனங்கள் போல அவை சந்தையில் இருந்து நேரடியாக நிதி திரட்ட முடியவேண்டும்.
ஏழாவதாக, இந்த இரண்டு ரயில் நிறுவனங்களில் இருக்கும் பொது மற்றும் மண்டல மேலாளர்களுக்கு அனைத்து செயல்பாடுகளிலும் அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும். டெண்டர் விடுதல், பொருட்களை வாங்குதல் உள்பட. இதன் மூலமே தனியார் நிறுவனங்களுடன் போட்டி போட முடியும்.
எட்டாவதாக, இந்திய ரயில்வேயின் கணக்கு வழக்கு முறையை இன்னும் எளிதாக்க வேண்டும். இதன் மூலமே முடிவுகள் எளிமையாக எடுக்க முடியும். நிதி திரட்ட முடியும். தற்போதைய நிலைமையில் ஒரு முதலீட்டின் மீதான வருமானம் என்ன, ஒரு வழித்தடத்தில் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்ற தகவல்களை அவ்வளவு எளிதில் பெற முடியாது.
ஒன்பதாவதாக, புறநகர் மற்றும் பயணிகள் ரயில்களை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் இணைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மாநிலங்கள் கட்டணங்களுக்கான மானியத்தை ஏற்க வேண்டும். மாநில அரசுகள் கட்டணத்தை உயர்த்த கடுமை யான எதிர்ப்பை தெரிவிப்பதால் ரயில்வே துறைக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
பத்தாவதாக ரயில்வே துறையிடம் இருக்கும் சொத்துகளை பயனுள் ளதாக மாற்ற வேண்டும். அதனை வணிக நோக்கில் மாற்ற வேண்டும். ரயில்வே துறை நிலங்கள் உள்ளிட்ட ஏகப்பட்ட சொத்துகள் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன.
சுரேஷ் பிரபு வசம் இப்போது பந்து இருக்கிறது. இந்திய மக்களுக்கு தேவையானதை மோடி அரசு செய்யும் என்று நம்பிக்கை வைப்போம்.
-கட்டுரையாளர், பிபக் தேப்ராய் தலைமையிலான ரயில்வே மறுசீரமைப்பு குழுவின் உறுப்பினர்.
குர்சரண் தாஸ்
gurcharandas@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT