Published : 30 Mar 2015 12:08 PM
Last Updated : 30 Mar 2015 12:08 PM
இந்த வேலை செய்யறதுக்கு ஏதாவது ஒரு தொழிலை ஆரம்பிக்கலாம் என்ற எண்ணம் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு வந்திருக்கும். சிலருக்கு வேலை பிடிக்காமல் இருக்கலாம், மோசமான தலைமை அமையலாம், வேலையில் அடுத்த கட்ட வளர்ச்சி இல்லாமல் இருக்கலாம். என்னதான் பேசினாலும் தூங்கி எழுந்து மீண்டும் அதே வேலையை நோக்கிய பயணத்தைதான் பலரும் செய்கிறார்கள்.
சிலர் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற சிந்தனை இல்லாமல், இருக்கும் வேலையை திட்டிக் கொண்டே செய்து ஓய்வு பெறுவோரும் உண்டு. ஒரு தொழிலை ஆரம்பித்து வெற்றி பெற வைப்பது என்பது அவ்வளவு எளிதான செயல் இல்லை என்றாலும், தொழிலைத் தொடங்காமல் தோல்வி அடைபவர்கள்தான் ஏராளம்.
தொழிலைத் தொடங்காமல் இருப்பதற்கும், தொழில் தோல்வி அடைவதற்கும் பெரும்பாலானவர்கள் சொல்லும் காரணம் முதலீடு இல்லை என்பதுதான். ஆனால் பல தொழில்கள் ஐடியாக்களை மட்டும் வைத்துக்கொண்டே சமீபத்தில் வெற்றி யை பெற்றிருக்கின்றன.
கூகுள், பிளிப்கார்ட், ரெட்பஸ் என அனைத்து இணையதள நிறுவனங்களும் ஐடியாக் களை மட்டுமே வைத்துக் கொண்டு வெற்றி அடைந்துள்ளன. இதற்கு காரணம் வென்ச்சர் கேபிடல் என்று சொல்லக்கூடிய துணிகர முதலீட்டு நிறுவனங்கள்தான்.
கிட்டத்தட்ட ஸ்லீப்பிங் பார்டனர் போலத்தான். ஸ்லீப்பிங் பார்ட்னர் என்பவர் உங்கள் மீது நம்பிக்கை வைப்ப வர்கள். ஆனால் வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் உங்கள் ஐடியா மீது நம்பிக்கை வைத்து முதலீடு செய்வார்கள்.
ஏன் முதலீடு செய்கிறார்கள்?
என்னுடைய ஐடியாவில் வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் ஏன் முதலீடு செய்ய வேண்டும், அவர்களுக்கு என்ன ஆர்வம் என்ற கேள்வி எழலாம். இந்தக் கேள்வியை வேறு மாதிரியாக அணுகுவோம். நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான முதலீடுகளை செய்கிறோம். பிக்ஸட் டெபாசிட், மியூச்சுவல் பண்ட், அஞ்சலக சேமிப்பு என பல விதமான முதலீடுகளைச் செய்கிறோம்.
மிகப்பெரும் பணக்காரர்களின் முதலீட்டு வகைதான் வென்ச்சர் கேபிடல். பல பணக்காரர்கள் ஒன்று சேர்ந்து ஒரு வென்ச்சர் கேபிடல் நிறுவனத்தை ஆரம்பிப்பார்கள். வளர்ந்து வரும் நிறுவனம் அல்லது உருவாகும் நிறுவனம் ஒன்றினைத் தேர்வு செய்து முதலீடு செய்வார்கள். அவர்கள் செய்யும் முதலீட்டுக்கு ஏற்ப சம்மபந்தப்பட்ட நிறுவனங்களில் வென்ச்சர் கேபிடல் நிறுவனங்களுக்கு பங்குகள் வழங்கப்படும்.
என்ன லாபம்?
நிறுவனத்தில் முதலீடு செய்வதால் அவர்களுக்கு என்ன லாபம்? ஒருவேளை தொழில் முயற்சி தோல்வியும் அடையலாம் என்கிற நிலைமையில் அவர்கள் ஏன் முதலீடு செய்கிறார்கள் என்று தோன்றலாம். முதலாவதாக இந்த முதலீடு ரிஸ்க் என்று தெரிந்துதான் அவர்கள் முதலீடு செய்கிறார்கள். இதனால்தான் இத்தகைய முதலீடுகள் துணிகர முதலீடுகள் எனப்படுகின்றன.
மேலும் ஒரே நேரத்தில் மொத்த முதலீட்டையும் ஒரே நிறுவனத்தில்/ ஐடியாவில் அவர்கள் முதலீடு செய்வதில்லை. பல நிறுவனங்களில் முதலீடு செய்வார்கள். இதனால் சில நிறுவனங்கள் மிகப்பெரிய வெற்றி அடைந்தாலே முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் கிடைத்து விடும். ஐடியா தோல்வி என்றாலும் அலட்டிக் கொள்ள மாட்டார்கள்.
எளிதில் முதலீடு செய்வார்களா?
வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் ஐடியாக்களை அடிப்படையாகக் கொண்டுதான் முதலீடு செய்வார்கள் என்றாலும், அவ்வளவு எளிதாக முதலீடு கிடைக்காது. வெறும் ஐடியாவுக்காக மட்டும் முதலீடு செய்வதால் பல விஷயங்களையும் ஆராய்ந்த பிறகுதான் முதலீடு செய்வார்கள்.
தொழில் முயற்சி எடுப்பவரின் கல்வித்தகுதி, அனுபவம், தொழிலுக்கு எதிர்காலத்துக்கு உள்ள வளர்ச்சி வாய்ப்புகள் என பல விஷயங் களை அலசிய பிறகுதான் முதலீடு செய்வார்கள். சென்னையில் உள்ள ஒரு வென்ச்சர் கேபிடல் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி கூற்றுப்படி 100-ல் 5 விண்ணப்பங்களுக்கு மட்டுமே வாய்ப்பு இருக்கும். அவ்வளவு வடிகட்டியும் சில தொழில்கள் தோற்கலாம்.
நெருக்கடி இருக்குமா?
பல வகையான ஒப்பந்தங்களுக்குப் பிறகுதான் முதலீடு செய்யப்படும். இதில் முக்கியமான ஒப்பந்தம், புதிதாக ஆரம்பிக்கப்படும் நிறுவனத்தில் இயக்குநர் குழுவில் வென்ச்சர் கேபிடல் சார்பாக சிலர் இருப்பார்கள். அதாவது நிறுவனத்தில் முக்கியமான முடிவுகள் எடுக்கும் பட்சத்தில் அவர்களின் அனுமதி இல்லாமல் எடுக்க முடியாது. உதாரணத்துக்கு நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளின் சம்பளம் உயர்த்தப்பட வேண்டும், தொழிலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்கிறபட்சத்தில் இயக்குநர் குழு அனுமதி, அதாவது வென்ச்சர் கேபிடல் நிறுவனங்களின் அனுமதி வேண்டும்.
இதனை வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் வழங்கும் ஆலோசனை என்றும் சொல்லலாம் இல்லை நெருக்கடி என்றும் சொல்லலாம். இது முடிவு எடுப்பவர்களின் மனநிலை என்பதுதான் வென்ச்சர் கேபிடல் நிறுவனங்களின் கருத்தாக இருக்கிறது.
ஆனால் அதே சமயத்தில் நிறுவனங்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் வழங்கும்.
எப்படி வெளியேறுவார்கள்?
பொதுவாக எட்டு வருடங்களை மனதில் வைத்து இந்த முதலீடு இருக்கும். முதல் சில வருடங்களை தொழிலில் முதலீடு செய்வதற்கும், அடுத்த சில வருடங்களை தொழிலில் இருந்து முதலீட்டை வெளியே எடுப்பதற்கும் பயன்படுத்திக் கொள்வார்கள்.
முதலாவதாக இன்னொரு பெரிய வென்ச்சர் கேபிடல் நிறுவனங்களுக்கு இந்த பங்கினை விற்க முயற்சிப்பார்கள். 2-வது அதே துறையில் இருக்கும் இன்னொரு நிறுவனத்துடன் இணைத்து விற்கவும் முயற்சி நடக்கும். அல்லது பங்குச்சந்தையில் பட்டியலிடுவதன் மூலம் தங்களது முதலீட்டை வெளியே எடுத்து விடுவார்கள்.
என்ன செய்வது? எப்படி திரட்டுவது?
ஐடியாவை வைத்துக்கொண்டுதான் வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் முதலீடு செய்வார்கள் என்றாலும் பேப்பர் ஐடியாவுக்கு முதலீடு கிடைப்பது மிக சிரமம். அமெரிக்காவில் வேண்டுமானால் கிடைக்கலாம். இந்தியாவில் கிடைக்க வாய்ப்புகள் மிகக் குறைவு. ஐடியாவை கொஞ்சமாவது செயல்படுத்தி நிறுவனத்தை நடத்தி வரும் பட்சத்தில் முதலீடு கிடைக்கலாம்.
ஒரு முயற்சி எடுத்துதான் பாருங்களேன்..
karthikeyan.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT