Published : 23 Feb 2015 11:22 AM
Last Updated : 23 Feb 2015 11:22 AM
உலகக் கோப்பை கிரிக்கெட் ஜூரம் உலகில் பெரும்பாலானவர்களை பற்றிக் கொண்டிருக்கும்போது அதில் “வணிக வீதி’’ மட்டும் விதி விலக்காக இருக்க முடியுமா?
கோப்பை யாருக்குக் கிடைக்கும், எந்த அணிக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் போனது? கடைசி நேரத்தில் காலை வாரியது எது? இவையெல்லாம் ரசிகர்கள், வீரர்கள், வல்லுநர்களின் விவாதத்துக்கு விட்டுவிடலாம்.
விளையாட்டில் கோடீஸ்வர விளையாட்டு என்றால் வீரர்களுக்கு அதிக பரிசுகளைக் கொட்டிக் குவிப்பது ஃபார்முலா 1 கார் ரேஸ், ஹெவி வெயிட் குத்துச் சண்டை போட்டி, அடுத்தது டென்னிஸ்.
இவையெல்லாமே ஒரு சிலரின் பங்கேற்போடு, வெகு குறைந்த பார்வையாளர்களோடு முடிந்துவிடும் விளையாட்டுகள்.
உலக அளவில் பெரும்பாலானவர்களை ஈர்க்கும் போட்டிகளில் முதலிடத்தைப் பிடித்திருப்பது கால்பந்து போட்டிதான். அடுத்தது பல நாடுகளும் பங்கேற்கும் கோடைக்கால ஒலிம்பிக். இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்திலிருப்பது கிரிக்கெட்.
பணக்கார விளையாட்டு இல்லை யென்றாலும், மற்றெந்த விளையாட்டுகளைக் காட்டிலும் இதில் புரளும் கோடிகள் அதிகம்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் உலகக் கோப்பை போட்டியின் பங்களிப்பும் கணிசமாக இருப்பதால்தான் கிரிக்கெட் ஜூரம் வர்த்தக பக்கத்தையும் பிடித்துக் கொண்டுவிட்டது.
1975-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி தொடங்கியபோது இது அவ்வளவாக பிரபலமாகவில்லை. 1987-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு வெளியே இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து இந்தப் போட்டியை நடத்தியபோதுதான் கிரிக்கெட் மீதான ஈடுபாடு அதிகரித்தது. இதற்கான ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
11-வது உலகக் கோப்பை போட்டியை 200 நாடுகளிலிருந்து 220 கோடி மக்கள் டி.வி. மூலமாக கண்டு ரசிக்கிறார்கள்.
இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டியின் போது ஃபேஸ்புக்கில் கருத்துகளை பகிர்ந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 90 லட்சம். 2.5 கோடி மக்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர். இதில் 59 லட்சம் பேர் இந்தியர்கள்.
இந்த புள்ளி விவரங்கள் பழைய தகவல்களாகப் போகலாம். இறுதிப் போட்டிவரை இத்தகைய புள்ளி விவரங்களுக்குப் பஞ்சமிருக்காது.
உலகக் கோப்பை போட்டியின் டி.வி. உரிமையை ஒளிபரப்ப மட்டும் 200 கோடி டாலருக்கு ஏலம் எடுத்துள்ளது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம். இந்திய மதிப்பில் சுமார் ரூ. 12,600 கோடி.
கிரிக்கெட் மைதானங்களில் விளம்பரம் செய்வதற்கு மட்டும் ரூ. 1,200 கோடி கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. முந்தைய உலகக் கோப்பை போட்டியில் இதற்கான கட்டணம் வெறும் ரூ. 175 கோடியாகத்தான் இருந்ததாம்.
எம்ஆர்எப், ரிலையன்ஸ், ஹூண்டாய், எமிரேட்ஸ், யாகூ, காஸ்ட்ரால், மணிகிராம் ஆகிய நிறுவனங்கள் பிரதான விளம்பர நிறுவனங்களாக கைகோர்த்துள்ளன.
விளம்பர உரிமை மட்டும் 50 கோடி டாலருக்கு விற்கப்பட்டுள்ளது. இங்கு விளம்பரங்களுக்கு வாரி இறைக்கும் பணத்தை பின்னர் எடுத்துவிடலாம் என்பதே இந்த நிறுவனங்களின் கணக்கு.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கான உரிமையைப் பெற்ற உடனேயே அந்தந்த நாடுகள் அதன் மூலம் எந்த அளவுக்கு வருமானத்தை அதிகரிக்கலாம் என்று திட்டமிட்டு செயல் படுகின்றன.
இந்த முறை உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியாவும், நியூஸிலாந்தும் போட்டியைக் காண ரசிகர்களை ஈர்ப்பதன் மூலம் சுற்றுலா வருமானத்தை அதிகரிக்க பிரமாண்டமான ஏற்பாடுகளைச் செய்துள்ளன.
சுற்றுலா பயணிகள் தங்குவதற்கென்று அதிக எண்ணிக்கையிலான ஹோட்டல்கள் தயாராக உள்ளன. இந்த விஷயத்தில் 1987-ம் ஆண்டு நாம் கோட்டை விட்டு விட்டோம் என்பதும், டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டியை நமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதும் வேறு விஷயம். ஆசிய போட்டிகளை நாம் இரண்டு முறை நடத்தியிருந்தாலும், இன்னமும் இந்தியா சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் பின்தங்கித்தான் இருக்கிறது.
கிரிக்கெட் போட்டிகளைக் காண்பதற்கு பல நாடுகளிலிருந்து ரசிகர்கள் வருவதால் சுற்றுலா மட்டுமல்ல அது சார்ந்த பிற தொழில்களும் வளரும். இந்த முறை போட்டியை நடத்தும் இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும் குறைந்தது 0.5 சதவீதம் உயரும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
கிரிக்கெட் என்றாலே அது 11 பேர் விளையாடும் விளையாட்டு என்ற பெர்னாட்ஷாவின் பழமொழி அல்லது அது சூதாட்டக்காரர்களின் புகலிடம் என்பதெல்லாம் ஒருபுறமிருந்தாலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நிர்ணயிக்கும் காரணிகளில் ஒன்றாக இது உருவெடுத்துள்ளது என்பதை மறுக்க முடியாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT