Published : 02 Feb 2015 12:40 PM
Last Updated : 02 Feb 2015 12:40 PM

ஏற்றம் தரும் டிஐஐசி

தொழில் முனைவோர்களின் முதலீட்டுத் தேவைகளுக்காக 1949 ஆம் ஆண்டு தமிழக அரசால் தொடங்கப்பட்ட நிறுவனம் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் - டிஐஐசி (Tamilnadu Industrial Investment Corporation). தொழில் தொடங்குபவர்களின் முதலீட்டு தேவைகளை இந்த நிறுவனம் பூர்த்தி செய்கிறது.

குறிப்பாக நிலம், இயந்திரம், கட்டிடம் போன்ற அடிப்படை முதலீடுகளுக்கு கடன் வழங்குகிறது. தொழிலை விரிவாக்கம் செய்யவும், நவீனப்படுத்தவும் இந்த நிறுவனத்திடமிருந்து கடன் வாங்கலாம். உற்பத்தித் தொழில்கள் தவிர, ஓட்டல்கள் மருத்துவமனை, சுற்றுலா உள்ளிட்ட சேவை துறைச் சார்ந்த தொழில்கள் தொடங்கவும் கடனுதவி வாங்கலாம்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைப்பதற்கு முன்னுரிமை அடிப்படையில் முதலீட்டுக் கடன் கிடைக்கும். முதல் தலைமுறை தொழில் முனைவோர்களுக்கு 40 சதவீதம் முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்குகிறது இந்த நிறுவனம். தமிழக அளவில் 6 மண்டல அலுவலகங்கள், 25 கிளை அலுவலகங்கள் 5 கள அலுவலகங்களைக் கொண்டு தொழில் முனைவோர்களுக்கு சேவை செய்து வருகிறது.

சேவைகள்

தொழில் முனைவோர் ஆரம்ப முதலீடுகள் கிடைக்காமல் தொழிலை மேற்கொள்ள தயங்கும்போது, திட்டத்தின் அடிப்படையில் அவர்களை ஊக்குவிக்கிறது. தொழிற்கடனுக்காக வங்கிகளை நாடுவதைவிட, தொழில் முதலீட்டுக் கழகத்தில் கடன் பெறுவது எளிதானது. மேலும் அரசின் மானியங்கள் மற்றும் சலுகைகள் நேரடியாக தொழில் முனைவோரைச் சென்று சேர தொழில் முதலீட்டுக் கழகமும் உதவி செய்கிறது. கடன் வழங்குவது தவிர உறுப்பினர்களுக்கான தொழிற் காப்பீடு செய்யவும் உதவி செய்து வருகிறது.

கடன்கள்

நீண்ட கால அடிப்படையில் காலமுறைக் கடன்களை வழங்கி வருகிறது. புதிய தொழில் தொடங்க, ஏற்கெனவே மேற்கொண்டு வரும் தொழிலை விரிவாக்கம் செய்யவும், தொழிலை நவீனப்படுத்தவும் இதன் மூலம் கடன் வாங்கலாம். கட்டிடம் தொழில் இயந்திரங்கள், மின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்த கடன்கள் வழங்கப்படுகிறது.

தவிர தொழில் முனைவோர்கள் மாநில அரசு நிறுவனங்களிடமிருந்து பெறும் தொழில் ஆணைகளுக்கு ஏற்பவும் கடன் கிடைக்கும். அரவை மில்கள், ஆலைகள், அலோபதி, ஆயூர்வேத மற்றும் பல் மருத்துவமனைகள் அமைப்பதற்கான கடன், குளிர்பதன கிடங்குகள், சேமிப்பு கிடங்குகள், வணிக வளாகம், சமூக கூடங்கள், திருமண மண்டபங்கள் அமைத்துக் கொள்வதற்கான கடனுதவிகளையும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் செய்து வருகிறது.

கடன் அளவு

தனிநபர்கள் என்றால் தொழிலின் தன்மையை பொறுத்து பதினைந்து கோடி வரை கடன் கிடைக்கும். கூட்டாகவோ, நிறுவனமாகவோ கடன் வாங்கும் பட்சத்தில் அதிகபட்ச கடன்களும் கிடைக்கும். திட்ட மதிப்பில் தொழில் முனைவோரின் பங்களிப்பு 25 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை இருந்தால் போதும்.

மீதி 75 முதல் 65 சதவீத தொகையை தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் கடனாகப் பெறலாம். முதல் தலைமுறை தொழில் முனைவோர் என்றால் 25 சதவீத பங்களிப்பு போதும். கடன் வகைகளைப் பொறுத்து 14 சதவீதம் முதல் 16 சதவீதம் வரை வட்டி விகிதம் இருக்கும்.

மானியங்கள்

தொழில் முனைவோர்களுக்கு அரசு வழங்கும் முதலீட்டு மானியங்கள் மற்றும் ஊக்கச் சலுகைகள் கிடைக்கும். பின் தங்கிய பகுதிகளில் தொழில் தொடங்குபவர்களுக்கும், பெண்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்கள், உடல் ஊனமுற்றவர்கள், திருநங்கைகள் போன்ற சிறப்பு பிரிவினர் தொடங்கும் தொழில்களுக்கான கூடுதல் மானியம், விவசாய தொழில்களுக்கான மானியம், புதிய தொழில் முனைவோர் மானியம் என பல வகைகளில் அரசு சலுகைகள் கிடைக்கும்.

கடன் வாங்குவது

விண்ணப்பத்துடன், மேற்கொள்ள திட்டமிட்டுள்ள தொழில் குறித்த தெளிவான திட்ட அறிக்கை, கட்டிடம் மற்றும் இயந்திரங்களுக்கு ஆகும் செலவின் திட்ட மதிப்பு, எதிர்பார்க்கும் லாபம், திரும்பச் செலுத்தும் காலம் உள்ளிட்ட அனைத்து விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு

Principal Secretary and Managing Director,

The Tamilnadu Industrial Investment Corporation Limited (TIIC).

New No.692 (Old No.473), Anna Salai, Nandanam, Chennai 600 035.

>http://www.tiic.in/

விண்ணப்பங்கள் தரவிறக்க >http://www.tiic.in/appln_download.html

மண்டல மற்றும் கிளை அலுவலகங்கள் >http://www.tiic.in/branch.asp

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x