Published : 16 Feb 2015 01:15 PM
Last Updated : 16 Feb 2015 01:15 PM
இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் முழுமையான வங்கி சேவை பெறாமலே உள்ளனர். இவர்களுக்கு வங்கி சேவையை எடுத்து செல்ல இப்போதுள்ள பெரிய வங்கிகளால் முடியாது. சிறு கிராமங்களில் சிறிய தொகைகளை சேமிக்கும் அல்லது அனுப்பும் தொழிலாளர்கள், விவசாயிகள், கைவினை கலைஞர்கள் போன்றவர்களுக்கு தனித்துவமான சிறிய வங்கிகளை மத்திய ரிசர்வ் வங்கி உருவாக்க முனைந்துள்ளது.
சிறிய வங்கிகள்
எல்லோருக்கும் வங்கி சேவையை அளிப்பதற்காக இந்த துறையில் என்ன மாற்றங்களை செய்வது என்பது பற்றி ஆராய 2013-ம் ஆண்டு நசிகேத் மோர் என்பவரின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழு சிறிய வங்கிகளை உருவாக் குவது சிறந்த அணுகுமுறையாக இருக்கும், சிறிய வங்கிகளுக்கான கட்டுப்பாடுகளும் கடுமையாக இருக்க வேண்டும், அப்போது தான் அந்த வங்கி கள் மக்களின் பணத்தை பாதுகாப்பாக வைத்து வியாபாரம் செய்யும் என்று கூறியது.
இந்த குழுவின் ஆலோசனைபடி பேமென்ட் பேங்க் (payment bank) மற்றும் சிறிய வங்கி (small bank) என்ற இரண்டு வகை வங்கிகளை உருவாக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்தது.
இதற்கான கட்டுப்பாட்டு விதிகளை உருவாக்கி அதற்கான ஆலோசனைகளை பொதுமக்களிடம் பெற்று இறுதி கட்டுபாட்டு விதிகளை ஜூலை 2014-ல் வெளியிட்டது. இதன் பிறகு பேமென்ட் மற்றும் சிறிய வங்கிகள் அமைக்க லைசென்ஸ்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. பிப்ரவரி 2, 2௦15 முடிவடைந்த இந்த காலத்தில் 1௦௦க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்ததாக தெரிகிறது.
பேமென்ட் பேங்க்
பேமென்ட் பேங்க் என்பவை மிக சிறிய வங்கிகள். இதில் ஒரு வாடிக்கையாளர்
# அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை நீண்டகால வைப்பு தொகை வைக்கலாம்,
# சேமிப்பு கணக்கு துவங்கலாம்,
# காசோலை, டிராப்ட், pay order மூலமாக பணபரிமாற்றம் செய்யலாம்,
# debit card பெறலாம், ஆனால் credit card பெறமுடியாது,
# சாதாரண காப்பீடு, பரஸ்பர நிதி போன்ற நிதி வகைகளை விற்கலாம்,
இந்த வகை பேமென்ட் பேங்க் சிறிய தொழில்கள், இடம் பெயரும் தொழிலாளர்கள், சிறிய கிராமத்தில் உள்ளவர்களுக்கு பயன்படும்.
சிறிய வங்கி
சிறிய அளவில் வைப்பு கணக்கு, சிறிய தொகை கடன்களை கொடுப்பதற்கும் இந்த சிறிய வங்கி பயன்படும். இதில் ஒரு வாடிக்கையாளர்
# சேமிப்பு கணக்கு துவங்கலாம்,
# சிறு தொழில் மற்றும் சிறிய, மிகச்சிறிய விவசாயிகளுக்கு சிறிய தொகை கடன் பெறலாம், இத்தொகை ரூ 25 லட்சத்தை தாண்டக்கூடாது.
# மற்ற எல்லா சாதாரண வங்கி சேவைகளை பெறலாம்.
# பாதுகாப்பு பெட்டக வசதி பெறலாம்.
முன்பு சிறிய பேங்க் ஒரு சில மாநிலங்களில் மட்டுமே இருக்கலாம் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்டு இப்பொழுது அது நாடு முழுவதும் விரிவடையலாம் என்று உள்ளது.
வங்கி உரிமம் பெற கட்டுப்பாடுகள்
இந்த வகை வங்கிகளுக்கு குறைந்த பட்சம் ரூ 1௦௦ கோடி முதலீடு வேண்டும். இவ்வங்கியை துவங்குவோர் (promoter) ஆரம்பத்தில் 40% பங்கும் அதன் பிறகு 12 ஆண்டுகளில் அவர்களின் பங்கு 26% ஆக குறைக்கப்படவும் வேண்டும். அந்நிய முதலீடு 74% வரை இருக்கலாம்.
பேமென்ட் வங்கி பெறும் வைப்பு தொகையில் மற்ற பெரிய வங்கிகள் போலவே ரொக்கம் வைக்கவும் மீதம் உள்ளவற்றில் 75% குறிப்பிட்ட அரசு மற்றும் மற்ற நிதி பத்திரங்களில் முதலீடு செய்யவும் வேண்டும்.
மீதமுள்ள 25% தொகையை அரசு துறை வங்கிகளில் நீண்டகால வைப்பு நிதியாக வைக்கலாம். பேமென்ட் பேங்க் நீண்டகால வைப்பு நிதி, தொடர் வைப்பு நிதி, வெளிநாட்டு இந்தியர் வைப்பு நிதி ஆகியவற்றை வாடிக் கையாளர்களிடமிருந்து ஏற்ககூடாது.
பேமென்ட் பேங்க் மற்ற பெரிய வங்கிகளுக்கு வியாபார முகவர்களாக (business correspondent) இருக்கலாம். இதன் மூலமாக பேமென்ட் பேங்க் மற்ற வங்கிகளின் கடன், நீண்டகால வைப்பு தொகை போன்ற நிதி சேவைகளை கொடுக்கலாம். ஒரு பேமென்ட் பேங்க் மற்ற பெரிய வங்கிகளுடன் கூட்டாகவும் வங்கி சேவையை செய்யலாம்.
சிறிய வங்கிகள் கொடுக்கும் கடனில் 75% முதன்மை துறைகளாக உள்ள விவசாயம், சிறு தொழில், போன்றவற்றிற்கு கொடுக்கவேண்டும். செல்போன் வங்கி வசதிகளும், உள்ளூரில் உள்ள சிறு வியாபாரிகளை முகவர்களாக நியமித்து தங்கள் வங்கி சேவையை வழங்கலாம். இந்த வகை வங்கிகளின் பெயரில் ‘சிறு நிதி வங்கி’ என்ற பெயர் இணைக்கப்படவேண்டும்.
யார் விண்ணப்பித்துள்ளனர்?
செல்போன் நிறுவனங்கள், சங்கிலித் தொடர் வணிக நிறுவனங்கள், முன் பண கார்டு விற்பவர்கள் என்று பலரும் பேமென்ட் பேங்க் உரிமம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அதே போல் வங்கி இல்லாத நிதி நிறுவனங்கள் (Non Banking Financial Companies-NBFC), மைக்ரோ பைனான்ஸ் (microfinance) நிறுவனங்கள் சிறிய வங்கி உரிமம் பெற விண்ணப்பித்துள்ளனர். ரிலையன்ஸ் நிறுவனம் எஸ்பிஐ-யுடன் கூட்டாக வங்கி துவங்க திட்டமிட்டுள்ளது.
அதே போல் ஆதித்ய பிர்லா நிறுவனத்தின் அங்கமான ஐடியா செல்லுலர் நிறுவனமும், பார்தி நிறுவனம் கோடக் மஹிந்திரா வங்கியுடனும் கூட்டு வைக்க முயற்சிக்கின்றன. பிக் பஜார், நீல்கிரிஸ் போன்ற சங்கிலித் தொடர் கடைகளை நடத்தும் பியூச்சர் குழும நிறுவனமும், vodafone நிறுவனமும் இதுபோன்ற வங்கி உரிமம் பெற விண்ணப்பித்துள்ளதாகத் தெரிகிறது. 1௦௦-க்கும் மேற்பட்ட விண்ணப் பங்கள் வந்துள்ளதால் குறைந்தபட்சம் 1௦-க்கும் மேற்பட்ட வங்கி உரிமம் கொடுக்கப்படும் என்பது எதிர்பார்ப்பு.
இந்த வகை வங்கிகள் கடன் கொடுத்து அதன் மீதான வட்டியைக் கொண்டு அதிக லாபம் பெறமுடியாது. அவர்கள் கொடுக்கும் வங்கி சேவைக்கு பெறும் கட்டணம் மூலமாகவே லாபம் பெறலாம். எனவே வங்கிச் சேவைக்கான செலவுகளை குறைக்கவேண்டும்.
செல்போன் முதல் கம்ப்யூட்டர் வரை எல்லா நவீன முறைகளையும் பயன் படுத்தி சேவை செலவைக் குறைத்தால் மட்டுமே இந்த வகை சிறிய வங்கிகள் தொடர்ந்து வியாபாரத்தில் நிலைக்க முடியும்.
சிறிய வகை வங்கிகளுக்கு குறைந்தபட்சம் ரூ 1௦௦ கோடி முதலீடு வேண்டும். இவ்வங்கியை துவங்குவோர் (promoter) ஆரம்பத்தில் 40% பங்கும் அதன் பிறகு 12 ஆண்டுகளில் அவர்களின் பங்கு 26% ஆக குறைக்கப்படவும் வேண்டும். அந்நிய முதலீடு 74% வரை இருக்கலாம்.
- இராம.சீனுவாசன்
seenu242@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT