Published : 16 Feb 2015 12:53 PM
Last Updated : 16 Feb 2015 12:53 PM
பிரதி வாரம் இந்தப் பகுதியில் எந்த விஷயத்தைப் பற்றி எழுதலாம் என்ற கேள்வியை எளிதில் தீர்த்து வைக்கிறது வாசகர்களிடமிருந்து வரும் கேள்விகள். நான் எதை எழுத உத்தேசித்தாலும், ‘அட, இந்தக் கேள்விக்கு பொதுவில் பதில் சொல்லாமல் அடுத்த விஷயத்திற்கு எப்படிப் போவது’ என்ற சிந்தனை எனது மனதை மாற்றி விடுகிறது.
அப்படி வந்த ஒரு வாசகர் மின்னஞ்சல் இதோ (ஆங்கிலத்திலிருந்து தமிழில், எனது மொழிபெயர்ப்பு).
“சார், ஆன்லைன் பங்கு வர்த்தகம் செய்து மாதம் 10% உத்திரவாதமான லாபம் பார்க்கலாம் என்று சில விளம்பரங்கள் பார்க்கிறேன், இவற்றை நம்பலாமா? இரண்டாவது, தினசரி பங்கு வர்த்தகம் செய்பவர்கள் நீண்ட கால முதலீடுகள் அவ்வளவு லாபம் தராது என்கிறார்கள். பரஸ்பர நிதிகளோ நீண்ட கால முதலீடே லாபகரமானது என்கின்றனர். எதை நம்புவது?”
இரண்டுமே பதில் சொல்வதற்கு எளிமையான கேள்விகள்தாம். ஆனாலும் முக்கியமான கேள்விகள். ஏனெனில் இதுதான் நமது உலகம். அன்றாடம் ஊடகங்களில், உரையாடல் களில், விளம்பரங்களில் நாம் கேட்டுக் கொண்டேயிருக்கும் விஷயங்கள் தாம் நமது சிந்தனையை வடிவமைக்கின்றன; நிதி நிர்வாகம் குறித்த நமது தீர்மானங்களை உருவாக்குகின்றன. இவற்றிற்கு வலுவான, நிலையான பதில்கள் நம்மிடம் இருப்பது தான் நமக்குச் சரியான முடிவுகளை எடுக்கத் துணை புரியும்.
முதல் கேள்விக்குப் பதில், நீங்கள் எதிர்பார்ப்பது போல், இவை போன்றவை முற்றிலும் தவறான, மோசடியான விளம்பரங்கள் என்பது தான். பங்கு வர்த்தகம் என்றில்லை, எந்த வர்த்தகத்திலும், எந்த முதலீட்டு முறையிலும் “உத்திரவாதமாக” மாதாந்திரம் 10% வட்டி பெறுவது என்பது இயலாத காரியம்.
நேரடி பங்கு வர்த்தக முதலீடு செய்து வந்தால், அவ்வப்போது, சிற்சில மாதங்களில், 10% என்ன, அதற்கு மேலேயே கூட லாபம் கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால், அடுத்த மாதமே அதற்குக் குறைவாகவோ, அல்லது நஷ்டத்திலோ போவதற்கு அதே அளவிற்கு வாய்ப்பிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் இதை திருப்பித் திருப்பிச் செய்ய முடியும் என்பது கண்டிப்பாக முடியாது. யோசித்துப் பாருங்கள், இது மட்டும் சாத்தியம் என்றால், ஒரே வருடத்தில் போட்ட பணம் இரண்டரை மடங்கு வளர்ந்து விடும். எல்லோரும் இதைத் தவிர வேறு எதையுமே செய்ய வேண்டாமே!
இது சாத்தியம் என்று சொல்லி விளம்பரம் செய்பவர்கள் முதலீட்டாளர்களை ஏமாற்ற முயல்கிறார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.
மறைந்த எழுத்தாளர் சுஜாதா பாணியில் சொல்வதென்றால், அவர்களை “பசித்த புலி தின்னட்டும்”. இந்த ஒரு விளம்பரம் என்றில்லை. இது போன்ற எந்த விளம்பரங்களையும் நம்பாதீர்கள்.
இன்றைய நிலையில், எந்த ஒரு முதலீடோ, முதலீட்டு முறையோ உத்திரவாதமாக 12% மேல் தரும் என்று சொன்னால், தீர விசாரிக்காமல் முடிவெடுக்காதீர்கள். விசாரணையே செய்யாமல் உதாசீனம் செய்து விட்டுப் போவது இன்னமும் உசிதம்.
இரண்டாவது கேள்விக்கான பதிலும் எளிமையானதுதான், இருப்பினும் இத்தனை நேரடியானது இல்லை. பங்கு வர்த்தகம் செய்வதில் இரண்டு முறைகள் இருக்கின்றன. ஒன்று, ஒரு நிறுவனத்தின் அடிப்படைகளை ஆராய்ந்து, அது ஒரு நல்ல, நிலையான, லாபகரமான நிறுவனமா என்று கண்டறிந்து, அதன் பங்குகளை ஒரு நீண்ட கால அடிப்படையில் வாங்கி, வைத்திருந்து, பின்னொரு நாளில் நல்ல லாபத்திற்கு விற்பது. இதை ‘வாங்கி வைத்திருக்கும்’ முறை (buy and hold) என்று சொல்வார்கள்.
இன்னொரு முறை தினசரி வாங்கும் பங்குகளை அன்றன்றைக்கே விற்று விடுவது. இந்த முறை நிறுவனங்களை அலசி ஆராய நேரம் ஒதுக்காத முறை. எந்த வகை நிறுவனங்கள் இன்று ஒரு சிறு லாபம் பெற்றுத் தரும் என்பதை அந்தப் பங்கின் ஏற்ற இறக்கச் செயல்பாடுகளைக் கொண்டு கணிப்பதன் மூலம் செயல்படுவது. இந்த முறையை ‘டே டிரேடிங்’ அல்லது ‘அன்றாட பங்கு வர்த்தக’ முறை என்று சொல்வார்கள்.
இத்தகைய அன்றாட பங்கு வர்த்தகர்கள் ஒரு பங்குச் சந்தையின் செயல்பாட்டிற்கு உதவியாக ஒரு முக்கியமான பங்கினை ஆற்றுகிறார்கள் என்பது உண்மை. இவர்களது செயல்பாடு உருவாக்கும் பங்கு வர்த்தகப் புழக்கம்தான் ஒரு பங்கின் உண்மையான விலையை சந்தையில் சரியாக நிர்ணயிக்க உதவுகிறது. பங்குச் சந்தை என்பதே ஒரு வகையில் ஏலமுறைக்கு ஒப்பானது. ஒரு ஏலத்தில் எவ்வளவு பேர் பங்கேற்கிறார்களோ அந்த அளவிற்கு ஒரு பொருளுக்கான நியாய விலை கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறதல்லவா? அது போல பங்குச் சந்தையில் ஒரு பங்கின் புழக்கம் அதிகமானால் அதன் விலையும் சரியான நிலையை அடையும்.
ஆனால், இந்த பங்கு வர்த்தக முறையை யார் வேண்டுமானாலும் கையாளலாம், பெரும் லாபம் பார்க்கலாம் என்றெல்லாம் பரப்புரை செய்யப்படுமானால், அது நிச்சயம் தவறு. இந்த முறையில் பங்கு வர்த்தகம் செய்வதனால் கணிசமான, தொடர்ச்சியான லாபம் பார்க்க முடியுமா என்றால், அது ஒரு பெரும் கேள்விக்குறியே. முதலில், இது மேம்போக்காகச் செய்யக் கூடிய விஷயம் இல்லை. ஆழமாக கற்றறிந்து, தமக்கென சில முறைமைகளை வகுத்துக் கொண்டு, தொடர்ந்து விடாப்பிடியாக கையாளப்பட வேண்டிய யுத்தி இது.
இதற்குப் பயிற்சியும் தேவை, ‘ரிஸ்க்' எடுக்கும் மனப்பக்குவமும் தேவை, தொடர்ந்து அதிகமான நேர ஒதுக்கீடும் தேவை. ஒரு முழு நேர வேலையைப் பார்த்துக் கொண்டு இதைப் பகுதி நேரமாகச் செய்யலாம் என்று உத்தேசித்தால் அது மிகவும் ஆபத்தானது. சுருக்கமாகச் சொல்லப்போனால், நூற்றில் தொண்ணுற்றியொன்பது பேருக்கு இது சரிப்பட்டு வராது.
மேலும், பரஸ்பர நிதிகள் நீண்ட காலத்தில் லாபம் தராது என்பது போன்ற எதிர்மறை பரப்புரைகளும் புறம் தள்ளப்பட வேண்டியவையே. தரவுகளின் சான்றோடு, புள்ளி விவரக் கணக்கோடு பரஸ்பர நிதிகள் எப்படி நீண்ட கால அடிப்படையில் மிகப் பெரும்பான்மையான முதலீட்டாளர் களுக்கு நிதி வளம் ஈட்டித் தந்திருக் கின்றது என்பதைத் தெளிவாக நிறுவ முடியும்.
சாராம்சமாகச் சொன்னால், ரிஸ்க் என்பது ஒரு கத்தியைப் போலே. அதை நாம் சரியாகப் பயன்படுத்தினால் நமக்கு நல்ல பலன் கிடைக்கும். அதை வைத்து விளையாடினால், ஆபத்தில்தான் முடியும்.
இன்றைய நிலையில், எந்த ஒரு முதலீடோ, முதலீட்டு முறையோ உத்திரவாதமாக 12% மேல் தரும் என்று சொன்னால், தீர விசாரிக்காமல் முடிவெடுக்காதீர்கள். விசாரணையே செய்யாமல் உதாசீனம் செய்துவிட்டுப் போவது இன்னமும் உசிதம்.
- ஸ்ரீகாந்த் மீனாட்சி
srikanth@fundsindia.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT