Published : 26 Jan 2015 02:30 PM
Last Updated : 26 Jan 2015 02:30 PM
பணம் குறித்த கவலை யாருக்குத் தான் இல்லை? வயதாகிக் கொண்டே தான் போகிறது. குழந்தைகள் வளர்ந்து கொண்டேதான் இருக்கிறார்கள். எதிர்காலத்தில் நிச்சயமாக வரப் போகும் செலவுகளே வரிசை கட்டிக் கொண்டு நிற்கின்றன. எதிர்பாராமல் என்னென்ன செலவுகள் வருமோ யார் கண்டது? கூடவே தேவைகள் மற்றும் ஆசைகள். வீடு வாங்கத்தான் வேண்டும். நாமும் ஏன் இங்கே பக்கத்திலாவது ஒரு வெளிநாட்டிற்குச் சுற்றுப் பயணம் சென்று வரக்கூடாது?
இப்படிப்பட்ட எதிர்காலத் தேவைகள் மற்றும் ஆசைகளே பணம் குறித்த நமது கவலைகளைச் செலுத்துகின்றன. இக்கவலைகளை நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கையாளுகின்றோம்.
கவலைகள் பலவிதம்: மிகப் பெரும்பான்மையானோர் இந்தக் கவலைகளக் கண்டு கொள்வதே இல்லை. நடப்பது நடக்கட்டும் என்று விட்டு விடுகிறார்கள். வருமானம் வரட்டும், செலவுகள் அன்றாடம் இருக்கவே செய்கின்றன. மிஞ்சுவது வளர வளர, அந்தச் சேமிப்புகள் அவ்வப்போது எழும் ஆசைகளுக்கு அர்ப்பணம் ஆகும். புதிய டி.வி, கார், புது மாடல் செல்ஃபோன் என வீடெங்கும் பரிமளிக்கும்.
பத்து வருடங்கள் என்ன, பத்து மாதங்கள் கழித்து கூட என்ன ஆகும் என்ற எண்ணமே கிடையாது. அரசாங்கம் அறிவிக்கும் வரிச்சலுகைகளுக்கு ஏற்றவாறு ஆங்காங்கே முதலீடுகள் செய்து விட்டு எது எங்கு இருக்கிறது என்று கூட தெரியாமல் இருப்பார்கள். ஆனால் இவற்றிற்கெல்லாம் இடையில், நிலத்திற்கு கீழ் ஓடும் நதியைப் போல அடிமனதில் எதிர்காலம் குறித்த கவலை சலசலத்துக் கொண்டே இருக்கும்.
பணம் புரட்டல்: இவர்கள் இப்படி என்றால், இன்னொரு வகை மற்றொரு முனையில் உள்ளது. இவர்களுக்கு சதா சர்வ காலம் பணம் குறித்த கேள்விகளும் கவலைகளும் தான். எப்பொழுதும் இவர்கள் முதலீடுகள் குறித்து ஏதாவது யோசித்துக் கொண்டே இருப்பார்கள். எந்தப் பணத்தை எப்படிப் புரட்டிப் போட்டால் இன்னமும் அரை சதவிகிதம் வட்டியோ லாபமோ கிடைக்கும் என்று துருவிக் கொண்டிருப்பார்கள். இன்றைய மார்க்கெட் ‘ட்ரெண்ட்’ என்ன, எது நன்றாகப் போய் கொண்டிருக்கிறது என்பனவே இவர்களது சிந்தனையை ஆக்கிரமித்திருக்கும்.
இந்த இரு அணுகுமுறைகளுமே சரியானவை அல்ல. எதுவும் செய்யாமல் கவலை மட்டும் பட்டுக் கொண்டிருப்பதில் பயனில்லை. ஏதாவது செய்ய வேண்டுமே என்று கண்டதையும் செய்து கொண்டே இருப்பதும் பயனில்லை. பின்னது சில சமயங்களில் ஆபத்தானதும் கூட.
புத்த மார்க்கம்: பின் என்னதான் செய்ய வேண்டும்? பௌத்தத்தில் சொன்னது போல இவை இரண்டுக்கும் இடைப்பட்ட ‘நடு மார்க்கத்தை’த் தேர்ந்தெடுப்பதே சரியானது. அது ஒரு எளிமையான வழி - திட்டமிட்ட சில சுலபமான விஷயங்களைச் செய்து விட்டு, பின்னர் சும்மா இருக்க வேண்டும். அவ்வளவு தான். அப்படிச் செய்தால் வேலையும் நடக்கும், நமக்கு நிம்மதியும் கிடைக்கும். அந்தச் சில சுலபமான விஷயங்கள் மூன்று - காப்பீடு, பாதுகாப்பு, முதலீடு. முதலிரண்டும் ஒரு சமயத்தில் செய்ய வேண்டியவை. முதலீடு என்பது தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டியது.
காப்பீடு: முதலில் காப்பீடு. இதில் சந்தேகமே வேண்டாம். செஸ் விளையாட்டில் எப்படி முதல் வேலை நமது ராஜாவைப் பாதுகாப்பதோ, அது போல வாழ்க்கையிலும் நமக்குத் தேவையான காப்பீடுகளை உறுதி செய்து கொள்வதே முதல் கடமை. நம்மை, நமது வருமானத்தைச் சார்ந்து மற்றவர்கள் இருக்கிறார்கள் என்ற சூழ்நிலையில் இருக்கும் எவருக்கும் தேவைப்படுவது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது எத்தகைய ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பது.
டெர்ம் பிளான்: இருக்கும் ஏராளமான காப்பீட்டுத் திட்ட வகைகளில், நமக்கு முக்கியமாகத் தேவைப்படுவது ‘டெர்ம் பிளான்’ எனப்படும் அதிகப் பாதுகாப்பு கொடுக்கும் திட்டங்களே. இவற்றில் போடப்படும் பணம் திரும்பி வராது, ஆனால் நமக்கு ஒன்று நேர்ந்தால் நமது குடும்பத்திற்கு மிக அதிகமாக நிதி தரக்கூடிய திட்டங்கள் இவையே என்பதால், இவற்றைத் தேர்ந்தெடுப்பதே சரியானது. நமது வருடாந்திர வருமானத்தில் நான்கு முதல் ஐந்து மடங்கு நமது காப்பீடு தொகை இருக்க வேண்டுமென்பது பொது விதி. இன்றைய அளவில் குறைந்தது ஐம்பது லட்சத்திற்காவது காப்பீடு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இதே போல மருத்துவக் காப்பீடும் முக்கியம். பலருக்கு அவர்களது பணியிடங்களில் அளிக்கப்படும் மருத்துவக் காப்பீடு இருக்கிறதென்றாலும், அதற்கு மேலதிகமாகவும் காப்பு வெளியே எடுத்துக் கொள்வது நல்லது
அவசரத் தேவைக்கு… - இரண்டாவது அவசரத் தேவைகளுக்கு உதவுவதற்கென்று ஒரு பாதுகாப்புத் தொகை. நமக்கு திடீரென்று வரக்கூடிய, திட்டமிட இயலாத செலவுகளுக்கென்று ஒரு தொகையைச் சேமித்து ஒதுக்கி வைத்து விட வேண்டும். பொதுவாக இந்தத் தொகை நமது மாத வருமானத்தின் மூன்றிலிருந்து ஆறு மடங்கு வரை இருக்க வேண்டும் என்பது விதி. நமது சேமிப்புகளிலிருந்து சிறிது சிறிதாக இந்தத் தொகைக்கு ஒதுக்கி வைத்து அதை தனியே வைத்து விட்டால், திடீர் செலவுகள் வரும் பொழுது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த கவலை இருக்காது.
இவை இரண்டையும் செய்து விட்டால், நாம் முதலீடுகளைப் பற்றி யோசிக்கத் தொடங்கலாம். உண்மையில், இந்த முதல் இரண்டு விஷயங்களைச் செய்வதே, நம்மை முதலீடு செய்வதற்குத் தயார் செய்வதற்குத்தான். நாம் சம்பாதித்து சேமித்து முதலீடு செய்து என்ன பயன், நமக்கொன்று ஆகி விட்டால் என்ன ஆகும் என்ற கவலையை காப்பீடும், திடீரென்று ஏதேனும் செலவு வந்து விட்டால், முதலீடுகளுக்கு என்ன ஆகும் என்ற கவலையை பாதுகாப்புத் தொகையும் பார்த்துக் கொள்ளும். இப்பொழுது நாம் நிம்மதியாக ஒரு முதலீட்டுத் திட்டத்தினைத் துவக்கலாம்.
திட்டமிட்ட முதலீடு: இந்த முதலீட்டுத் திட்டம் என்பது ஆங்காங்கே அவ்வப்போது செய்யும் முதலீடுகளாக இருக்கக் கூடாது. திட்டமிட்ட முறையில், மாதாந்திர தவணைகளில், சந்தைகளைப் பற்றியும் பொருளாதார நிலவரம் பற்றியும் கவலைப்படாமல் நிரந்தரமாக செய்து கொண்டே இருக்கும் திட்டங்களாக இருக்க வேண்டும். அதாவது, இத்தகைய முதலீடுகளை நாம் தொடங்கி விட்டு பின் அவற்றைப் பற்றி அக்கறையே படக்கூடாது. ஒரு மாதாந்திர செலவு போல அது பாட்டிற்கு அது நடந்து கொண்டே இருக்க வேண்டும். தொடங்கி வைப்பது மட்டுமே நமது வேலை. வருடத்திற்கு ஒரு முறை எட்டிப் பார்த்து விட்டு பின் விட்டு விட வேண்டும்.
இம்மூன்றையும் செய்து விட்டால், பாரதி சொன்னது போல் ‘விட்டு விடுதலையாகி’ இருக்கலாம். காப்பீடு நமக்கு நிம்மதி கொடுக்கும்; பாதுகாப்புத் தொகை நமக்கு வேண்டும் போது கை கொடுக்கும்; நமது முதலீடுகள் நம் எதிர்காலத்தைப் பாதுகாக்கும். நாம் சுகமாக சும்மா இருக்கலாம்.
தொடர்புக்கு: srikanth@fundsindia.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT