Published : 19 Jan 2015 02:18 PM
Last Updated : 19 Jan 2015 02:18 PM

தரையை தொடாத விமானம்

பணக்காரர்கள் அதிகம் பயன்படுத்துவது விமானமாக இருந்தாலும், ஏர்லைன் துறை அப்படி ஒன்றும் பிரமாதமாக இல்லை. இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் ஒரு சில விமான நிறுவனங்களை தவிர மற்றவை சிறப்பான லாபம் ஈட்டவில்லை.

சில மாதங்களுக்கு முன்பு கிங்பிஷர் விமான நிறுவனம் கடன் சுமை அதிகமானதால் செயல்பட முடியாமல் தன்னுடைய போக்குவரத்தை நிறுத்தியது.

இதேபோல ஸ்பைஸ்ஜெட் நிறுவனமும் செயல்பட முடியாமல் தன்னுடைய போக்குவரத்தை நிறுத்தும் என்ற சூழ்நிலையில் ஆபத்பாந்தவனாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் முன்னாள் நிறுவனர் அஜய் சிங் வந்தார்.

சிக்கல் என்ன?

தொடர்ந்து ஆறு காலாண்டுகளாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் லாபம் ஈட்டவில்லை. கடந்த செப்டம்பர் காலாண்டில் 310 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டமடைந்தது. தவிர தொடர்ந்து மூன்று நிதி ஆண்டுகளாக நஷ்டம்தான்.

2012-ம் ஆண்டில் 605 கோடி ரூபாயும், 2013-ம் நிதி ஆண்டில் 191 கோடி ரூபாயும் 2014-ம் ஆண்டில் 1,003 கோடி ரூபாயும் 2015-ம் நிதி ஆண்டில் (முதல் அரையாண்டில்) 434 கோடி ரூபாயும் நஷ்டமடைந்தது.

தொடர் நஷ்டம் காரணமாக நிறுவனத்தின் கடன் அதிகரித்துக் கொண்டே வந்தது. இப்போதைக்கு 1,300 கோடி ரூபாய்க்கு கடன் அதிகரித்தது. இதனால் விமான நிலையங்களுக்கு செலுத்த வேண்டிய தொகை மற்றும் எண்ணெய் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகை தடைபட்டது. இதனால் கடந்த டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் முழுவதும் விமான போக்குவரத்து தடைப்பட்டது.

கைமாற்றம்

2010-ம் ஆண்டு 750 கோடி ரூபாய் கொடுத்து 38 சதவீத பங்குகளை சன் குழுமத்தலைவர் கலாநிதி மாறன் வாங்கினார். அப்போது அந்த நிறுவனத்திடம் 450 கோடி ரூபாய் அளவுக்கு பணம் இருந்தது. அதன் பிறகு நிலைமை சிக்கல் அடைந்த போது மேலும் 800 கோடி ரூபாய் முதலீடு செய்தார். அதனால் கலாநிதி மாறன் வசம் 53 சதவீத பங்குகள் வந்தன.

நிறுவனம் சிரமத்தில் இருக்கும் இந்த நிலையில் மேலும் பணத்தை முதலீடு செய்ய கலாநிதி மாறன் விரும்பவில்லை.

இப்போது நிறுவனத்தின் உரிமையை கலாநிதி மாறனிடம் இருந்து அஜய்சிங்குக்கு மாற்றுவதாக ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் அறிவித்தது. ஆனால் எவ்வளவு தொகைக்கு நிறுவனம் கைமாறியது என்பது பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.

ஏன் ஸ்பைஸ்ஜெட்?

ஸ்பைஸ்ஜெட்டை வாங்குவதை விட புதிதாக ஒரு ஏர்லைன் நிறுவ னத்தை ஆரம்பிக்கலாம் என்று தோன்றும். இத்தனைக்கும் புதிய விமான நிறுவனம் ஆரம்பிப்பதற்கு சுமார் 250 கோடி ரூபாய் போதும்.

ஆனாலும் நஷ்டத்தில் இருக்கும் நிறுவனத்தை ஏன் வாங்க வேண்டும் என்று தோன்றும். ஆனாலும் அதற்கு காரணம் இருக்கிறது.

நவம்பர் மாத இறுதியில் விமானத்தில் பயணித்தவர்களின் எண் ணிக்கையில் 14.9 சதவீத பங்கினை ஸ்பைஸ்ஜெட் வைத்திருக்கிறது. அதற்கு சில மாதங்களுக்கு முன்பு 20 சதவீதம் அளவுக்கு இருந்தது.

மேலும் புதிதாக ஒரு விமான நிறுவனத்தை ஆரம்பித்து, அதற்கு அனுமதி வாங்கி செயல்பட ஆரம்பிப்பதற்கு சில வருடங்கள் கூட ஆகலாம். மேலும் ஸ்பைஸ்ஜெட் பிராண்ட் மதிப்பு இருக்கிறது. தவிர விமானங்கள், நெட்வொர்க் இருக்கிறது என்பதால் ஸ்பைஸ்ஜெட்டை அஜய் சிங் தேர்ந்தெடுத்தார்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை கடந்த ஆறு மாதங்களில் 60 சதவீதம் அளவுக்கு குறைந்திருக்கிறது. இது மிகச்சிறந்த வாய்ப்பு, மேலும் வருங்காலத்தில் விமானத்தில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூடிய விரைவில் இது லாபகரமான நிறுவனமாக மாறும் என்றும் அஜய் சிங் தெரிவித்தார்.

இதனால் ஸ்பைஸ்ஜெட் தரையிறங்காமல் தொடர்ந்து பறக்கும் என்று நம்பலாம்.

1993

டெக்ஸ்டைல் துறையை சேர்ந்த எஸ்.கே.மோடி எம்.ஜி. எக்ஸ்பிரஸ் என்னும் நிறுவனத்தை ஆரம்பித்தார். பிறகு லுப்தான்சா நிறுவனத்துடன் சேர்ந்து மோடிலுப்ட் என்னும் நிறுவனம் பிறந்தது.

2000

1996-ம் ஆண்டு மோடிலுப்ட் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன. ராயல் ஏர்வேஸ் என்னும் பெயரில் மீண்டும் தொடங்கப்பட்டு, பாம்பே பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது.

2005

இப்போது ராயல் ஏர்வேஸ் நிறுவனம் ஸ்பைஸ் ஜெட்டாக மாறியது. அஜய் சிங் உள்ளிட்ட முதலீட்டாளர்கள் நிறுவனத்துக்குள் வந்தார்கள்.

2008

அமெரிக்க முதலீட்டாளர் வில்பர் ரோஸ் 345 கோடி ரூபாய் முதலீடு செய்து 30 சதவீத ஸ்பைஸ்ஜெட் பங்குகளை வாங்கினார்.

2010

வில்பர் ரோஸ் வெளியேறி, சன் குழும தலைவர் கலாநிதி மாறன் 37 சதவீத பங்குகளை 750 கோடி ரூபாய் கொடுத்து வாங்கினார்.

2014

நஷ்டம் அதிகரித்தது, கடன்கள் அதிகரித்தன. விமான சேவைகள் தடைபட்டன. மேலும் முதலீடு செய்ய மாறன் தயங்கினார்.

2015

நிறுவனத்தின் தலைமை மாறியது. தன்வசம் இருக்கும் பங்குகளை கலாநிதி மாறன் விற்றார். நிர்வாகம் அஜய் சிங் வசம் மாறியது.

அஜய் சிங்

கச்சா எண்ணெயின் விலை 60 % அளவுக்கு குறைந்திருக்கிறது. இது மிகச்சிறந்த வாய்ப்பு, மேலும் வருங்காலத்தில் விமானத்தில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் இது லாபகரமான நிறுவனமாக மாறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x