Last Updated : 15 Dec, 2014 05:01 PM

 

Published : 15 Dec 2014 05:01 PM
Last Updated : 15 Dec 2014 05:01 PM

ஜன் தன் திட்டம்: இலவச நிதிச் சேவை சாத்தியமா?

ஒரே நாளில் 1.5 கோடி சேமிப்பு கணக்குகள் இந்திய வங்கித் துறையால் தொடங்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 28, 2014 அன்று தொடங்கப்பட்ட ஜன் தன் திட்டத்தால் இது சாத்தியமானது. ஒவ்வொருவருக்கும் ஒரு வங்கி கணக்கு, அதனுடன் ஒரு டெபிட் அட்டை (RuPay Debit Card), ஒரு லட்சம் ரூ.பாய்க்கான விபத்து காப்பீடு, முப்பது ஆயிரம் ரூபாய் ஆயுள் காப்பீடு, ஐந்தாயிரம் ரூபாய் வரை கடன் என்ற கூடுதல் நிதி சேவைகளும் உண்டு என்று பிரதமர் இதனை தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து நிதி அமைச்சகம் வங்கிகளை முடுக்கிவிட, சில நாட்களிலேயே பலகோடி சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

என்ன கணக்கு?

ஜனவரி 2015-க்குள் 10 கோடி கணக்குகள் தொடங்கப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 8, 2014 அன்று 8.76 கோடி எண்ணிக்கையை தாண்டிவிட்ட நிலையில் அடையவேண்டிய இலக்கு அருகில்தான் உள்ளது. நிதி சேவைகள் இலவசமாக வழங்க வேண்டியதா? அவற்றிற்கான செலவுகளை யார் ஏற்பது?

பொதுவாக வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்கு வங்கிகள் கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை. ஆனால், தொடர்ந்து சேமிப்பு கணக்கில் இருக்கும் பணத்தினால் வங்கிகளுக்கு வட்டி வருவாய் கிடைக்கும், அதனைக்கொண்டு சில சேவைகளை இலவசமாக செய்யமுடியும். பணமே இல்லாத சேமிப்பு கணக்கினால் ஏற்படும் கூடுதல் செலவை அரசு ஈடுகட்டாதபோது, இந்தவகை சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களால் எதிர்கால வங்கி வியாபாரம் பெருகும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே வங்கிகள் இதனை ஏற்கலாம்.

வங்கிக் கணக்கு லாபகரமா?

சேமிப்பு கணக்கில் தொடர்ந்து ரூ.15,000 இருந்தால் மட்டுமே அடிப்படை வங்கிச் சேவைகளை இலவசமாக கொடுக்கமுடியும். இதுவரை தொடங் கப்பட்ட 8.76 கோடி கணக்குகளில் 6.5 கோடி கணக்குகளில் பணம் இல்லா மலும், மீதமுள்ள 2.26 கோடி கணக்குகளில் ரூ.6.8 கோடி இருப்பதாக அரசு தகவல் அறிக்கை கூறுகிறது. அதாவது 8.76 கோடி கணக்குகளில் சராசரியாக ஒவ்வொன்றிலும் ரூ.776 இருக்கிறது என்று வைத்துக்கொண்டாலும், அல்லது பணமுள்ள 2.26 கோடி கணக்குகளில் சராசரியாக ஒவ்வொன்றிலும் ரூ.3,௦௦௦ தான் இருக்கிறது என்றாலும், இந்த கணக்குகளுக்கு வங்கிச் சேவையை தொடர்ந்து இலவசமாகக் கொடுப்பது சாத்தியம் இல்லை.

இந்த வகை சேமிப்புக் கணக்குகளுக்கு இது வரை 5.8 கோடி RuPay Debit Cardகள் கொடுக்கப்பட்டுள்ளன. கொடுப்பட்ட RuPay Debit Cardடை பயன்படுத்த அதிக ATMகள் திறக்கவேண்டும், அதில் செய்யப்படும் வியாபாரம் குறையும்போது, ATM சேவை செலவு அதிகமாகும். இதனை இந்த வகை வாடிக்கையாளர்களால் கொடுக்க முடியாது, இது மேலும் ஒரு சிக்கல்.

இதனுடன் ஒவ்வொருவருக்கும் முதலில் ரூ.2,௦௦௦ வரை கடன் கொடுக்கவேண்டும், அதனை திருப்பி செலுத்தினால், ரூ.5,௦௦௦ வரை கடன் அளிக்கவேண்டும்.

இந்த 1௦ கோடி கணக்குகளுக்கும் ரூ.2,௦௦௦ கடன் என்றாலும் கூட வங்கித் துறைக்கு ரூ.2௦,௦௦௦ கோடி தேவை. எந்த விதமான உறுதியும் இல்லாமல் இவ்வளவு கடன் கொடுப்பது பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும். பெரிய வியாபார நிறுவனங்களே கடனை திருப்பி தராத போது ஏழைகளுக்கு கொடுத்தால் என்ன என்று கேட்டால், பெரிய குற்றம் சிறிய குற்றத்தை நியாயப் படுத்தாது; விரையமாவது மக்கள் பணம்தான்.

மேலும் ஆயுள் விபத்துக் காப்பீடுகளின் செலவினை யார் ஏற்பது என்பதில் இதுவரை தெளிவான முடிவுகள் இல்லை. ஆனால் இந்த இரண்டு காப்பீடுகளும் ஒரு குடும்பத்தில் 18-60 வயதுக்குட்பட்ட ஒருவருக்கு மட்டுமே வழங்கப்படும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

எல்லோரையும் வங்கி சேவையில் இணைக்க முடியுமா?

கடந்த UPA அரசும் Financial Inclusion என்ற திட்டத்தின் கீழ் குடும்பத்தில் ஒருவருக்கு சேமிப்புக் கணக்கு கொடுக்க முயற்சித்தது. இவற்றில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. ஒன்று எல்லா இடங்களிலும் வங்கி அலுவலகத்தை திறக்க முடியாது என்பதால் Business Correspondent (BS) என்னும் வியாபாரத் தொடர்பாளர்களை வங்கிகள் நியமித்தன. அதாவது நேரடி வங்கி சேவை இல்லாத கிராமங்களில் இவர்கள் சேவை அவசியம்.

இவர்கள் மூலம் சேர்க்கப்பட்ட சேமிப்பு கணக்குகள் அதிகம். ஜன் தன் திட்டத்திலும் இவர்கள் பங்கு முக்கியம். அதற்கான செலவுகளை யார் ஏற்பது என்பதை பார்க்கவேண்டும்.

சேமிப்புக் கணக்கை தொடங்கினாலும், அதனைத் தொடர்ந்து பயன்படுத்த ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு ATM அல்லது BS சேவை அவசியம். இதற்கு ஆகும் செலவு, நிர்மாணிக்கும் முறை, போன்றவற்றில் தெளிவில்லாமல் இருப்பது வங்கி சேவையை விரிவாக்குவதில் உள்ள பிரதான பிரச்சினையாகும். ஒருவரே இரண்டு சேமிப்பு கணக்குகள் தொடங்கும் போது வங்கி சேவைக்கான செலவுகள் இரட்டிப்பாகும்.

இதனைத் தவிர்க்க ஆதார் அட்டை அவசியம். ஆதார் எண்ணுடன் சேமிப்பு கணக்கு எண்ணை சேர்க்கும் போது, ஒருவர் எவ்வளவு சேமிப்பு கணக் குகள் வைத்துள்ளார் என்பதை எளிதில் அறிந்து, தேவையற்ற கணக்குகளை நீக்கமுடியும். எல்லாருக்கும் ஆதார் அட்டை வழங்கப்படாத நிலையில், வங்கிச் செலவுகளைக் குறைத்து எல்லாருக்கும் வங்கி சேவை அளிப்பது கடினம்.

இத்திட்டத்தை பற்றி RBI ஆளுநர் ரகுராம் ராஜன் கூறுகையில்,

“போலி சேமிப்புக் கணக்குகளை உருவாக்கினால் இந்தத் திட்டம் தோல்வி அடையும். எல்லாருக்கும் வங்கி சேவை வழங்கவில்லை என்றாலும் இத்திட்டம் தோல்விதான். தொடங்கப்பட்ட கணக்கு பயன்பாட்டில் இல்லையென்றாலும் வீண்தான். இத்திட்டத்தின் மூலம் பலர் முதல் முறையாக வங்கிக்கு வருபோது அவர்களுக்கு நாம் நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும், இல்லையெனில் அவர்கள் நம்மை விட்டு விலகிவிடுவார்கள்”.

- இராம.சீனுவாசன்
seenu242@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x