Published : 22 Dec 2014 12:48 PM
Last Updated : 22 Dec 2014 12:48 PM
வள்ளுவர் அமைச்சருக்குச் சொல்லும் மூன்றாவது அறிவுரை தன்மேல் சந்தேகம் வராமல் நடந்துகொள்ள வேண்டும் என்பதே!.
அமைச்சர் பெரிய தவறுகளைச் செய்யாது இருப்பதுடன், அரசருக்கு அமைச்சர் இத்தவறுகளைச் செய்து விடுவாரோ என்கின்ற சந்தேகம் வராத அளவுக்கு நடந்து கொள்ள வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். வள்ளுவரின் மறு அவதாரமாகவே போற்றப்படும் பரிமேலழகர், எதிரிகளுடன் சேர்ந்து குழிபறிப்பது பெரிய திருட்டு முதலியவற்றை அமைச்சர் செய்யக் கூடாத பெருங்குற்றங்களாகச் சொல்கிறார்.
உங்கள் மேலதிகாரியை அரசராகவும், உங்களை அமைச்சராகவும் பாவித்துக் கொண்டால் நீங்களும் குறளின் பலனைப் பெறலாம். இன்றைய அலுவலகச் சூழலில் இதை பொருத்திப் பார்ப்போமா?
உங்கள் மேலதிகாரிக்கு உங்கள் மேல் எந்தெந்த விஷயங்களில் சந்தேகம் வரக்கூடாது? அதாவது எந்தெந்த விஷயங்களில் நீங்கள் அவரின் முழு நம்பிக்கையைப் பெற்று இருக்க வேண்டும்? உங்களது நேர்மை, பற்று, திறமை ஆகிய மூன்றிலும் உங்கள் மீது உங்கள் மேலதிகாரி அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து இருக்க வேண்டும் இல்லையா?
நேர்மை: எந்த ஒரு அமைப்பிலும் நிறுவனத்திலும் மேலதிகாரி பணியாளாரின் உறவின் அடிப்படை நேர்மையாகத்தானே இருக்க முடியும், இருக்க வேண்டும். ஒரு பெரிய பொறுப்பைப் பெறுவதற்கு முதலில் நீங்கள் மேலதிகாரியிடம் நாணயமானவன் என்ற நம்பிக்கையைப் பெற்று இருக்க வேண்டும்.
ஆனால் இன்றைய வாழ்க்கையில் நீங்கள் நேர்மையாளராக இருந்தால் மட்டும் போதாது. மற்றவர்கள் பார்வையில் நேர்மையாளராகத் தோற்றமளிப்பதும் அவசியம். இதற்கு முக்கியத் தேவை வெளிப்படைத் தன்மையே.உங்களிடம் பணப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு திட்டமிட்டதை விட அதிகம் செலவாகிவிட்டால் அதற்கான விளக்கத்தை மேலதிகாரி கேட்காவிட்டாலும் கூட
நீங்களே வலியசென்று சொல்லிவிடுங்கள். நான் நேர்மையாகத் தேவையானதுக்கு செலவிட்டேன் என்று அசிரத்தையாக இருந்து விடாதீர்கள். ஓ, அவர் நெருப்பு மாதிரி, எதிலும் எப்பொழுதும் நாணயமானவர் என்று பெயர் எடுங்கள்.
பற்று: மிக முக்கியமான சந்தேகம்; விசுவாசம் அல்லது பற்று குறித்தது. உங்கள் நிறுவனத்தின் பால் நீங்கள் கொண்ட பற்று பற்றியது. இது நேர்மைக்கும் ஒரு படிமேலே. மந்திரிக்கு அரசரிடமும் நாட்டிடமும் விசுவாசம் வேண்டும். பணியாளருக்கு தான் சார்ந்த நிறுவனத்திடம் பற்று வேண்டும். இது செய்நன்றி போன்றதொரு குணம் இல்லையா. இது சொல்லிக்கொடுத்தா வரும்? தாய்பாசமோ, மொழிப்பற்றோ, நாட்டுப்பற்றோ இயற்கையாகவே ஏற்படுபவை. பிறர் சொல்லி வராது.
அடிக்கடி வேலை மாறுபவர்கள் கூட, வேலை செய்யும் வரை அந்த நிறுவனத்திற்கு உண்மையாக உழைக்க வேண்டும்.ஒரு வங்கியின் பொது மேலாளர் அடுத்த வங்கியில் செயல் இயக்குநர் ஆக பதவி உயர்வு பெற்று செல்வாரெனில் அவரது பற்றும் விசுவாசமும் புதிய வங்கியிடம்தானே இருக்க வேண்டும் ;.
திறமை: பணியாளர் குறித்து மேலாளருக்கு வரும் மற்றுமொரு சந்தேகம்; திறமை குறித்தது - இவரால் இப்பணியைச் செய்ய முடியும் - என்பதே! நிறுவனம் புதிய கிளைகள் திறப்பதற்கு ஆள் தேடினால் மேலதிகாரிக்கு உங்கள் பெயர் உடன் நினைவுக்கு வரவேண்டும்.
திறமையை வளர்த்துக்கொள்வதற்கும்; அது குறித்த மேலதிகாரியின் நம்பிக்கையை வளர்ப்பதற்கும் ; முதல்படி உங்களுக்குக் கொடுக்கப்பட்ட செயல்களைச் செவ்வனே கொடுத்த காலத்திற்குள் செய்து முடிப்பதே! அடுத்து நீங்கள் உங்கள் நிறுவனத்தின் சேவைகள் குறித்து முழுவதுமாக தெரிந்து கொள்ளுங்கள். நாளை வரக்கூடிய சவால்களையும் பிரச்சினைகளையும் சந்திப்பதற்கான வழிமுறைகளையும் உங்கள் மேலதிகாரியுடன் பேச சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது சொல்லுங்கள்.
புத்தகம் படித்தே நீச்சல் கற்றுக்கொள்ள முடியாதே. மற்றவர் ஏற்க அஞ்சும் தயங்கும் கடினமான பணிகளை நீங்கள் தானாக முன்வந்து ஏற்றுக்கொண்டாலே நம்பிக்கை பெருகும். திருப்தி என்பது எதிர்பார்ப்பைப் பொறுத்தது தானே. எனவே மேலதிகாரியை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் வண்ணம் எடுத்துக்கொண்ட நேரம் குறையட்டும். சாதனை கூடட்டும், நம்பிக்கை தானே வரும்!
சந்தேகம் வந்தால்:
வேலை செய்யும்பொழுது சிறுசிறு தவறுகள் ஏற்படுவது இயற்கையே. அது உங்கள் மேலதிகாரிக்கும் தெரியும். பொறுத்துக் கொள்வார். ஆனால் பெரிய தவறு செய்து விட்டால் பொறுக்க மாட்டார். மேலும் சந்தேகம் எனும் விதையை விதைக்கக்கூடாது. சிறியதான சந்தேகம் நாளடைவில் பெரியதாய் வேர்விட்டு வளர்ந்து விடும்.
எங்கெல்லாம் சந்தேகம் வர வாய்ப்பு இருக்கின்றது என்று நீங்கள் சந்தேகப்பட்டுக் கொண்டே இருங்கள். அதற்கான எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவிடுங்கள்! மேலதிகாரியின் ஆழமான அசைக்க முடியாத நம்பிக்கையைப் பெறுங்கள்..
அதனால் பதவி நிச்சயம் தப்பும்! பதவி உயரவும் செய்யும்!! பொய்யாமொழிப் புலவரின் மெய்யான வார்த்தைகள் இதோ.
போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது.
- somaiah.veerappan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT