Last Updated : 21 Aug, 2017 11:21 AM

 

Published : 21 Aug 2017 11:21 AM
Last Updated : 21 Aug 2017 11:21 AM

முன்னுதாரணத்தை இழக்கலாமா இன்ஃபோசிஸ்?

நமக்கு அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தால் தொல்லை இல்லை. ஆனால் நம்முடைய தனிப்பட்ட சாதனைகள் மீது கர்வமாக (இகோ) இருக்கிறோம். நம்மை விட சிறப்பாக ஒருவர் செயல்படுகிறார் என்றால் அதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ இதைச் சொன்னவர் இன்ஃபோசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தி.

கடந்த ஆண்டு மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்த கருத்தினை உதிர்த்தார். இதில் துரதிர்ஷ்டம் என்னவென்றால் அவர் பிறருக்குக் கூறிய ஆலோசனைகளை அவரே பின்பற்றவில்லை என்பதுதான்.

நிறுவனம் குறித்து பொதுவெளியில் தொடர்ந்து விமர்சிப்பதை வழக்கமாக வைத்திருந்தார் மூர்த்தி. இந்த நிலையில் தன்னுடைய நண்பர்களிடம் பகிர்ந்து கொண்ட கருத்தை ஆகஸ்ட் 18-ம் தேதி பிஸினஸ் நாளிதழ் ஒன்று தலைப்பு செய்தியாக வெளியிட்டது.

அதாவது விஷால் சிக்கா தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக (சிடிஒ) இருக்க முடியுமே தவிர, தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) இருக்க முடியாது என நண்பர்களிடம் கூறிய கருத்தை பிஸினஸ் நாளிதழ் தலைப்பு செய்தியாக வெளியிட்டது. அன்று காலையே விஷால் சிக்கா ராஜினாமா செய்துவிட்டார்.

சிக்கல் எப்போது தொடங்கியது?

விஷால் சிக்கா பொறுப்பேற்றவுடன்தான் இன்ஃபோசிஸில் சர்ச்சைகள் தொடங்குகின்றன என நினைக்கத் தேவையில்லை. நிறுவனத்துக்கு 2011-ம் ஆண்டே சிக்கல் தொடங்கியது. அப்போது தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த கிரிஷ் கோபாலகிருஷ்ணன் விலகி அடுத்த தலைமைச் செயல் அதிகாரியாக எஸ்.டி. சிபுலால் பொறுப்பேற்றார். அதாவது நிறுவனத்தின் ஒவ்வொரு நிறுவனர்களும் அடுத்தடுத்து தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்தனர்.

கிட்டத்தட்ட மன்னாராட்சி போல ஒவ்வொருவராக தலைமை பொறுப்புக்கு வருகின்றனர் என விமர்சனங்கள் எழுந்தன. தவிர 2011-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை சிபுலால் தலைமையிலான நிர்வாகத்தின் மீது அதிக சர்ச்சைகள் எழுந்தன. போட்டி நிறுவனங்களிடம் சந்தையை இழந்தது. முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறைந்தது.

ஏற்கெனவே நிறுவனர்கள் ஒவ்வொருவராக தலைமை பொறுப்புக்கு வருவது விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த சிக்கலை சமாளிக்க 2013-ம் ஆண்டு நிறுவனத்தின் செயல் தலைவராக நாராயண மூர்த்தி மீண்டும் அமர்ந்தார். அடுத்த ஒரு ஆண்டில் விஷால் சிக்காவை தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் உட்கார வைத்துவிட்டு வெளியேறினார். தினசரி பொறுப்புகளில் இருந்து விலகினாலும் நிறுவனத்தின் மீதான பற்றை விடவில்லை.

தற்போது விஷால் சிக்கா ராஜினாமா செய்துவிட்டார். இடைக்கால தலைமைச் செயல் அதிகாரியாக யூ.பி.பிரவீண் ராவ் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். வரும் மார்ச் வரை செயல் துணைத் தலைவராக விஷால் சிக்கா தொடருவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை நாராயண மூர்த்தி குற்றம் சுமத்தி வரும் போதெல்லாம், ஓரளவுக்கு மையமாக பேசி வந்த இயக்குநர் குழு இந்த முறை, நேரடியாக நாராயண மூர்த்தியை எதிர்த்தும், விஷால் சிக்காவுக்கு ஆதரவாகவும் பேசி இருக்கிறது.

விஷால் சிக்கா ராஜினாமா செய்ததை அடுத்து இன்ஃபோசிஸ் பங்கு 10 சதவீதம் வரைக்கும் சரிந்தது. இப்போதைக்கு பங்குகளை திரும்பி வாங்கும் அறிவிப்பு மட்டுமே இன்ஃபோசிஸ் குறித்து கூறுவதற்கு நல்ல செய்தியாக இருக்கிறது.

தனிப்பட்ட முறையில் விஷால் சிக்காவின் செயல்பாடுகள் மீது எந்த குறையும் கூறவில்லை. நிறுவனத்தில் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை என்பதைத்தான் மீண்டும் மீண்டும் கூறுகிறேன் என நாராயண மூர்த்தி விளக்கம் அளித்திருக்கிறார். தவிர தான் கூறிய எந்த குற்றச்சாட்டுக்கும் இதுவரை பதில் கிடைக்கவில்லை, ஆனால் இயக்குநர் குழு தனிநபரை பாதுகாப்பதில் குறியாக இருக்கிறது. விஷால் சிக்கா ராஜினாமாவுக்கு என் மீது குற்றம் சுமத்துவது சரியல்ல. சரியான நேரத்தில் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்பேன் என நாராயண மூர்த்தி எரிகிற தீயில் மேலும் எண்ணெய்யை ஊற்றி இருக்கிறார்.

தலைமைச் செயல் அதிகாரி என்பவர் இயக்குநர் குழுவுக்கு மட்டுமே பதில் கூற கடமைப்பட்டவர். இதில் நிறுவனர்கள் ஆதிக்கம் செலுத்துவதும் கூட விதிமீறல்தான் என்னும் கருத்துகள் எழுந்திருக்கின்றன.

அடுத்து சிஇஓ யார்?

ஐடி நிறுவனங்களின் அபரிமிதமான வளர்ச்சி கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. இரட்டை இலக்க வளர்ச்சி என்பதே சாதனையான விஷயம் என்கிற நிலைமையில் ஐடி நிறுவனங்கள் உள்ளன. இந்த நிலையில் இவ்வளவு சர்ச்சைக்கு பிறகு புதிய தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்க யார் விரும்புவார்கள். விஷால் சிக்காவுக்கு ஏற்பட்ட நிலைமை அவர்களுக்கு ஏற்படாதா என்னும் கேள்விகள் இருக்கின்றன? (விஷால் சிக்கா பணியாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் மூர்த்தி என்னும் பெயரையே குறிப்பிடவில்லை. இதிலிருந்து அவரது பாதிப்பை புரிந்துகொள்ள முடியும்)

தவிர மீண்டும் நந்தன் நிலக்கேணியை தலைமைச் செயல் அதிகாரியாக கொண்டு வரவேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இவை எல்லாம் எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை. இன்னும் ஒரு படி மேலே சென்று, ஒட்டு மொத்த இயக்குநர் குழுவும் ராஜினாமா செய்ய வேண்டும். நிறுவனர்கள் மற்றும் நிறுவன முதலீட்டாளர்கள் இணைந்து புதிய இயக்குநர் குழுவை உருவாக்க வேண்டும் என்னும் விபரீத யோசனைகளை வழங்கி இருக்கிறார் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி டி.வி .மோகன்தாஸ் பாய்.

தற்காலிக தலைமைச் செயல் அதிகாரி பிரவீண் ராவ் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்னும் தகவல்களும் உலா வருகின்றன. இவரது திறமையை மறுக்கவில்லை. ஆனால் 2013-ம் ஆண்டு வரை இப்படி ஒருவர் இருக்கிறார் என்பதே பலருக்கும் தெரியாது. 2013-ம் ஆண்டு நாராயண மூர்த்தி மீண்டும் நிறுவனத்துக்கு வந்த போது இருந்த நெருக்கடியான சூழலால் அசோக் வெமுரி, பிஜி ஸ்ரீனிவாஸ், மோகன்தாஸ் பாய் உள்ளிட்ட முக்கியமான உயரதிகாரிகள் வெளியேறினர். இதனால் உருவான இடைவெளியால் பிரவீண் ராவ் வெளியே தெரிந்தார் என்கிற கருத்தும் இருக்கிறது.

விஷால் சிக்கா செயல்பாடு

விஷால் சிக்கா மீது நாராயண மூர்த்தி கூறும் விமர்சனங்கள் இருந்தாலும், அவரது செயல்பாடுகள் மோசம் இல்லை என்பதையே தகவல்கள் உணர்த்துகின்றன. புதிய வாடிக்கையாளர்கள், பணியாளர்களை பயன்படுத்தும் விகிதம், பணியாளர் வெளியேறும் விகிதம் போன்றவை இவரது தலைமையில் மேம்பட்டிருக்கிறது. அதேபோல 2020-ம் ஆண்டுக்கு 2,000 கோடி டாலர் நிறுவனமாக மாற்றுவேன் என்று வழங்கிய வாக்குறுதியை செயல்படுத்த முடியவில்லை.

தவிர பனாயா நிறுவனத்தை கையகப்படுத்திது, ராஜிவ் பன்சாலுக்கு வெளியேறும் சலுகை வழங்கியது போன்ற விமர்சனங்களும் இருக்கின்றன. ஆனால் பொதுவெளியில் தொடர்ந்து விமர்சிப்பது, தான் ஆடாவிட்டாலும், தன் தசை ஆடும் என்பதே இது காட்டுகிறது.

கஷ்டப்பட்டு உருவாக்கிய நிறுவனம் என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் நிறுவனத்தை பட்டியலிட்ட பிறகு பாதி தொடர்பு அறுபடுகிறது. நிறுவனத்தில் இருந்து வெளியேறிய போது, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குதாரர் என்பதை தாண்டி எந்த உரிமையும் இல்லை. இந்தியாவில் தொழில்முனைவுக்கு முன்னோடியாக, எடுத்துக்காட்டாக கூறப்பட்ட இன்ஃபோசிஸ், தற்போது சர்ச்சைகளுக்கு எடுத்துக்காட்டாக இருப்பது காலத்தின் கோலம்.

ஒரு கட்டத்தில் அடுத்த தலைமுறைக்கு வழி விட்டு நகர்ந்து செல்வதுதான் அழகு. இந்திய தொழில் நிறுவனங்கள் இதனை அமல்படுத்த வேண்டும். இன்ஃபோசிஸ் விவகாரம் குறித்து ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தது போல மோசமான மாமியராக நடந்துகொள்ள கூடாது

-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x