Published : 24 Jul 2017 10:55 AM
Last Updated : 24 Jul 2017 10:55 AM
‘நீரில் நீந்திக் கொண்டிருக்கும் மீன் எப்பொழுது நீரை அருந்தும் என்று அறிவது எவ்வளவு கடினமோ, அது போல அரசாங்க அதிகாரிகள் எப்பொழுது கையாடல் செய்கிறார்கள் என்பதை அறிவதும் கடினம்’ என்கிறார் சாணக்கியர் !
அண்ணே, ‘இங்கே நிறைய இருக்கிறது, நாம் எடுப்பது யாருக்கும் தெரியப் போவது இல்லை’ எனும் எண்ணத்தினால் எடுக்கலாமா? எடுக்கக் கூடாதென்பது அடிப்படைக் கொள்கையாக இருக்க வேண்டுமல்லவா? நேர்மையாக இருப்பதில் சின்ன விஷயம், பெரிய விஷயம் என்றெல்லாம் இருக்கிறதா என்ன? ‘சில இடங்களில், சில நேரங்களில் மட்டும் கொஞ்சம் அப்படி இப்படி இருப்பேன் என்றால் எப்படி?’ குண்டூசி, காகிதம் போன்ற அலுவலகப் பொருட்களை வீட்டு உபயோகத்திற்கு எடுத்துச் செல்வதைப் பலர் தவறாக நினைப்பதே இல்லை!
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதும் ஒரு வகையில் கையூட்டிற்கு இணையானது தானே? வங்கிக் கோட்ட மேலாளர் ஒருவர். குடும்பம் பெங்களூருவில், பணி திருச்சியில். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தன் பொறுப்பில் இயங்கும் 70 கிளைகளை ஆய்வு செய்ய வேண்டும்.
பக்கத்திலிருக்கும் தஞ்சாவூருக்கும் கரூருக்கும் போகவே மாட்டார் அவர்! ஆனால் பெங்களூர் செல்லும் வழியிலிருக்கும் நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி,ஓசூர் என மாறிமாறி திக் விஜயம் செய்து, அங்கே தலையைக் காட்டி விட்டு, தன் வீட்டிற்கு ஓடி விடுவார்!
விதிகளின்படி அதில் தவறில்லை என்றே தோன்றலாம்.ஆனால் தர்ம நியாயப்படி? பொதுப் பணம் என்றால் தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்பது அரசாங்க அதிகாரிகளிடம் மட்டுமில்லைங்க, பொதுவாழ்வில் ஈடுபடும் யாரிடமும் இருக்க வேண்டுமில்லையா?
‘இது பங்குதாரரின் பணம், நாம் அதன் காப்பாளர். அதை வீணடிக்கக் கூடாது’ எனும் அணுகுமுறை அந்த நிறுவனங்களின் இயக்குநர்களிடமும் இருக்க வேண்டுமில்லையா?
எனது நண்பர் ஒருவர் புதிதாய் கம்பெனி தொடங்கினார். மும்பைக்குச் சென்றால், ஞாயிற்றுக் கிழமைகளில் சாதாரண ஹோட்டலில்தான் தங்குவார்.திங்களன்று வெளிநாட்டவரிடம் வர்த்தகம் குறித்துப் பேச வேண்டுமெனில் , நட்சத்திர விடுதிக்கு மாறிக் கொள்வார்!
அவர் நிர்வகிக்கும் கோவிலுக்குப் பொது நிதியிலிருந்து பொருட்கள் வாங்கினால் கூட, விடாமல் பேரம் பேசுவார்! தன் பணமோ,பொதுப் பணமோ அவரது அணுகுமுறை ஒரே மாதிரியாகத் தான் இருக்கும்!
‘நேர்மை என்பது நாம் கழிவறையை உபயோகப்படுத்தி வெளிவரும் பொழுது, அடுத்து வருபவர் நலன் கருதி தண்ணீர் ஊற்றி சுத்தமாக வைத்து விட்டு வருவது’ என்பார் அவர்!
நமது குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம், ஒரு முறை கோயம்புத்தூர் சௌபாக்யா நிறுவனத்தின் விழா ஒன்றிற்குச் சிறப்பு விருந்தினராகச் சென்று இருந்தாராம்.விழாவில் நினைவுப் பரிசாக அவருக்கு அவர்களது தயாரிப்பான மாவரைக்கும் இயந்திரத்தைப் பெருமையுடன் அளித்தார்களாம்.
தனக்கு அது உபயோகம்தான் என்று பெற்றுக் கொண்ட கலாம், உடனே அதற்கான விலையான ரூ 4,850க்கு ஒரு காசோலை எழுதிக் கொடுத்து விட்டாராம்!
ஆனால், நிறுவனத்தார் அந்த காசோலையைப் பணமாக்க மனமில்லாமல் ஒரு பொக்கிஷமாகப் பாதுகாத்து வைத்துக் கொண்டார்களாம்! வங்கியில் காசோலை வரவில்லை எனத் தெரிந்து கொண்ட பின், குடியரசு மாளிகையிலிருந்து அதனைக் காசாக்குமாறு தொலைபேசி அழைப்புகள் வந்தனவாம்.
அந்நிறுவனத்தினர் வேறு வழியின்றி காசோலையை வங்கிக்கு அனுப்பி பணம் பெற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று.
ஆனால் அதற்கு முன்பு அந்த காசோலையை ஒரு நகல் எடுத்து , அதை விலை மதிக்க முடியாத பொருளாய்ப் பேணிப் பாதுகாத்து வருகின்றனர் என்பதைச் சொல்லணுமா என்ன?
உலகின் வெவ்வேறு நாடுகளில் உள்ள லஞ்சம் குறித்து, பெர்லினைத் தலைமையிடமாகக் கொண்ட `Transperancy International ' எனும் நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது. உலக வங்கியிலிருந்தும் ,உலகப் பொருளாதாரப் அமைப்பிலிருந்தும் ,மற்ற நிறுவனங்களிலிருந்தும் புள்ளி விபரங்களைச் சேகரித்து , அவர்கள் இந்த மதிப்பீட்டு அட்டவணையைத் தயாரிக்கிறார்களாம்.
லஞ்சமே சுத்தமாக இல்லையென்றால் 100க்கு 100 மதிப்பெண்கள். அவர்களின் 2016ன் அறிக்கையின் படி நியூசிலாந்தும் டென்மார்க்கும் 90 மதிப்பெண்களுடன் முதலிடத்தில்!
ஐயா,அதில் இந்தியாவின் மதிப்பெண் 40 தான்.எனவே தரவரிசையில் நாம் 79-வது இடத்தில்! ஆனால் சீனாவிற்கும் பிரேசிலுக்கும் நம்மைப் போலவே 40 மதிப்பெண்கள்! ஆமாங்க, உண்மை என்னவென்றால் இது உலகளாவிய பிரச்சினை! தனிமனிதனின் கொள்கை, கோட்பாடு மாறும் வரை எங்கும் இதே கதை தான்!
‘நேர்மையின் பலன் வெளி உலகம் சம்பந்தப்பட்டது இல்லை. அது பெரும்பாலும் ஒருவரது உள்மனம் சார்ந்தது. சுயமரியாதை, கௌரவம், தான் செய்தது சரியே எனும் தன்னம்பிக்கை, பெருமை ஆகியவை தான் அவை’ என்று அமெரிக்க சமூக சேவகி லாரா சொல்கிறார்!
அனுபவித்துப் பார்த்தால்தான் அது புரியும்!
-somaiah.veerappan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT