Last Updated : 03 Jul, 2017 10:43 AM

 

Published : 03 Jul 2017 10:43 AM
Last Updated : 03 Jul 2017 10:43 AM

சபாஷ் சாணக்கியா: என்ன படிக்க வைக்கலாம்...?

சமீபத்திய செய்தி படித்தீர்களா? அமீர்கானின் `டங்கல்' படத்தின் வசூல் ரூ 2,000 கோடியைத் தாண்டி விட்டதாம்!

இந்தியத் திரைப்பட வரலாற்றில் இது ஒரு புது மைல்கல்! இந்தப் படம் சீனாவிலும் கூடச் சக்கை போடு போடுகிறதாம்! தமிழில் வெளிவந்ததே பார்த்தீர்களா, இல்லையா? பிலிம்பேஃர் அவார்டுகளில், சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த சண்டைப் பயிற்சியாளர் என முக்கியப் பரிசுகளை அது அள்ளிக் கொண்டு போகக் காரணம் என்ன?அந்தப் படத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது ?

மகாவீர் சிங் (அமிர் கான்) ஹரியாணா மாநிலத்தின் ஒரு கிராமத்தில் வசிக்கும் மல்யுத்த வீரர். மல்யுத்தப்போட்டியில் இந்தியாவுக்காகத் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டுமென்பது அவரது கனவு. அவருக்கு அடுத்தடுத்து பெண் குழந்தைகளே பிறப்பதால் மனம் தளர்கிறார்.ஆனால், தன்னைப்போல சண்டையிடும் திறன் தன் மகள்கள் கீதாவுக்கும் பபிதாவுக்கும் இயல்பாக இருப்பதைத் தற்செயலாக உணரும் பொழுது மீண்டும் அந்தக் கனவின் மீதான நம்பிக்கை துளிர்விடுகிறது!

கிராமத்தினரின் ஏளனப் பேச்சுகளையும் பார்வைகளையும் மீறி அவர் தன் மகள்களுக்கு மல்யுத்தப் பயிற்சி கொடுக்கிறார். பயிற்சிக்காக அச்சிறுமிகளை ஆண்களுடனும் கூட மல்யுத்தப் போட்டிகளில் கலந்து கொள்ள வைக்கிறார். மகாவீரின் தங்கப் பதக்கக் கனவு அவருடைய மகள்களால் எப்படி நனவாகிறது என்பதுதான் கதை!

இதில் காணக்கிடைக்கும் கருத்துகள் இரண்டு. இயற்கையிலேயே ஆர்வம் இருக்கும் ஒரு விளையாட்டில் ஈடுபடும் பொழுது கிடைத்தற்கரிய வெற்றி கூடக் கிடைத்து விடும் என்பது ஒன்று.அதற்கான வாய்ப்பை, சூழ்நிலையை, ஏற்பாடுகளை பெற்றோர் செய்து தர வேண்டும் என்பது மற்றொன்று!

அதில் பல வசனங்கள் கூர்மையானவை, மனதைத் தைப்பவை,சாதிக்க வேண்டும் எனும் தீயை நமது அடிவயிற்றில் மூட்டுபவை! `தங்கப்பதக்கங்கள் ஒன்றும் மரத்தில் காய்ப்பதில்லை’ என்கிறார் மகாவீர்.உண்மை தானேங்க? உழைக்கணும், உழைக்கணும், மிகத் தீவிரமாக உழைக்கணும் இல்லையா? அத்துடன் தீவிர பயிற்சி அளிக்க சரியான பயிற்சியாளரும் இருக்கணும்! அப்ப வெற்றிக்கனி நிச்சயமுங்க!

`வெள்ளிப் பதக்கம் போதாது. அதை யார் வாங்கினார் என்பதை மக்கள் மறந்து விடுவார்கள்!தங்கம் வாங்கணும்.அப்பத்தான் சரித்திரத்தில் இடம் பெறலாம்!'என்கிறார் ஒரு இடத்தில்! எவ்வளவு நல்ல கருத்து! நீங்களே சொல்லுங்கள்.நிலவில் முதலில் கால் பதித்தவர் யாரென்றால் உடனே நீல் ஆர்ம்ஸ்ட்ராங் என்பீர்கள்.இரண்டாவதாக கால் வைத்தவர் யாரென்று யாரேனும் அலட்டிக் கொள்கிறோமா?

அது சரி, நம் எல்லோருக்கும் நம் குழந்தைகள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்கிற எண்ணம் இருப்பது இயற்கைதான். ஆனால் அதற்காக குழந்தையின் வயதிற்கும் இயல்புக்கும் ஒவ்வாதவற்றை அவர்கள் மேல் திணித்தால் எப்படி?

பல வருடங்களுக்கு முன்பு தீபாவளி மலர் ஒன்றில் எழுத்தாளர் சுஜாதாவின் சித்திரக் கதை ஒன்று படித்ததாக ஞாபகம். ஒரு மூன்று வயது சிறுவன் பொம்மைகள் வைத்து விளையாடிக் கொண்டு இருப்பான். அவனது அம்மா அவனைப் பிடித்து இழுத்து நர்ஸரி ரைம்ஸ் சொல்லச்சொல்லிப் படுத்துவாள்!

அடுத்த படம். சிறுவனுக்கு ஐந்து வயது. நண்பர்களுடன் கண்ணாமூச்சி விளையாடுவான். அவனது அப்பா `கிரிக்கெட் கற்றுக் கொள்ளணும், வா’ என இழுப்பார்! 10 வயதில் அவன் கிரிக்கெட் விளையாடினால், அம்மா விடமாட்டாள். `IIT கோச்சிங்கிற்குப் போ' என அனுப்பி வைப்பாள்! இப்படியே அவனது ஒவ்வொரு பருவத்திலும் அவனுக்குப் பிடித்தது எதையும் செய்ய விடமாட்டார்கள்!

இன்றைய சமுதாயத்தில் படிப்பிற்கும், தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களுக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம் பல குழந்தைகளின் உண்மையான திறமைகளை வெளிக் கொணர விடாமல் செய்து விடுகிறது இல்லையா? ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ், மைக்ரோசாஃப்டின் பில் கேட்ஸ் என்று பலரும் சுமாராக படித்தவர்கள்தானே? ஆனால் வாடிக்கையாளரின் நாடித் துடிப்பை அறிந்ததால் அளப்பரிய வெற்றி கண்டார்களே!

எல்லாம் சரி, இது குறித்து சாணக்கியர் என்ன சொன்னார் என்கின்றீர்களா? எல்லோருக்கும் தெரிந்ததுதான். குழந்தைகளுக்கு உள்ள வாய்ப்புகளை எடுத்து முன் வைப்பது மட்டுமே நம் வேலை. அவர்களது திறமைகளை வளர்த்துக்கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்தால் போதும். `இதைத் தான் செய்யணும்’ என்று கட்டாயப்படுத்த வேண்டாம்! `அறிவுள்ளவன் தனது குழந்தைகளுக்கு வெவ்வேறு வித்தைகளையும் கற்றுக் கொள்ளும் வாய்ப்பைத் தேடித் தருவான்' என்கிறார் சாணக்கியர்!

- somaiah. veerappan@gmail. com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x