Published : 10 Jul 2017 10:58 AM
Last Updated : 10 Jul 2017 10:58 AM
நீங்கள் பணிபுரியும் இடத்தில் உங்களுக்கு யாரைக் கண்டால் சுத்தமாகப் பிடிக்காது? நாணயமற்றவர்களையா?ஆமாங்க நேர்மையற்றவர்களை, கையூட்டுப் பெறுபவர்களை நாம் எல்லோருமே வெறுக்கத் தானே செய்வோம்? அது சரி,எந்தப் பணியையும் விருப்பத்துடன் செய்யாமல், தட்டிக் கழித்துக் கொண்டு, ஏதாவது நொண்டிச் சாக்கு சொல்லிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்தால் ஆத்திரம் ஆத்திரமாக வருகிறதா?
எனது நண்பர் ஒருவர். டெல்லியில் ஒரு வங்கியின் மிகப்பெரிய கிளை ஒன்றின் மேலாளர். ஆயிரம் கோடி, ஐநூறு கோடி எனும் அளவுகளில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்கள் பலர் அக்கிளையில் இருந்தனர்! வங்கிகள் ஆயுள் காப்பீட்டுப் பாலிசிகளை விற்கத் தொடங்கிய காலம் அது. அதாவது எல்ஐசி, மெட்லைப் போன்ற நிறுவனங் களின் ஆயுள் காப்பீட்டைத் தமது வாடிக்கையாளர்களுக்கு விற்பார்கள்.
அது மட்டுமில்லை. ஓரியன்டல்இன்ஷூரன்ஸ், ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ் போன்ற பொதுக் காப்பீட்டு (Gen eral insurance) நிறுவனங்களின் தீ (fire), வெள்ளம் முதலியவற்றிற்கான காப்பீட்டையும், மருத்துவக் காப்பீட்டையும்,கால்நடைகளுக்கான காப்பீட்டையும் கூட வங்கிகள் விற்கத் தொடங்கி இருந்தன.
இவற்றை விற்பதில் கிடைக்கும் கமிஷன் வங்கியின் நேரடி லாபம்! இந்த விதமான வர்த்தகம் `Bankassurance’ என்று அழைக்கப்படுகிறது. இதில் வாராக்கடன் போல நட்டம் வர வாய்ப்பு இல்லை.எனவே பல வங்கிகள் இதில் இறங்கி நல்ல பணம் பார்த்து வந்தன!
நம்ம மேனேஜருக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. ஆமாம், பிடிபடவும் இல்லை! இருக்கிற வேலையை விட்டுவிட்டு வேண்டாத வேலையில் இறங்குவதாக அங்கலாய்ப்பார். உண்மை என்னவென்றால் வங்கியின் வாடிக்கையாளர் ஏதோ ஒர் இடத்தில் தனது தொழிற்சாலைக்கும், வாகனங்களுக்கும் காப்பீடு எடுக்கத்தானே வேண்டும்? அதை வங்கி மூலம் எடுத்தால் வேலை சுலபமாகி விடும் தானே?வங்கிக்கும் லாபம் தானே?
இதனை வட்டிசாரா வருமானம் (non interest income) என்பார்கள். அண்ணே, சொன்னால் நம்ப மாட்டீர்கள்.கடன் கொடுப்பதை விடச் சில சமயங்களில் இதில் லாபம் அதிகம்! ஒருவருக்கு வங்கி ஒரு கோடி ரூபாய் 12% வட்டியில் கடன் கொடுப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். சராசரியாக 7%க்கு பணத்தை வாங்கி , மற்ற சம்பளம் போன்ற செலவினங்களைச் சேர்த்தால் கையடக்கமே 10% ஆகிவிடும்.
வாராக்கடன்களுக்கு பணம் ஒதுக்கியபின், 1% க்கு மேல் தேறுமா? அதாவது ஒரு கோடி கடன் கொடுத்து ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் லாபம்! இதே ஒரு கோடி காப்பீட்டை வங்கி விற்றால் அதைவிட சில மடங்கு லாபம் கிடைக்கும். என்ன பொதுவாக கடன் என்றால் வாடிக்கையாளர் நம்மிடம் வருவார்.
காப்பீடு விற்கணும் என்றால் வங்கியாளர்கள் தான் வாடிக்கையாளரைச் சுற்றிச் சுற்றி வர வேண்டும்! அதே காலகட்டத்தில்,சென்னையில் அதே மாதிரியான ஒரு பெரிய கிளையில் வேறு ஒரு மேலாளர்.மகா சுறுசுறுப்பு. வங்கிக்கு லாபம் வந்தால் தனக்கே வந்த மாதிரி மகிழ்வார்.அவருக்குத் தினமும் புதிது புதிதாய் ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும்.
இப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்தால் விடுவாரா? 'என் பணி வங்கிக்கு லாபம் பார்ப்பதே' என்பார் சென்னை மேலாளர் வாடிக்கையாளர்களுக்காக காப்பீட்டு நிறுவனங்களிடம் வாதிட்டு பிரிமியத்தில் நல்ல தள்ளுபடி வாங்கிக் கொடுப்பார்! ஆனால் IRDA,RBI விதிமுறைகளை எப்பவும் மீற மாட்டார்!
அப்புறம் என்ன? உட்கார்ந்த இடத்தில் கடனே கொடுக்காமல் சுமார் 50 லட்சம் அதிகப்படி வருமானம் வங்கிக்கு.எதிர்பார்ப்புக்கு மேல் செய்வது( exceeding expectation) அவரது தனித்தன்மை!
டெல்லி மேலாளரும் இதை போல முயன்று இருந்தால்,இன்னுமொரு 50 லட்சம் வங்கிக்கு வருமானம் கிடைத்திருக்குமே! ஆனால் அவர் முயலவே இல்லை! வங்கிக்கு 50 லட்சம் நட்டம் தான் என்று யாரும் சொன்னால்,அது தப்பா என்ன?அண்ணே,பல நிறுவனங்களில் அரசாங்கத்தில் இதே நிலைதான்.
என்னென்ன நல்ல முயற்சிகள் செய்யலாமோ,எல்லாவற்றையும் செய்ய மாட்டார்கள். வாய்ப்புகளைப் பயன் படுத்த மாட்டார்கள். ஆனால் தங்களை நாணயமானவர் என்று வேறு சொல்லிக் கொள்வார்கள்! ஊழியர் திறமைக் குறைவாகவோ,உற்சாகமின்றியோ,உத்வேகமின்றியோ வேலை செய்தால், அவர் பணிபுரியும் அரசுக்கும் நிறுவனத்துக்கும் நேரும் இழப்பு மிகவும் கணிசமானது. தவிர்க்கப்பட வேண்டியது! இது மேலோட்டமாகப் பார்த்தால் தெரியாது. ஆனால், புத்திக்கூர்மையாளரான சாணக்கியருக்குத் தெரியாதா? அவர் சொல்வதைக் கேளுங்கள்.
`மன்னனுடைய வருவாய் குறைவதற்கு எவன் காரணமாக இருக்கிறானோ, அவன் மன்னனுடைய பொருளை எடுத்துக் கொண்டவனாகவே கருதப்படுவான்!’
- somaiah. veerappan@gmail. com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT