Published : 17 Jul 2017 11:01 AM
Last Updated : 17 Jul 2017 11:01 AM
முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.
(எம்.சி. சம்பத், தமிழக தொழில்துறை அமைச்சர், சட்டப் பேரவையில் விளக்கம் – ஜூன், 2017).
முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் மிகவும் பின்தங்கிய மாநிலமாக உள்ளது.
(அமிதாப் காந்த், சிஇஓ, நிதி ஆயோக். 11.07.2017)
ஒரே விஷயம் எத்தனை முரண்பட்ட தகவல்.
தமிழகத்திலிருந்து தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களுக்குச் செல்வது தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பிய புகாருக்கு, தமிழகம் முதலீடுகளை ஈர்ப்பதில் முன்னோடியில் விளங்குகிறது என்று விளக்கம் அளித்தார் தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத்.
ஆனால் நிதி ஆயோக் சிஇஓ அமிதாப் காந்த் வெளியிட்ட அறிக்கையில் 2011-12-ம் ஆண்டில் தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சி 12.5% என்றும் 2016-17-ல் இது 1.64% ஆக சரிந்து விட்டதை புள்ளி விவரங்களுடன் சுட்டிக் காட்டியுள்ளார். அண்டை மாநிலங்களான ஆந்திராவில் தொழில்துறை வளர்ச்சி 10.36% ஆகவும், புதிதாகப் பிறந்த தெலங்கானாவில் 7.1 சதவீத அளவுக்கு தொழில் வளர்ச்சி இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
2015-ம் ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டது. இதில் ரூ.2,42,160 கோடிக்கு 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இதேபோல இரண்டாவது முறையாக பொறுப்பேற்றவுடனேயே 2023 தொலைநோக்கு திட்டத்தை ஜெயலலிதா அறிவித்தார். இத்திட்டம் ரூ. 15 லட்சம் கோடி முதலீட்டில் செயல்படுத்தப்படும் என அறிவித்தார். ஆனால் சமீபத்தில் தமிழகத்துக்கு வந்துள்ள முதலீடுகளின் அளவு ரூ. 26,615 கோடி என தொழில்துறை அமைச்சரே பேரவையில் கடந்த மாதம் அறிவித்துள்ளார்.
ஏன் இந்த நிலை!
தாராளமய பொருளாதாரத்துக்கு இந்தியா மாறிய பிறகு தொழிற்சாலைகளை அமைப்பது குறித்த அனைத்து பொறுப்புகளையும் மாநில அரசு வசமே மத்திய அரசு விட்டுவிட்டது. தனியார் முதலீடுகளை ஈர்ப்பதற்காக மாநிலங்களிடையே போட்டி உருவானது. தொழில்துறையில் வளர்ச்சியை எட்டுவதற்கு மாநில அரசுகள் தொழில் நிறுவனங்களுக்கு வலை வீசத் தொடங்கின.
மிகப் பெரிய அளவில் தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டன. அந்த வகையில் சென்னையை அடுத்த இருங்காட்டுக் கோட்டையிலிருந்து ஸ்ரீபெரும்பூதூர் வரை சிப்காட் உருவாக்கிய தொழிற்பேட்டையில் ஹூண்டாய், செயின்ட் கோபைன் உள்ளிட்ட பல தொழிற்சாலைகள் உருவாயின. பன்னாட்டு தொழில்நிறுவனங்களை ஈர்ப்பதற்கு அந்நிறுவனங்களுக்கு வரிச் சலுகை, தடையற்ற மின்சாரம், தண்ணீர் விநியோகம் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மாநில அரசுகள் செய்து தந்து முதலீட்டாளர்களை ஈர்த்தன.
இருங்காட்டுக் கோட்டையை ஒட்டி அப்படியே விரிவாக்கம் செய்யப்பட்டதுதான் ஒரகடம் பகுதியாகும். ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் தொழில் தொடங்குவதற்கான வசதிகளை தமிழக அரசு செய்யத் தவறியது. ஒரகடத்தைத் தொடர்ந்து தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படவில்லை.
தொழில் தொடங்க ஒற்றைச் சாளர முறை என்று அறிவித்தாலும், ஒவ்வொரு விஷயத்திற்கும் தனித்தனியே அனுமதி பெற வேண்டியிருப்பதும் முதலீட்டாளர்களை பெரும் அவதிக்குள்ளாக்கியது.
தொழில் துறைக்கு தங்களது உற்பத்தி பொருள்களை தங்கு தடையின்றி கொண்டு செல்லவும் மூலப் பொருள்களை இறக்குமதி செய்யவும் துறைமுகம் அவசியம். சென்னையில் இரண்டு துறைமுகங்கள் (சென்னை, எண்ணூர்) உள்ளன. ஆனால் ஜப்பான் மேம்பாட்டு வங்கியின் நிதி உதவியோடு தொடங்கப்பட்ட எண்ணூர் – மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் பாதியிலேயே ஆட்சியாளர்களால் நிறுத்தப்பட்டது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தியது.
ஒருவேளை இத்திட்டப் பணி தொடர்ந்திருந்தால் இந்நேரம் பறக்கும் சாலைத் திட்டம் முடிவடைந்திருக்கும். நீதிமன்ற தலையீடு காரணமாக இத்திட்டத்தை மீண்டும் தொடர இருக்கின்றனர். ஆனால் இது முடிவடைய எத்தனை காலம் ஆகுமோ தெரியாது. கடலூர் பகுதியில் ரசாயன ஆலைகள் தொடங்குவதற்கு முன்பு முனைப்பு காட்டப்பட்டது. இத்துறையினருக்கு மிகவும் முக்கியமானது கழிவு சுத்திகரிப்பு நிலையமாகும். ஒரு கட்டத்தில் இத்துறையினருக்குத் தேவையான வசதிகள் செய்யப்படாத நிலையில் தொடங்கிய நிறுவனங்களே இன்றளவும் இங்கு செயல்படுகின்றன. புதிதாக ஆலைகள் எதுவுமே உருவாகவில்லை.
இந்தியாவின் டெட்ராய்ட்
தமிழகத்தில் ஹூண்டாய் நிறுவனம், ஃபோர்டு மோட்டார்ஸ் ஆலை தொடங்கப்பட்ட பிறகு இவற்றுக்கு உதிரி பாகங்கள் சப்ளை செய்யும் ஏராளமான நிறுவனங்கள் இங்கு உருவாயின. ஒரகடம் பகுதியில் நிசான் ஆலையும் பிஎம்டபிள்யூ ஆலையும் உருவாயின. ஆட்டோமொபைல் துறையில் இந்தியாவின் டெட்ராய்டாக தமிழகம் திகழ்கிறது என்று ஆட்சியாளர்கள் பெருமையாகக் குறிப்பிட்டனர். ஆனால் இத்துறையினர் எதிர்கொள்ளும் பிரச்சினையைத் தீர்க்க முனையவே இல்லை.
ஆட்டோமொபைலுக்கென்று தனி கொள்கை ஏதும் கிடையாது. தமிழகத்தில் கியா மோட்டார்ஸ் நிறுவனம் தொடங்க 400 ஏக்கர் நிலம் வழங்க தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் அந்நிறுவனம் ஆந்திர மாநிலத்தில் ஆலை அமைக்க முடிவு செய்துவிட்டது.
கரூர், திருப்பூர், ஈரோடு பகுதிகளில் பின்னலாடை உள்ளிட்ட ஜவுளித் தொழில் சிறப்பாக இருந்தாலும் இதை ஊக்குவிக்கும் வகையில் ஜவுளிக்கென சிறப்புக் கொள்கை எதையுமே தமிழகம் வகுக்கவில்லை.
ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சிட்டி தொழிற்பேட்டையில் பல ஆலைகள் தொடங்கப்படுகின்றன. ஆனால் இந்த நகரத்தில் உள்ள ஆலைகள் சார்ந்திருப்பதோ சென்னை, எண்ணூர் துறைமுகத்தைத்தான். இவையிரண்டும்தான் இதற்கு அருகில் உள்ளன.
சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொழில்துறையினரை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக ஸ்ரீ சிட்டி அந்தப் பணியை செய்து முதலீடுகளை ஈர்க்கிறது.
தொழில்துறையினருக்கு என்ன தேவை
புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு முக்கியமாக பெருமளவிலான நிலம் தேவை. விவசாயத்துக்கு பயனற்ற பெருமளவிலான நிலங்களை தொழில் சாலைகள் அமைக்க மாற்ற வேண்டும். அவ்விதமான நிலங்களைக் கையகப்படுத்தி அவற்றை தொழில்துறையினருக்கு அளிக்கும் வசதி அரசுக்கு மட்டுமே உள்ளது. அதேபோல தொழில்துறையினர் இடத்தை பதிவு செய்வதற்கான முத்திரைத்தாள் கட்டணம் 8 சதவீத அளவுக்கு அதிகமாக உள்ளது. இதைக் குறைப்பதன் மூலமும் தொழில் தொடங்க சாதகமான சூழல் உருவாகும்.
மின்சாரம் தடையின்றி கிடைக்க வழி வகைகள் செய்யப்பட வேண்டும். தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும்போது அங்கு 6 வழிப் பாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட வேண்டும். பொதுவாக தொழில் வளர்ச்சி சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சார்ந்ததாகவே உள்ளது. மதுரை போன்ற பகுதிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அங்கு போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் அப்பகுதிகளுக்குச் செல்ல தொழில் நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன.
அனைத்துக்கும் மேலாக தொழிற்சாலைகளின் பிரதிநிதிகள் என தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் தொழிற் கூட்டமைப்புகள் பெரும்பாலும் தொழில்துறை பிரச்சினையை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வதேயில்லை.
உலக அளவில்…
தொழில் புரிவதற்கான சூழல் நிலவும் நாடுகள் பட்டியலை உலக வங்கியின் ஒரு பிரிவு ஆண்டுதோறும் தயாரித்து வெளியிடுகிறது. 190 நாடுகளை ஆய்வு செய்து தயாரிக்கப்பட்ட இந்த பட்டியலில் இந்தியா 130-வது இடத்தில் உள்ளது. முதல் பத்து இடங்களில் நியூசிலாந்து, சிங்கப்பூர், டென்மார்க், தென் கொரியா, நார்வே, இங்கிலாந்து, அமெரிக்கா, ஸ்வீடன், மாசடோனியா ஆகிய நாடுகள் உள்ளன.
தொழில் தொடங்குவதற்கான அளவீடுகள் என 10 நடைமுறைகளை உலக வங்கி கடைப்பிடிக்கிறது. அதில் நடைமுறை, எவ்வளவு காலம் பிடிக்கும், கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி காலம், மின்சாரம் பெறுவதில் உள்ள சிரமம், சொத்து பதிவு செய்வது, கடன் எளிதாகக் கிடைப்பது, முதலீட்டாளர் நலன் காக்கும் நடவடிக்கை, வரி விகிதம், எளிதான வர்த்தக பரிமாற்ற வசதி, ஒப்பந்த விதிகளை கடுமையாக நிறைவேற்ற வகை செய்யும் சட்டம், திவாலானால் அதை விரைந்து தீர்க்கும் நடவடிக்கை உள்ளிட்டவைகள் இதில் முக்கியமானவை. வழக்கறிஞர்கள், தணிக்கையாளர்கள் என 12,500 பேரின் மதிப்பீட்டுக்குப் பிறகே இறுதி பட்டியல் தயாராகிறது.
190 நாடுகளில் இந்தியா 130-வது இடத்தில் இருப்பது சற்று ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கலாம். ஆனால் இந்தியாவில் தமிழகம் கடைசி இடத்துக்கு அருகே நினைக்கும்போதே இதயம் கணக்கிறது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடத்த வேண்டும் என்கிற ரீதியில் இந்த ஆண்டு இறுதியில் ரூ. 75 கோடி செலவில் மாநாடு நடத்தப்பட உள்ளது. மாநாடுகளை நடத்தி, அதிக எண்ணிக்கையில் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி அவை எதுவும் செயல்வடிவம் பெறாமல் போவதால் யாருக்கு என்ன பயன்?
தொடர்புக்கு: ramesh. m@thehindutamil. co. in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT