Last Updated : 24 Jul, 2017 11:28 AM

 

Published : 24 Jul 2017 11:28 AM
Last Updated : 24 Jul 2017 11:28 AM

அழிவின் விளிம்பில்...

கால்நடை சார்ந்த பொருளாதாரம் என்பது வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது. கால்நடைகளை வளர்ப்பது அதன் மூலம் வருவாய் ஈட்டுவது என்ற பொருளாதார நடவடிக்கை நம் முன்னோர்கள் தொடங்கி இன்று வரை நீடித்து வருகிறது. ஆனால் நிலைமை தற்போது தழைகீழாக மாறிவருகிறது. நாளுக்கு நாள் கால் நடைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. குறிப்பாக 2012-ம் ஆண்டு தகவல் படி இந்தியாவில் மொத்தம் உள்ள மாடுகளின் எண்ணிக்கை 19 கோடி. இதில் காளை மாடுகளின் எண்ணிக்கை 6.79 கோடி.

மாறாக பசுக்களின் எண்ணிக்கை 12.30 கோடி உள்ளது. 2007ம் ஆண்டு ஒப்பிடுகையில் 2012-ம் ஆண்டில் மாடுகளின் எண்ணிக்கை 4.1 சதவீதம் குறைந்துள்ளது. மாடுகள் எண்ணிக்கை குறைவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் தற்போது பிரதமர் மோடி எடுத்து வரும் நடவடிக்கைகள் கால்நடைகளை அழிவின் விளிம்புக்கு அழைத்துச் செல்லப் போகிறது.

மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்ததிலிருந்து இன்று வரை மாட்டிறைச்சி சார்ந்த பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே வருகிறது. 2015-ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி நடைபெற்ற தாத்ரி சம்பவம்தான் மாட்டிறைச்சி பிரச்சினையின் தொடக்கம். இந்த நிகழ்வுக்குப் பிறகு மாட்டிறைச்சி ஏற்றுமதி குறைந்தது. இதை உலக சுகாதார நிறுவனமும் சுட்டிக்காட்டியது. அந்த சமயத்தில் மூடி’ஸ் எனும் பொருளாதார மதிப்பீட்டு நிறுவனம் இந்தியா குறித்த தனது அறிக்கையில் `எத்தினிக் டென்ஷன்’ என்ற வார்த்தையை பயன்படுத்தியது. அதாவது இனப் பதற்றம் நீடித்தால் இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று எச்சரித்தது. ஆனால் அப்போது மத்திய அரசு எதையும் காது கொடுத்து கேட்கவில்லை.

அதன் பிறகு கடந்த மே 26-ம் தேதி இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு தடை என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இதன் மூலம் ஏற்படப் போகும் பொருளாதார இழப்புகளை மத்திய அரசு கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இந்த முடிவை அறிவித்தது. அதிலும் குறிப்பாக கிராமப்புற பொருளாதாரமும் அதைச் சார்ந்த தொழில்களும் வெகுவாக பாதிக்கப்படும் என்பதை மத்திய அரசு கருத்தில் கொள்ளவில்லை. இந்த பாதிப்பால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆராய்ந்து பார்க்கையில் பல அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்தன. குறிப்பாக தோல் துறை, இறைச்சி ஏற்றுமதி, பால் உற்பத்தி என மூன்று முக்கியத்துறைகள் இந்த உத்தரவால் பாதிக்கப்படப் போகிறது.

அழிவில் தோல் துறையா?

கிராமங்களிலிருந்து இரண்டாம் நிலை நகரத்துக்கு வருபவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை வழங்குவது தோல் துறை. கிட்டத்தட்ட 25 லட்சம் பேர் இந்தத் துறையில் பணிபுரிந்து வருகின்றனர். இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு ஏற்கெனவே விதித்த தடையால் பல்வேறு இறைச்சி கூடங்கள் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் பல இறைச்சி கூடங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த இறைச்சி கூடங்களை முழுவதும் நம்பியிருந்த தோல் தொழிற்சாலைகள் முடங்கியது. கிட்டத்தட்ட 4,00,000 ஊழியர்களுக்கு வேலை பறிபோகியுள்ளது. இவர்கள் அனைவருமே தினக்கூலிகள். அதுமட்டுமல்லாமல் தோல் தொழிற்சாலைகள் செயல்படாததால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு ஏற்றுமதி மதிப்பு 590 கோடி டாலரிலிருந்து 567 டாலராக குறைந்திருக்கிறது. இதில் வேடிக்கை என்னெவென்றால் 2020-ம் ஆண்டில் 900 கோடி அளவுக்கு ஏற்றுமதியை உயர்த்த திட்டமிட்டுருப்பதாக மத்திய அரசின் இணையதளம் கூறுகிறது. மூலப் பொருள் தோல் இல்லாமல் எப்படி தோல் ஏற்றுமதியை அதிகப் படுத்தமுடியும்?

இறைச்சி ஏற்றுமதி சரிவு

மாட்டிறைச்சி உற்பத்தியில் இந்தியா சர்வதேச அளவில் 4-வது இடத்தில் உள்ளது. வியட்நாம், மலேசியா, சவூதி அரேபியா, எகிப்து போன்ற நாடுகளுக்கு அதிக அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் தாத்ரி சம்பவத்தை தொடர்ந்து 2015-ம் ஆண்டில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் கடும் சரிவு ஏற்பட்டது. இதை உலக சுகாதார அமைப்பும் சுட்டி காட்டியது. மேலும் கடந்த நிதியாண்டில் (2015-16) 332 கோடி டாலர் அளவுக்கே மாட்டிறைச்சி ஏற்றுமதி நடந்துள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டில் 415 கோடி டாலருக்கு ஏற்றுமதி நடந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் மாட்டிறைச்சி தொடர்பான பிரச்சினைகளால் 60 கோடி டாலர் ஏற்றுமதி பாதிக்கப் பட்டிருக்கிறது.

அதேபோல 2011-ம் ஆண்டில் 20 லட்சம் டன்னாக இருந்த மாட்டிறைச்சி நுகர்வு 2016-ம் ஆண்டில் 25 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் உள்நாட்டு மாட்டிறைச்சி வர்த்தகம் சிறப்பான முறையில் நடந்துவந்தது. ஆனால் தற்போதைய உத்தரவால் மாட்டிறைச்சியை விற்பதற்கே பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மாட்டிறைச்சி வைத்திருப்பதற்காக தாக்கப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இவையெல்லாம் வர்த்தக ரீதியில் ஏற்பட்ட பாதிப்புகள். ஆனால் இந்த தடை சாமானியனை நேரடியாக பாதிக்கும். எப்படியென்றால் இந்திய கிராமங்களில்தான் மாடுகள் எண்ணிக்கை அதிகம். இவர்கள் பெரும்பாலும் நடுத்தர மற்றும் அதற்கு கீழ் நிலையைச் சார்ந்தவர்கள். இவர்களின் பொருளாதார நடவடிக்கையில் மாடுகள் பெரும் பங்கு வகித்து வருகிறது. இவர்கள் வளர்க்கு பசுவுக்கு அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரைதான் அதனுடைய கறவை காலம். அதன் பிறகு அந்த பசுவை விற்று அதன் மூலம் கொஞ்சம் பணம் ஈட்ட முடியும். ஆனால் இந்த தடையின் காரணமாக அந்த கதவையும் சாத்தியுள்ளது மத்திய அரசு.

அதாவது இறைச்சிக்காக விற்பனை செய்ய முடியாத போது பசுவை பராமரிக்க வேண்டிய நிலை இவர்களுக்கு ஏற்படும். அந்த பசுவுக்கு வாழ்நாள் முழுவதும் தீவனம் வாங்கி போடவேண்டும். அதை பாதுகாக்க வேண்டும். அந்த பசுவின் மூலம் ஈட்டிய வருமானத்தை பசுவுக்கே செலவிட வேண்டிய நிலைமை ஏற்படும். உதாரணமாக 70 சதவீத பஞ்சாப் விவசாயிகள் நிலமில்லாதவர்கள். ஆனால் அவர்களுடைய முழுநேரத் தொழில் கால்நடை வளர்ப்பு மட்டுமே. அவர்கள் வருமானத்தை பார்க்க வேண்டுமா? இல்லை வாழ்நாள் முழுவதும் கால்நடைகளை பராமரிக்க வேண்டுமா?

தற்போதைய நிலை

இறைச்சிக்காக மாடுகளை விற்கத்தடை உத்தரவுக்கு தற்போது உச்ச நீதிமன்றம் தடைவிதித்திருக்கிறது. ஆனால் நிலைமை பல இடங்களில் சீரடையவில்லை. மத்திய அரசும் இறைச்சிக்காக மாடுகளை விற்பது சார்ந்த கொள்கைகளில் மாற்றங்கள் கொண்டுவருவதாக உச்ச நீதிமன்றத்திடம் கூறியிருக்கிறது. எப்படியோ ஒரு வகையில் இதை அமல்படுத்த வேண்டும் பிரதமர் மோடி முனைப்பு காட்டி வருவது அப்பட்டமாக தெரிகிறது.

மாடு அதன் சார்ந்த பொருளாதார நடவடிக்கைகள் என்பது தொடர் சங்கிலி போன்றது. மாட்டை வளர்ப்பவர் தொடங்கி மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்பவர் வரை அந்த சங்கிலி நீண்டுள்ளது. இதில் ஏதேனும் ஒரு இடத்தில் விடுபட்டாலும் கூட மொத்த பொருளாதார நடவடிக்கையும் அழிந்துவிடும். அதிலும் குறிப்பாக சாமானியர்கள் வாழ்வாதாரம் மிக அதிகமாக பாதிக்கப்படும். பிரதமர் மோடி இந்திய பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதை யில் அழைத்துச் செல்கிறேன் என்று தொடர்ந்து பேசி வருகிறார். சாமானியர்களின் வாழ்வாதாரத்தை அழித்து விட்டு யாருக்கான வளர்ச்சியை மத்திய அரசு கொண்டுவரப்போகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x