Published : 25 Jul 2016 12:08 PM
Last Updated : 25 Jul 2016 12:08 PM
கோவையில் வசித்து வருகிறார் செரியன். கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர். பொள்ளாச்சியில் விவசாய பண்ணையும், கோவை சரவணம்பட்டியில் தொழில் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். ‘தொழில் நிறுவனம் என்று சொல்வதை விட, எனது கனவு என்று சொல்லுங்கள்’ என்று குறிப்பிடுகிறார். நுண்ணுயிர் தொழில்நுட்பத்தின் மூலம் கழிவு மேலாண்மை முறையில் இயற்கை உரங்கள் தயாரித்து வரும் இவரது அனுபவம் இந்த வாரம் ’வணிக வீதி’யில் இடம் பெறுகிறது.
கோட்டயத்தில் ஒரு கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். விவசாயக் குடும்பம் என்பதால் அது சார்ந்த வேலைகளும் எனக்கு அத்துபடி. தவிர நான் படித்ததும் உயிரித் தொழில்நுட்ப (பயோடெக்னாலஜி) பட்டம்தான். எனவே அதை சார்ந்த முயற்சிகளையும் விவசாயத்தில் மேற்கொள்ள ஆர்வமாகவே இருந்தேன். ஆனால் அப்போதைய சூழ்நிலை காரணமாக கல்லூரியில் பேராசிரியராக வேலை கிடைத்தது.
அப்போது எனது நண்பர்கள் சிலர் பொள்ளாச்சி பக்கம் இருந்தனர். அவர்களை சந்திக்க அடிக்கடி செல்வேன். தவிர செல்லும்போதெல்லாம் பொள்ளாச்சி அருகில் சில தரிசு நிலங்கள் விலைக்கு கிடைக்க அதை வாங்கினேன். அப்போது அந்த தரிசு நிலங்கள் உடனடியாக பயிர் செய்ய முடியாத நிலைமையில்தான் இருந்தது. ஏனென்றால் அந்த மண்ணின் தரம் அப்படி. எனக்கு பயோ டெக்னாலஜி குறித்த அனுபவமும், ஆர்வமும் இருந்ததால் நுண்ணுயிர்கள் மூலம் அந்த மண்ணின் தரத்தை மேம்படுத்தத் திட்டமிட்டேன். அப்போது பொள்ளாச்சி பக்கம் தேங்காய் மட்டைகளில் இருந்து கயிறுக்கு நார் எடுத்த பிறகு கிடைக்கும் கழிவை குப்பைக்குத்தான் போடுவார்கள். எதற்கும் பயன்படுத்தாமல் குப்பைகளோடு சேர்ந்து எரித்து விடுவார்கள். இப்போதுதான் ‘பித்’ என்கிற வகையில் அது மதிப்புக் கூட்டப்பட்டு விற்கப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு அது குப்பைதான். அவற்றை தென்னை விவசாயிகளிடமிருந்து வாங்கி வந்து நிலங்களில் பரப்பி அதற்கு சில நுண்ணுயிர்கள் மூலம் செறிவூட்டினேன்.
அதன் பிறகு எனது நிலங்கள் பயிர் செய்வதற்கு ஏற்றதாக மாறியது. அந்த நிலங்களில் நான் பயிர் செய்யத்தொடங்கியதும், அக்கம் பக்கம் உள்ள நிலத்துக்காரர்களும் என் தொழில்நுட்பத்தைப் பார்த்து என்னை அணுகத் தொடங்கினர். அவர்களுடன் குழுவாகச் சேர்ந்து முயற்சிகளை மேற்கொண்டதில் இந்த தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்த முடிந்தது.
இந்த நிலையில் எனது விவசாய ஆர்வம் காரணமாகவும், நுண்ணுயிர் தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் காரணமாகவும் கல்லூரி வேலையை விட முடிவு செய்தேன். வீட்டில் ஏற்றுக் கொள்ளவில்லை. வேண்டாத வேலை என்றனர். ஆனால் நான் வேலையை விடுவதில் முடிவாக இருந்தேன். அதற்கு பிறகு கோவை வேளாண்மைக் பல்கலைக் கழகத்தில் இயற்கை கழிவுகள் மேலாண்மையில் ஆராய்ச்சி படிப்புக்குச் சேர்ந்தேன்.
எனது நிலத்தின் நுண்ணுயிர் ஊட்டங்களுக்கு எடுத்த முயற்சிகளை வைத்து, அதிலிருந்து இயற்கை உரங்கள் தயாரித்து அவற்றை விற்பனை செய்யவும் முயற்சிகளை மேற்கொண்டேன். அது வியாபார ரீதியாக வெற்றிபெற்றது. அதற்கான ஏற்றுமதி வாய்ப்புகள் வந்தது. மேலும் நிலத்தில் விளைவதை விற்பனை செய்யவும் விவசாயிகள் குழுவாக சேர்ந்து இயங்கத் தொடங்கினோம். இதற்காக தனி நிறுவனமாகவும் பதிவு செய்தோம்.
இதற்கிடையே கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உயிரி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி செய்த எனது நண்பர் தமிழ்ச்செல்வனோடு சேர்ந்து வேறு சில இயற்கை நுண்ணுயிர் உரங்களைத் தயாரிக்கவும் இறங்கினோம். எனது இந்த முயற்சிகள் வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கோவைக்கே குடும்பத்துடன் வந்துவிட்டேன்.
கழிவு மேலாண்மை என்கிற தொழில்நுட்பம் இப்போதுதான் பரவலாக கவனம் பெற்று வருகிறது. இதன் மூலம் சுற்றுச் சூழலையும் பாதுகாக்க முடியும். கோழி இறைச்சி கழிவைக்கூட நாற்றம் இல்லாமல் மக்க வைத்து தரமான உரத்தை தயாரிக்க முடியும்.
இப்போது எனது பண்ணையில் மட்டுமல்லாமல், இயற்கை நுண்ணுயிர் தயாரிப்பிலும் சேர்த்து 30 பேர் வேலைபார்க்கிறார்கள். இந்த தொழில்நுட்பத்தை பலருக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். எனக்கு பிடித்தமான வேலையை, நான் உருவாக்கிய சூழலிலிருந்தே மேற்கொள்ளும் வாய்ப்பை விட வேறென்ன சந்தோஷம் இருக்க முடியும். இதுதான் வாழ்க்கையின் அர்த்தமாக உணர்கிறேன் என்றார்.
நல்ல செயல்களுக்கு எங்கும் எப்போதும் வரவேற்பு கிடைக்கட்டும்.
எனக்கு பயோ டெக்னாலஜி குறித்த அனுபவமும், ஆர்வமும் இருந்ததால் நுண்ணுயிர்கள் மூலம் அந்த மண்ணின் தரத்தை மேம்படுத்தத் திட்டமிட்டேன்.
தொடர்பிற்கு maheswaran.p@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT