Published : 04 Jul 2016 10:17 AM
Last Updated : 04 Jul 2016 10:17 AM

பருவமழை நம்பிக்கை: களைகட்டும் டிராக்டர் உற்பத்தி

அனைவருக்கும் உணவளிக்கும் விவசாயத் துறை அதிக வேலை வாய்ப்பை அளிக்கும் துறையாக இருந்தாலும், விவசாயத் துறையைச் சார்ந்து பல துறைகளும் வளர்கின்றன. இந்த ஆண்டு பருவ மழை எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு விவசாயிகளை மட்டுமல்ல அது சார்ந்த பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விவசாயத்துறையில் ஆள் பற்றாக்குறை காரணமாக நவீன தொழில்நுட்பம் பின்பற்றப்படுவதால் ஆட்டோமொபைல் துறை இந்த செய்தியால் மகிழ்ச்சியடைந்து விவசாய உபகரணங்கள் தயாரிக்கும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

குறிப்பாக டிராக்டர் தயாரிக்கும் நிறுவனங்கள் இந்த ஆண்டு 8 சதவீத அளவுக்கு வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டின் பல பகுதிகளில் நிலவிய வறட்சி காரணமாக சோர்ந்து போயிருந்த டிராக்டர் விற்பனை இந்த ஆண்டு அமோகமாக இருக்கும் என்று எஸ்கார்ட்ஸ் நிறுவனம் நம்புகிறது. எஸ்கார்ட்ஸ் நிறுவனம் ஆண்டுக்கு ஒரு லட்சம் டிராக்டர்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இந்த நிறுவனத்தின் 80 சதவீத வருமானம் டிராக்டர் விற்பனை மூலம் கிடைக்கிறது. இந்நிறுவனம் விவசாயப் பணிகளுக்கென பன்முக டிராக்டர்களை தயாரிக்கிறது. இத்தகைய பன்முக டிராக்டர்களின் விற்பனை 10 சதவீத அளவுக்கு சமீபகாலமாக வளர்ச்சியடைந்துள்ளது.

30 முதல் 45 குதிரைத் திறன் கொண்ட சிறிய ரக டிராக்டர்களையும் இந்நிறுவனம் தயாரிக்கிறது. இவற்றுக்கு சிறிய விவசாயிகளிடம் வரவேற்பு இருப்பதால் ஆண்டுக்கு 11 சதவீத வளர்ச்சியை இந்த ரக டிராக்டர்கள் எட்டி வருகிறது.

இதேபோல டிராக்டர் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜான் டீர் நிறுவனமும் டிராக்டர் விற்பனை அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறது. இந்நிறுவனம் 35 முதல் 75 குதிரைத் திறன் (ஹெச்பி) கொண்ட டிராக்டர்களைத் தயாரிக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த இந்நிறுவனம் ஆண்டுக்கு 70 ஆயிரம் டிராக்டர்களைத் தயாரிக்கிறது. இதில் 35 முதல் 45 ஹெச்பி வரையிலான டிராக்டர்கள் அதிகம் விற்பனையாகின்றன. அடுத்து 50 ஹெச்பி-க்கு மேலான டிராக்டர் பிரிவில் இந்நிறுவனத் தயாரிப்புகள் முன்னிலையில் உள்ளன.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டாலும் அண்டை நாடுகளுக்கும் இங்கிருந்து இந்நிறுவனம் ஏற்றுமதி செய்கிறது. கடந்த 13 ஆண்டுகளாக இந்நிறுவனம் டிராக்டர் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஓராண்டில் இந்நிறுவனம் 5.25 லட்சம் டிராக்டர்களை விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் 4.8 லட்சம் டிராக்டர்களே விற்பனையாகியுள்ளது. இந்த ஆண்டு 12 சதவீதம் முதல் 15 சதவீத அளவுக்கு இத்துறை வளர்ச்சி இருக்கும் என்று டிராக்டர் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

டிராக்டர் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கும் அதே சமயம் டிராக்டர்களுக்கு உபகரணங்களை சப்ளை செய்யும் நிறுவனங்களும் அதிக வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிராக்டர்களில் பயன்படுத்தப்படும் மோட்டார் தயாரிக்கும் ஆட்டோ லே நிறுவனம் 10 சதவீத வளர்ச்சியை எதிர்பார்க்கிறது. கடந்த சில மாதங்களாகவே விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டதாக கூறுகிறார் ஆட்டோ லே நிறுவனத்தின் தலைவர் மோகன் நாராயணன். பருவ மழை எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும்பட்சத்தில் வளர்ச்சி 7 சதவீதம் முதல் 10 சதவீத அளவுக்கு இருக்கும் என இவர் உறுதியாக நம்புகிறார். கடந்த ஆண்டு ரூ. 205 கோடியாக இருந்த விற்பனை வருமானம் இந்த ஆண்டு ரூ. 230 கோடியைத் தொடும் என்கிறார்.

இந்நிறுவனம் ஆண்டுக்கு 5.8 லட்சம் ஸ்டார்ட்டர் மோட்டார் மற்றும் 2.7 லட்சம் ஆல்டர்நேட்டர்களைத் தயாரிக்கிறது. டிராக்டர்களில் பயன்படுத்தப்படும் 2.2 கிலோவாட் முதல் 3.2 கிலோவாட் திறன் கொண்ட ஸ்டார்ட்டர் மோட்டார்களைத் தயாரிக்கிறது. இவை 25 ஹெச்பி முதல் 75 ஹெச்பி திறன் கொண்ட டிராக்டர்களுக்கு ஏற்றது. ஆல்டர்நேட்டர்களைப் பொறுத்தவரை 23 ஆம்பியர் முதல் 90 ஆம்பியர் வரையிலானவற்றைத் தயாரிக் கிறது. இந்நிறுவனம் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டஃபே, எஸ்கார்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங் களுக்கு மோட்டார்களை சப்ளை செய்கிறது.

விவசாயத்துறையின் நேரடி பலன் பலருக்கு வேலை வாய்ப்பு, பிரதானமாக நாட்டுக்கு உணவு வழங்குவது என்றிருந்தாலும் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கும் இன்றியமையாத பங்களிப்பை அளிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

விவசாயத்துறையின் நேரடி பலன் பலருக்கு வேலை வாய்ப்பு, பிரதானமாக நாட்டுக்கு உணவு வழங்குவது என்றிருந்தாலும் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கும் இன்றியமையாத பங்களிப்பை அளிக்கிறது. இந்த ஆண்டு குறிப்பாக டிராக்டர் தயாரிக்கும் நிறுவனங்கள் 8 சதவீத அளவுக்கு வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x