Published : 29 May 2017 10:56 AM
Last Updated : 29 May 2017 10:56 AM
“வேகம் விவேகம் அல்ல’’ என்ற வாசகம் எல்லாம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது மறைந்துவிடும். சீரான நெடுஞ்சாலையைப் பார்க்கும் போது வலது கால் தன்னிச்சையாக அதிகமாக ஆக்சிலேட்டரை அழுத்தும். இப்படிப்பட்ட சாலையிலுமா கட்டை வண்டி மாதிரி உருட்டுவது என்பதோடு, நகர்ப்புற நெரிசலில் இருந்து விடுபட்ட போது நெடுஞ்சாலையில் வாகனங்கள் சீறிப் பாய்வது தவிர்க்க முடியாதது.
நெடுஞ்சாலைகளில் ஏற்படும் பெரும் பாலான விபத்துகளுக்குக் காரணமே அதிக வேகம்தான். இதைக் கட்டுப் படுத்துவதற்காக வாடகைக் கார்களில் கட்டாயம் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தவேண்டும் என்ற விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. இதனாலேயே கார் விற்பனை பாதித்துள்ளது என்றால் நம்புவது கொஞ்சம் சிரமமாக இருக்கும்.
ஆமாம், டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெரு நகரங்களில் உள்ள சாலை போக்குவரத்து அதிகாரிகள் (ஆர்டிஓ) வேகக் கட்டுப்பாட்டு கருவி இல்லாத வாகனங்களை பதிவு செய்வதற்கு மறுத்துவிட்டனர். இம்மாத தொடக்கத்தில் மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் பிறப்பித்த புதிய சாலை விதிகளின்படி டாக்ஸி கார்களை பதிவு செய்ய மறுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு இந்தியாவில் 30 லட்சம் கார்கள் விற்பனையாகின. இவற்றில் 9% தனியார் கார் உரிமையாளர்கள், அதாவது பயண ஏற்பாட்டு நிறுவனங் கள் வாங்கியவையாகும். அதிக எண் ணிக்கையில் கார்களை தயாரிக்கும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் விற்பனை 6% பாதித்துள்ளது.
டாக்ஸி மற்றும் சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்களான உபெர், ஓலா ஆகிய நிறுவனங்கள் வாங்கும் கார்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்பு வேகக் கட்டுப்பாட்டு கருவி வர்த்தக வாகனங்களுக்கு மட்டுமே கட்டாயமாக இருந்தது. தற்போது டாக்ஸி, சுற்றுலா கார்களுக்கும் கட்டாய மாக்கப்பட்டுள்ளது.
ஹோண்டா நிறுவனத்தின் அமேஸ் இப்பிரிவினர் அதிகம் தேர்வு செய்யும் காராகும். ஐந்து கார்களில் ஒரு கார் வாடகை பிரிவினர் வாங்குவதாகும். இதனால் இந்நிறுவன விற்பனையும் தேங்கியுள்ளது.
2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம் பிறப்பித்த உத்தரவு கனரக வாகனங்களுக்கு மட்டுமே வேகக் கட்டுப்பாட்டு கருவியை கட்டாயமாக்கி யிருந்தது. அப்போது வாடகை கார் களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் கர்நாடக உயர் நீதிமன்றம் வாடகைகார்களுக்கு இவ்விதம் விலக்கு அளித்தது சட்ட விரோதம் என கருத்து தெரிவித்திருந்தது. இதையடுத்து தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம் புதிதாக ஒரு வழிகாட்டுதலை இம்மாதத் தொடக்கத்தில் வெளியிட்டது.
மோட்டார் வாகன சட்டத்தில் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொறுத்த வேண்டியது வாடகை கார்களுக்கும் அவசியம் என தெரிவிக்கப்பட்டிருந் தது. இதைத் தொடர்ந்து சாலைப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு இது தொடர்பான உத்தரவு பிறப்பிக் கப்பட்டது. இதன்படி வேகக் கட்டுப் பாட்டுக் கருவி இல்லாத வாடகை கார்களை பதிவு செய்யக்கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகத்துடன் கார் தயாரிப்பு நிறுவனங்கள் பேச்சு நடத்தி இந்த உத்தரவை தள்ளி வைக்குமாறு கோரியிருந்தன.
கார்களுக்கான வேகக் கட்டுப்பாட்டு கருவியை வாங்கி பொருத்துவதற்கு கால அவகாசம் அளிக்கவேண்டும் என கோரியிருந்தன. ஆனால் ஆர்டிஓ அலுவலகங்கள் பதிவு செய்யாததால் விற்பனை சிறிது பாதிக்கப்பட்டதாக ஹூண்டாய் நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிறுவனத்தின் எக்ஸென்ட் செடான் வகையை பெருமளவிலான வாடகை கார் நிறுவனங்கள் வாங்குகின்றன. அமைச்சகத்தின் இந்த உத்தரவுக்கு பெரும்பாலான நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதோடு, இக்கருவியைப் பொருத்துவதால் கூடுதலாக ரூ. 10 ஆயி ரம் செலவாகும் என தெரிவித்துள்ளன.
2015-ம் ஆண்டில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 1.46 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்திய சாலைகளில் நாளொன்றுக்கு 1,374 விபத்துகள் நிகழ்வதாகவும் இதனால் தினசரி 400 பேர் உயிரிழப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி கணக்கிட்டால் ஒரு மணி நேரத்தில் 57 விபத்துகளால் 17 பேர் உயிரிழக்கின்றனர் என்ற தகவல் நிச்சயம் அனைவரையும் பதைபதைக்கச் செய்யும்.
சாலை விபத்துகளைக் குறைக்க அரசு எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் எதிர்ப்பு வலுத்தால் மனித உயிருக்கு மதிப்பில்லை என்று அர்த்தமாகிவிடும்.
அடுத்தபடியாக இந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தயாராகும் அனைத்து கார்களிலும் உயிர் காக்கும் ஏர் பேக் அவசியம் இடம் பெற வேண்டும் என்று அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஏர் பேக் சம்பந்தமான உத்தரவை கார் தயாரிப்பு நிறுவனங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். பயணிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு உறுதுணை யாக இருப்பதும் சமூக பொறுப்புணர்வே என்பதை வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் உணர வேண்டும்.
- ramesh.m@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT