Published : 22 May 2017 09:34 AM
Last Updated : 22 May 2017 09:34 AM

வானகிரை வைரஸ்... இணையத் தீவிரவாதம்

கடந்த ஒரு வாரத்தில் உலகம் முழுவதையும் பெரும் அச்சத்தில் ஆழ்த்திய மிகப் பெரிய அச்சுறுத்தல் வானகிரை ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதல். உலகம் முழுவதும் சுமார் 3 லட்சம் கணினிகளை முடக்கியுள்ளது இந்த வைரஸ் சாஃப்ட்வேர். முன்னெப்போதும் இல்லாத வகையில் நிகழ்த்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதலை இணையத் தீவிரவாதம் என்றே குறிப்பிடுகின்றனர் தொழில்நுட்பத் துறையினர். இந்த வானகிரை ரேன்சம்வர் வைரஸ் தாக்குதலுக்கு இங்கிலாந்து, இந்தியா, ஸ்பெயின் ரஷியா, சீனா உள்ளிட்ட முக்கிய நாடுகள் உள்பட 100க்கு மேற்பட்ட நாடுகள் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.

வட கொரியா அணு ஆயுத தாக்குதல் தொடுக்கப் போகிறது என உன்னிப்பாக கவனித்து வந்த உலகத்துக்கு இணையத்திலிருந்து நிகழ்த்தப்பட்ட இப்படியான தாக்குதல் எதிர்பாராத அதிர்ச்சியை அளித்துள்ளது. இங்கிலாந்தின் மருத்துவமனை தகவல்கள் முடக்கப்பட்டுள்ளன. அதனால் நோயாளிகளுக்கு உரிய மருத்துவம் அளிக்க முடியவில்லை. கேரளாவின் பஞ்சாயத்து அலுவலக கணினி முடக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில், திருப்பதி கோயிலில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் என ஒவ்வொரு நாளும் தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்கள்தான் இந்த வானாகிரை தீவிரவாதிகளின் இலக்காக உள்ளது. ஏனென்றால் இதைக் கொண்டு அவர்கள் பணம் பறிக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்தியாவில் இதுவரையில் 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த ரேன்சம்வர் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக வானகிரை ரேன்சம்வேர் வைரஸ் வகைகளில் இந்த ஆண்டில் இதுவரை 79 வகை வைரஸ்கள் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 58 சதவீத தாக்குதல்கள் மின்னஞ்சல்கள் மூலம் நடந்துள்ளதாகவும் தெரிகிறது.

முடக்கப்பட்ட கணினியில் உள்ள பைல்களை அன்லாக் செய்ய 300 டாலர் வரை பிட்காயினாக செலுத்த குறிப்பிட்டுள்ளனர். 3 நாட்களுக்குள் இதை செலுத்தவில்லை எனில் தொகையை இரண்டு மடங்காகவும் உயர்த்துகின்றனர். பணம் வரவில்லை என்றால் கோப்புகளை அழிக்கப்போவதாகவும் அச்சுறுத்துகின்றனர். இதனால் தொழில்நுட்ப உலகம் பல கோடிகளை இழந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் ஹேக்கர்களின் கணக்கில் பணத்தைச் செலுத்தும் ஒவ்வொரு முறையும் அதை டிவிட்டரிலும் வெளியிட்டு வருகின்றனர்.

கணினிகளையும், தனிநபர்களின் தகவல்களையும் குறிவைத்து இணையத் தாக்குதல்கள் நீண்ட காலமாகவே நடந்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாகத்தான் ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதலும் நிகழ்த்தப்பட்டுள்ளது. அதாவது ஏற்கெனவே நிகழ்த்தப்பட்டு வரும் இணையத் தாக்குதல்கள் போலவே இதுவும் குறிப்பிட்ட நபர்களை, நிறுவனங்களை குறிவைத்து நிகழ்த்தப்படுகின்றன. ஆனால் இதுவோ முன்பு இருந்ததைவிடவும் ஆபத்தான வைரஸாக இருக்கிறது. இதற்கு முன்பு நிகழ்த்தப்பட்டுள்ள தாக்குதல்களைவிட வானகிரை ரேன்சம்வேர் வைரஸ் வித்தியாசமாக செயல்படுகிறது என்கின்றனர் தொழில்நுட்ப வல்லுநர்கள்.

ஏனென்றால் இதற்கு முன்பு இணையத் திருடர்கள் ஒருவருடைய கணினியை ஹேக்கிங் செய்கிறார்கள் என்றால், அந்த கணினியில் சேமிக்கப்பட்டுள்ள விவரங்களிலிருந்து சம்பந்தப்பட்டவருடைய வங்கிக் கணக்கு விவரங்களை திருடுவார்கள். அதனைப் பயன்படுத்தி அவரது வங்கிக் கணக்கிலிருந்து இணையம் வழியாகவே பணத்தை டிரான்ஸ்பர் செய்து கொள்வார்கள். ஆனால் இந்த வழியாக ஹேக்கிங் செய்வது அவர்களுக்கு ஆபத்து நிறைந்தது. ஹேக்கிங் முறையை கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும், பணப் பரிமாற்றம் செய்த விவரங்களைக் கொண்டு குற்றவாளிகளைப் பிடித்துவிடமுடியும். ஆனால் ரேன்சம்வேர் அப்படி அல்ல. நமது தவறிலிருந்தே வைரஸ் நமது கணினியை தாக்கும். அதாவது நமது ஆசையைத் தூண்டும் விதமாக முதலில் மின்னஞ்சல் வரும். நாம் சில நேரங்களில் ஏமாந்து அதனை திறந்துவிட்டால் போதும். இந்த வைரஸ் தனது வேலையைக் காட்டத் தொடங்கிவிடும். முதலில் கணினியை நாம் பயன்படுத்த முடியாத வகையில் லாக் செய்யும். அடுத்ததாக ஹேக்கர் தொடர்பு கொண்டு பணத்தைக் கேட்பார். அவர்கள் குறிப்பிடும் கணக்கிற்கு பிட்காயினாக செலுத்த வேண்டும். பிட்காயின் கணக்கு யார் பெயரில் இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. எல்லாமே ரகசியம். நிறுவனங்களில் ரகசிய தகவல்கள் மட்டுமல்ல, தனிநபர்களின் தகவல்கள், அந்தரங்க விவரங்கள் அனைத்தும் இப்போது மின்னணு மயமான நிலையில் பணம் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு உலகம் தள்ளப்பட்டுள்ளது.

இந்த ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதலுக்கு காரணமாக அமைந்தது என அமெரிக்காவின் என்எஸ்ஏ-வை கைகாட்டுகின்றனர் தொழில்நுட்ப உலகினர். இந்த அமைப்பு உருவாக்கிய இணையத் தாக்குதல் சார்ந்த குறியீடுகள் ஹேக்கர்களுக்கு கசிந்துள்ளது என குற்றம் சாட்டுகின்றனர். இதனை பயன்படுத்தி வானகிரை, வானகிரைப்டர் மற்றும் வானகிரைப் என பல்வேறு பெயர்களில் வைரஸ்களை உருவாக்கியுள்ளனர். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இயங்குதளத்தை குறிவைத்துதான் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. என்எஸ்ஏவின் குறியீடுகள் கடந்த ஆண்டே கசிந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இது தொடர்பாக என்எஸ்ஏவை குற்றம் சாட்டியுள்ளது.

தற்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மிக தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது. இந்த தாக்குதலை தடுக்கும் விதமாக இயங்குதளத்தில் மேலும் பாதுகாப்பு அம்சங்களை கொண்டுவர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மென்பொறியாளர் நீல் மேத்தா இந்த தாக்குதலை வடகொரியாவுடன் தொடர்புபடுத்துகிறார். இந்த வைரஸின் பயன்படுத்தப்பட்டுள்ள குறியீடுகள் ஏற்கெனவே வடகொரியாவைச் சேர்ந்த ஹேக்கர்கள் பயன்படுத்தியதுபோல உள்ளன என்று இவர் குறிப்பிடுகிறார். ஆனால் இந்த இணையத் தீவிரவாதிகளின் பணம் கேட்டும் மிரட்டும் செய்தி நேரடியானதாக இல்லை. இயந்திர மொழிபெயர்ப்பு போல் இருப்பதாக குறிப்பிடுகிறார் பாதுகாப்பு நிபுணரும், பேராசிரியருமான ஆனல் உட்வார்ட்.

சைபர் பாதுகாப்பை உறுதிபடுத்த நாடுகள் புதிய சட்டங்களை கொண்டுவர வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டுள்ள மைக்ரோசாஃப்ட், குற்றச் செயல்களுக்கு ஆயுதங்களை பயன்படுத்தினால் என்ன சட்டமோ, அதை சைபர் குற்றங்களுக்கும் அமல்படுத்த வேண்டும் என உலக நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளது. சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொருவருக்கும் ஆதரவாக இருப்போம் என்கிறார் மைக்ரோசாஃப்டின் தலைமைச் சட்ட அதிகாரி பிராட் ஸ்மித். வானகிரை ரேன்சம்வேர் தாக்குதலில் கடந்த வாரத்தில் மட்டும் லண்டன், நியூயார்க், மாஸ்கோ, புதுடெல்லி, பெய்ஜிங் என பல நகரங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் இதற்கு எதிராக உலக நாடுகளில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தேவை என்றும் கூறியுள்ளார்.

இதற்கு முன்பு நடைபெற்றுள்ள வைரஸ் தாக்குதல்களின் போதெல்லாம் அவற்றிலிருந்து பாதுகாக்கும் மென்பொருள்களின் வர்த்தகமும் அதிகரித்து வருகின்றன. ஒரு மென்பொருளை உருவாக்கும் பொறியாளருக்கு உள்ள தொழில்நுட்ப திறனைப் போலவே, அதை அழிக்கும் வைரஸை உருவாக்கும் பொறியாளருக்கும் தேவையாக உள்ளது. தங்களது மிக சிறந்த திறமைகளை அழிவு வேலைகளுக்கு பயன்படுத்துவது கிட்டத்தட்ட மனித சமூகத்தின் வளர்ச்சிக்கு எதிரானதுதான். இந்த தீவிரவாதத்தை தொழில்நுட்ப துறையினர், வாடிக்கையாளர்கள், அரசுகள் என எல்லோரும் ஒரு அணியில் இணைந்துதான் முறியடிக்க முடியும்.

வானகிரை வைரஸ் தாக்குதல் சமூகத்தின் மீது நேரடியாக போர் தொடுக்கிறது. அதாவது நம்மை களத்துக்கு அழைக்கிறது. முகம் தெரியாத இந்த இணையத் தீவிரவாதத்துக்கு எதிராக நாம் எச்சரிக்கையோடு இருப்பது மட்டுமல்லாமல், அதை முறியடிக்கும் தொழில்நுட்பங்களில் ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டிய காலத்தில் உள்ளோம் என்பதும் உண்மை.

நீரை மகேந்திரன், maheswaran.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x